நவராத்திரியில் விரதம் அவசியமா? பண்டிகைகளின் நோக்கம்தான் என்ன?

By Sankar Velu

Published:

பண்டிகைகள் தான் நமது வாழ்வியலில் ஒருவித ஒழுக்கத்தைக் கட்டிக் காக்கின்றன. பொதுவாக புரட்டாசி மாதத்தில் அசைவம் கூடாது என்பார்கள். அது ஒரு மூட நம்பிக்கை அல்ல. அதில் அறிவியலும் கலந்துள்ளது. அதாவது அந்த மாதத்தில் அசைவம் சாப்பிட்டால் உடலில் சீரணக்கோளாறு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

பருவ காலம் மாறும் நேரம் என்பதால் உடலுக்கு எளிய வகை உணவுகள் தான் கொடுக்க வேண்டும் என்கின்றனர் அறிவியலாளர்கள். அதே போல இதை நாம் ஏன் வெறும் ஆன்மிகம், மூட நம்பிக்கை என்று புறம் தள்ள வேண்டும்? அதிலும் ஒரு ஆழமான அறிவியல் இருக்கத் தானே செய்கிறது.

நம் முன்னோர்கள் அப்படித்தான் ஒவ்வொரு பண்டிகையையும் வடிவமைத்துள்ளார்கள். இப்போது நவராத்திரி காலம். இந்த நாள்களில் நாம் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.

தென் மாவட்டங்களில் குலசை தசரா பிரசித்திப் பெற்றது, இந்த நவராத்திரி காலகட்டத்தில் பக்தர்கள் அம்மனுக்காக விரதம் இருந்து தினமும் காலை, மாலை என இருவேளை குளித்து பூஜை செய்து வழிபடுகின்றனர். பொதுவாக இந்தக் காலகட்டங்களில் இரு வேளை குளிப்பது உடல் சூட்டைத் தணிக்கிறது. உடலுக்கும் ஒரு புத்துணர்வைத் தருகிறது. அதிலும் தினமும் அதாவது இந்த 9 நாள்களும் நாம் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும் என்ற ஒரு உந்துதலையும் உண்டாக்குகிறது.

தினமும் பக்தர்கள் காவி உடை அணிந்து காலை, மாலை இருவேளை குளியல் போட்டு எப்போதும் நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் தரிப்பதைப் பார்க்கும்போது பரவசம் உண்டாகிறது. நாமும் அப்படி இருக்கலாமே என்று ஒரு ஆர்வம் உண்டாகிறது. அது மட்டுமல்லாமல் அம்மனுக்காக விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வேஷம் போடுகின்றனர்.

dasara
dasara

அந்த வேஷம் போட்டு தெருக்களில் காணிக்கை எடுக்கும்போது அவர்களது அகங்காரம் அழிகிறது. புதிய சிந்தனை பிறந்து செயலில் ஒரு தெளிவைக் கொடுக்கிறது. அனைவரிடமும் இணக்கமாகப் பழகும் சூழல் மற்றும் சிந்தனையை வளர்க்கிறது.

பொதுவாக நம் நாட்டில் தான் பண்டிகைகள் அதிகமாகக் கொண்டாடப்படுகிறது. பழமையான கலாச்சாரம், பண்பாடுகள் நிறைந்தது நாம் நாடு தான். அவற்றில் ஒன்றுதான் இந்த நவராத்திரி.

உலகில் எங்கெல்லாம் இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் வெகுவிமரிசையாக பண்டிகைகளைக் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தியும், பஜனையும், பாடலும், நடனமும், பூஜையும் என இவ்விழாக்கள் யாவும் களைகட்டுகின்றன. அன்னை மகாசக்திக்கான இந்த 9 நாட்களும் அவ்வளவு சிறப்பானவை. இந்தப் பாரம்பரிய பண்டிகையின் பெரும் அடையாளம் கொலு வைப்பது. அதே போல கூட்டு வழிபாடு நவராத்திரிக்கே உரிய சிறப்பு.

கொலு வைக்க சாஸ்திர சம்பிரதாயம் ஆயிரம் இருந்தாலும் அந்த தத்துவம் எளிதானது. பொதுவாக கோவில்களின் அமைப்பு தத்துவம் பார்க்க பார்க்க ஆவலைத் தூண்டக்கூடியது. அதில் ஆன்மிகமும் கலந்து இருப்பதால் நமக்குள் இருக்கும் ஞானத்தைத் தூண்டி விடுகிறது. குறிப்பாக, கோபுரங்களில் இடைவெளி இல்லா அளவு சிலைகளும், கோவிலினுள் தூணிலும் கதவிலும் இன்னும் திரும்பும் இடமெல்லாம் தெய்வ உருவங்களையும் பார்க்க நமக்குள் பேரானந்தம் வரும்.

இது எதற்காக வைத்து இருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்தால் அதிலும் ஒரு அர்த்தம் இருக்கத தான் செய்கிறது. அதாவது நமக்குள் இடைவிடாமல் இறை சிந்தனை இருக்க வேண்டும் என்பதற்காகவே கோவிலில் ஒரு அடிக்கு ஒரு சிலை என தூண்களிலும், அதன் பிரகாரங்களிலும் அமைத்துள்ளார்கள்.

கொலுவின் தத்துவமும் அதேதான் என்று சொல்லலாம். இந்த 9 நாட்களும் இறை சிந்தனை நல்லோர் சிந்தனை எப்போதும் இருக்கவேண்டும் என்பதற்காகத் தான் கொலு வைத்துள்ளார்கள்.

இந்த ஒன்பது நாட்கள் முழுக்க முழுக்க அந்த மகா சக்திக்கானது. எங்கு திரும்பினாலும் அம்பாளின் நினைவுடன் இருந்து அவளது அருளைப் பெற வேண்டும். அதற்கான உகந்த காலம் இதுதான். இந்த 9 நாளும் அந்த மகா காளிக்குரியது.

ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவு, செல்வம், வீரம் என மூன்றும் அவசியம், மனிதனின் தொழில் இந்த மூன்றில் ஒன்று இல்லாமல் இல்லை. இந்த மூன்றும் கலக்காமலும் இல்லை. அதனால் ஒவ்வொரு இந்துவும் இந்த நாட்களில் விரதம் இருப்பது சிறப்பு. ஒருவேளை உணவினை மட்டும் இந்த 9 நாட்கள் எடுத்துகொண்டால் ஒன்றும் குறைந்துவிடாது.

கர்ப்பிணிகள், நோயாளிகள், மிக வயதானவர்கள் தவிர மற்றவர்கள் விரதம் இருக்கலாம். குறைந்தபட்சமாக பகல் பொழுதில் மட்டுமாவது இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூட இந்த விரதத்தைத் தவறாமல் ஆண்டு தோறும் கடைபிடித்து வருகிறார். நமக்கெல்லாம் முன்மாதிரியாக இருப்பதால் நாமும் தவறாமல் விரதத்தைக் கடைபிடித்து அம்மனின் அருளைப் பெற்று வாழ்வில் நலம் பல பெறுவோம்.