நவதிருப்பதி திருத்தலங்கள் – ஓர் பார்வை… வைணவ கோவிலிலும் நவக்கிரகங்கள்… எங்குள்ளன தெரியுமா?

பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ தலமான மதுரை கூடலழகர் கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும்…

Srivai Kallapiran koil

பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம்.

வைணவ தலமான மதுரை கூடலழகர் கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகத்தில் பெருமாளின் அவதாரங்களைக் கிரகங்களுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.

Madurai Koodal Azhagar
Madurai Koodal Azhagar

அதன்படி, ராமாவதாரம் – சூரியன், கிருஷ்ணாவதாரம் – சந்திரன், நரசிம்மவதாரம் – செவ்வாய், கல்கி அவதாரம் – புதன், வாமனவதாரம் – குரு, பரசுராமாவதாரம் – சுக்ரன், கூர்மவதாரம் – சனி, மச்சாவதாரம் – கேது, வராகவதாரம் – ராகு, பலராமவதாரம் – குளிகன் என அவதாரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும், நவகிரக தலங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

கள்ளபிரான் சுவாமி கோயில் (ஸ்ரீவைகுண்டம்)

சூரிய தலமான இக்கோயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு தல மூர்த்தியாக கள்ளபிரான் (ஸ்ரீவைகுண்டநாதர்) எழுந்தருளியுள்ளார். தல இறைவியாக வைகுந்த நாயகியும் (கள்ளர்பிரான் நாச்சியார், சோரநாத நாயகி) உள்ளனர். தல தீர்த்தமாக தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம் ஆகியவை உள்ளன.

விஜயாசன பெருமாள் (வரகுணமங்கை)

சந்திர தலமான இக்கோயில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தல மூர்த்தியாக விஜயாசனர் (வெற்றிருக்கைப் பெருமாள்), தல இறைவியாக வரகுணவல்லி, வரகுணமங்கையும் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள தல தீர்த்தம் தேவபுஷ்கரணி, அக்னி தீர்த்தம்.

வைத்தமாநிதி பெருமாள் (திருக்கோளூர்)

Thirukolur Vaithamanithi Perumal
Thirukolur Vaithamanithi Perumal

செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 கி.மீ. தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 கி.மீ. தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 கி.மீ. வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 கி.மீ. சென்றால், இந்த திருக்கோளூர் தலத்தை அடையலாம்.

தல மூர்த்தியாக வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனத்தில் அதாவது கிழக்கு பார்த்த முகத்துடன் வீற்றிருக்கிறார். தல இறைவியாக கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார் ஆகியோர் உள்ளனர். இங்குள்ள தல தீர்த்தம் குபேர தீர்த்தம், தாமிரபரணி.

காய்சினவேந்தப் பெருமாள் கோயில் (திருப்புளியங்குடி)

புதன் தலமான இக்கோயில், திருநெல்வேலியில் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தல இறைவனாக காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனத்தில் வீற்றிருக்கிறார். இங்குள்ள உற்சவர் எம் இடர் களைவான். தல இறைவியாக மலர்மகள், திருமகள் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். உற்சவத் தாயாராக புளியங்குடிவல்லி வீற்றிருக்கிறார். இங்கு காணப்படும் தல தீர்த்தம் வருணநீருதி தீர்த்தம்

ஆதிநாதர் ஆழ்வார் கோயில் (ஆழ்வார் திருநகரி)

குரு தலமான இக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தல இறைவனாக ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் நின்ற கோலத்தில் கிழக்கு பார்த்த முகத்துடன் எழுந்தருளியுள்ளார்.
தல இறைவியாக ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித்தனி சன்னதி உள்ளது.) இங்குள்ள தல தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை.தல விருட்சம்: உறங்காப்புளி

மகரநெடுங்குழைக்காதர் கோயில் (தென்திருப்பேரை)

Magaranedunkulaikkathar
Magaranedunkulaikkathar

சுக்ரன் தலமான இக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில் சுமார் 35 கி.மீ. தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

தல இறைவனாக மகரநெடுங்குழைக்காதர் அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு பார்த்த முகத்துடன் எழுந்தருளியுள்ளார். உற்சவராக நிகரில் முகில் வண்ணன் இருக்கிறார்.

தல இறைவியாக குழைக்காதவல்லியும், திருப்பேரை நாச்சியாரும் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள தல தீர்த்தம் சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்.

வேங்கடவானன் கோயில் (திருக்குளந்தை)

சனி தலமாக விளங்கும் இக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 38 கி.மீ. தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தல இறைவனாக வேங்கடவானன் எழுந்தருளியுள்ளார். உற்சவராக மாயக்கூத்தன் இருக்கிறார். தல இறைவியாக குளந்தைவல்லி, அலமேலுமங்கை எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள தல தீர்த்தம் பெருங்குளம்.

திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் கோயில்

(இரட்டை திருப்பதி)

ராகு தலமான இக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், சுமார் 39 கி.மீ. தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தல இறைவனாக தேவர்பிரான் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு பார்த்த முகத்துடன் எழுந்தருளியுள்ளார். தல இறைவியாக உபய நாச்சியார்கள்எ எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள தல தீர்த்தம் வருண தீர்த்தம், தாமிரபரணி.

திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் கோயில் (இரட்டை திருப்பதி)

கேது தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், சுமார் 39 கி.மீ. தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தல இறைவனாக அரவிந்த லோசனர் அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு பார்த்த முகத்துடன் எழுந்தருளியுள்ளார். உற்சவராக செந்தாமரைக்கண்ணன் வீற்றிருக்கிறார். தல இறைவியாக கருத்தடங்கண்ணி எழுந்தருளியுள்ளார். இங்குள்ள தல தீர்த்தம் வருணை தீர்த்தம், தாமிரபரணி.

ஒரே நாளில் தரிசனம்

Map
Map

நவதிருப்பதி ஆலயங்களை ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவகிரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும், இந்த நவதிருப்பதி தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு  உள்ளது.

அது அந்தந்த கோயில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து, காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தென்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம், அனைத்து கோயில்களையும் தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.

குடந்தை நவதிருப்பதி தலங்கள்

இதுபோல, நவதிருப்பதி தலங்கள் திருநெல்வேலிக்கு அருகில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்ல, நமது பெருமைமிகு கோயில் நகரமான கும்பகோணத்தைச் சுற்றிலும் நவதிருப்பதி தலங்கள் அமைந்துள்ளன.

Sarangapani Koil
Sarangapani Koil

அவை, திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோயில் – சூரியன் தலமாகவும், நந்திபுர விண்ணகரம் (ஸ்ரீநாதன் கோவில்) – சந்திரன் தலமாகவும், நாச்சியார்கோவில் – செவ்வாய் தலமாகவும், திருப்புள்ளம் பூதங்குடி – புதன் தலமாகவும், திருஆதனூர் – குரு தலமாகவும், திருவெள்ளியங்குடி – சுக்கிரன் தலமாகவும், ஒப்பிலியப்பன் கோயில் – சனி தலமாகவும், கபிஸ்தலம் – ராகு தலமாகவும், ஆடுதுறை பெருமாள் கோயில் – கேது தலமாகவும் உள்ளது. இவை அனைத்தும் ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.