கோடி புண்ணியம் கிடைக்க வேண்டுமா? அப்படின்னா இந்தக் கதையைக் கேளுங்க…!

By Sankar Velu

Published:

தற்போது நவராத்திரி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நன்னாளின் 4ம் நாள் இன்று. நாம் அனுதினமும் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும் என்பதைத் தான் நவராத்திரி நாள் தொடர்ந்து வந்து நமக்கு அறிவுறுத்துகிறது.

கொலு வைப்பது, காலை, மாலை விளக்கேற்றி வழிபடுவது, காலை மாலை என இருவேளைகளிலும் குளித்து இறைசிந்தனையோடு விபூதி, சந்தனம், குங்குமம் இடும் பக்தர்களைப் பார்க்க பார்க்க பரவசமாக இருக்கும்.

நவராத்திரியில் நாம் கேட்க வேண்டிய முக்கியமான கதைகளில் ஒன்று போஜராஜன் கதை. அம்பிகையை எவ்வாறு வழிபடுவது என்று சொல்லித் தருகிறது இந்தக் கதை.

போஜராஜன் அஷ்ட லட்சுமிகளின் சௌகரியத்தோடு வாழ்ந்துக்கிட்டு இருக்காரு. அவர்களும் அவருக்குக் கட்டுப்பட்டு அவருக்கு வேண்டிய சுகபோகங்களை வழங்கிக்கிட்டு இருக்காங்க. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.

‘ஒருவர் ஒரு லட்சுமி வரவழைப்பதே இயலாத காரியமாக உள்ளது. இவர் எப்படி அஷ்டலட்சுமிகளும் இவருடன் வாசம் செய்கிறார்கள்?’ என்று அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் போஜராஜனின் வழிபாட்டு முறை தான்.

ஒரு முறை அவரது வழிபாட்டு பலன்கள் முடிந்து அஷ்டலட்சுமிகளும் கிளம்பத் தயாராக இருந்தார்கள். தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்ல முடிவு செய்கிறார்கள். அவர்கள் போஜராஜனிடம் போய் சொல்லி விட்டு செல்லலாம் என்று நினைக்கிறார்கள்.

‘இத்தனை காலம் நீ செய்த வழிபாட்டின் பலனாக உன்னோடு இருந்தோம். இப்போது இங்கிருந்து கிளம்பப் போகிறோம். போவதற்கு முன்னால உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள். கொடுக்கத் தயாராக இருக்கிறோம்’ என்றார்கள். அதற்கு போஜராஜன் ‘எனக்கு எதுவுமே வேண்டாம். இத்தனை காலம் நீங்கள் இருந்ததே போதும். உங்களுடைய ஆசிகளை மட்டும் கொடுங்கள். அதுவே போதும்’ என்கிறார்.

ஒவ்வொரு லட்சுமியிடமும் இதையே தனித்தனியாகக் கேட்டு ஆசிகளையும் பெற்றுக் கொள்கிறார். 7 லட்சுமிகளைக் கடந்து 8வதாக தைரிய லட்சுமியிடம் போகிறார் போஜராஜன். ‘என்ன வரம் வேண்டும் கேள்’ என்கிறார் தைரிய லட்சுமி.

‘நீ மட்டும் நிரந்தரமாக எங்கிட்டேயே தங்கி விடு’ என்கிறார். ‘அப்படியே ஆகட்டும்’ என்று தைரியலட்சுமியும், போஜராஜனுடன் நிரந்தரமாகத் தங்கி விடுவதாக வரம் கொடுக்கிறாள். அடுத்த நாள் பூஜைக்குத் தயாராகிறார் போஜராஜன்.

அங்கு அஷ்டலட்சுமிகளுமே வந்து நிக்கிறாங்க. ‘என்ன ஆச்சரியம்? நேற்றே நீங்க கிளம்புகிறோம் என்றீர்களே’ என போஜராஜன் 7 லட்சுமிகளைப் பார்த்துக் கேட்கிறார். அதற்கு அவர்கள் ‘நீதானே தைரிய லட்சுமி உன்னுடனே இருக்கணும்னு வரம் கேட்டாய். அதனால் தான் நாங்களும் வந்துருக்கோம்’ என்றார்கள்.

அப்போதும் விடாமல் போஜராஜன், ‘நான் தைரிய லட்சுமியை மட்டும் தானே கேட்டேன்’ என்று சொல்கிறார். அதற்கு அவர்கள் ‘மற்ற லட்சுமி போய்விட்டால் நாங்கள் அவர்களுடனே சென்று விடுவோம். ஆனால் தைரிய லட்சுமி எங்கே இருக்கிறாரோ நாங்களும் அங்கு தான் குடி இருப்போம்’ என்கிறார்கள்.

Pojarajan
Pojarajan

நாம் எப்போதும் இறைவனிடம் வேண்டும் போது மகாலட்சுமி வர வேண்டும். செல்வம் சேர வேண்டும் என்று தான் வேண்டுகிறோம். ஆனால் தைரியலட்சுமி எங்கே இருக்காளோ அங்கு தான் மற்ற லட்சுமிகளும் இருப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்டு வேண்ட வேண்டும்.

இதைத் தான் நவராத்திரி கதை நமக்கு உணர்த்துகிறது. இந்தக் கதையைக் கேட்டாலே நமக்குக் கோடி புண்ணியம் என்கிறார்கள். நினைத்த காரியம் நடக்க எப்படி வழிபட வேண்டும் என்பதைத் தான் இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.

ஒருவருக்கு தைரியம் இருக்கும்பட்சத்தில் அவர் யாருக்காகவும் கூனிக் குறுகி நிற்க வேண்டிய அவசியமில்லை. போலியாய் கும்பிடு போட வேண்டியத் தேவையில்லை. தைரியமாக தன் கருத்தை முன்வைத்துப் பேச முடியும். அப்போது தான் அவர்களிடம் உண்மையும், நேர்மையும் இருக்கும். மற்ற எல்லா நற்குணங்களும் அஷ்டலட்சுமிகள் போல வந்து சேரும்.