பிள்ளை சரஸ்வதி தேவியின் கடாட்சம் பெற தன் உயிரையேப் போக்கிய தியாகத் தாய்..! பெண்கள் ஒற்றைக்காலில் நிற்கலாமா..?

By Sankar Velu

Published:

இன்று (22.10.20203) நவராத்திரியின் 8ம் நாள். ஒரு அருமையான கதையைப் பார்க்கலாம்.

நளச்சக்கரவர்த்திக்கு நிறைய வரலாறு உண்டு. அதை எழுதிய ஹர்ஷர் பற்றிப் பார்க்கலாம்.  ஸ்ரீஹீரர் என்ற புலவர் ஒருவர் மன்னரிடத்தில் அரசவையில் இருக்கிறார். மற்றொரு நாட்டு புலவர் போட்டிக்கு அழைக்கிறார்.

அப்போது ஸ்ரீஹீரர் தோற்று விடுகிறார். இதற்கு மேல் இந்தத் தோல்வியைத் தாங்கிக் கொண்டு உயிர் வாழக்கூடாது என்று தன்னை மாய்த்துக் கொள்கிறார்.

Narasimma Tharani
Narasimma Tharani

அவருக்கு மாமல்லதேவி என்ற மனைவியும், குழந்தையும் இருக்கு. ஆனால் அப்போது இருந்த உடன்கட்டை ஏறுதலைத் தன் குழந்தைக்காகத் தவிர்க்கிறார். இந்தக் குழந்தையை ஒரு ஞானவானாக ஆக்க வேண்டும் என்று ஒரு வைராக்கியம் ஏற்படுகிறது.

சரஸ்வதி தேவியின் சிந்தாமணி மந்திரம் சொல்லிக் கொடுக்கிறார். இரவு பகல் என்று அந்தக் குழந்தை அதைப் படிப்படியாகக் கற்றுக் கொள்கிறது.

இந்த மந்திரத்தை 12 ஆண்டுகள் இடையறாது ஜெபிக்கிறவர்களுக்கு சரஸ்வதி தேவி வந்து காட்சி கொடுப்பாள். இந்த மந்திரத்திற்கு இன்னொரு சிறப்பும் இருக்கு. யார் ஒருவர் எந்த வித பயமும் இல்லாமல் நடு இரவில் பிணத்தின் மீது அமர்ந்து இந்த மந்திரத்தை விடாமல் சொல்கிறார்களோ அவர்களுக்கு உடனடியாக சரஸ்வதி தேவி காட்சி கொடுக்கிறாள்.

இதற்காக அந்தத் தாய் தன் குழந்தைக்குப் பயிற்றுவிக்கிறாள். குழந்தை நன்றாக இந்த மந்திரத்தைக் கற்றதும் அந்த நாள் வருகிறது. அப்போது தன் வீட்டில் உள்ள எல்லா விளக்கையும் அணைக்கிறாள் அந்தத் தாய். ஒரு கூரிய வாளை எடுத்து தன் அருகில் வைத்துக் கொண்டு படுத்து விடுகிறாள்.

அப்போது தன் குழந்தையை அழைத்து தன் மேல் உட்கார வைத்துக் கொண்டு அந்த மந்திரத்தைச் சொல்ல வைக்கிறாள். குழந்தையும் தாய் மீது தானே அமர்ந்து கொண்டு சொல்கிறோம் என்று கண்ணை மூடிக் கொண்டு மந்திரத்தை இடைவிடாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறது. அப்போது விளக்கை அணைத்த அந்தத் தாய் தன் கழுத்தை கூரிய வாளால் எந்தவித பதட்டமும் இல்லாமல் அறுத்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.

இப்போதும் அந்தக் குழந்தை தாய் இறந்தது கூட தெரியாமல் அந்த மந்திரத்தை கண்ணை மூடிக் கொண்டு சொல்லிக் கொண்டே இருக்கிறது. எவ்வளவு தியாகம் பாருங்கள் அந்தத் தாய்க்கு?! இப்போது மந்திரம் சொல்லி முடித்த அந்தக்குழந்தையின் முன் 1000 கோடி சூரியப் பிரகாசத்துடன் சரஸ்வதி தேவி வந்து காட்சி தருகிறாள்.

அப்போது தன் தாய் இறந்து கிடந்ததையும், தன் முன்னே சரஸ்வதி தேவி நிற்பதையும் பார்க்கிறது அந்தக் குழந்தை. அப்போது சரஸ்வதி தேவி, குழந்தாய், உனக்கு என்ன வரம் வேண்டும். கேள் என்கிறாள். உடனே அந்தக் குழந்தை சற்றும் தாமதிக்காமல் என் தாய் மறுபடியும் உயிருடன் எழுந்து வர வேண்டும் என்று கேட்கிறது.

சரஸ்வதி தேவியும் அவ்வாறே செய்கிறாள். அதுமட்டுமல்லாமல் சரஸ்வதியின் கரங்களாலேயே அந்தக் குழந்தையின் நாக்கில் ஓம் என்ற பிரணவ மந்திரமும் எழுதப்படுகிறது. ஞானவானாக நீ வருவாய் என ஆசிர்வதித்து விட்டுச் செல்கிறாள் சரஸ்வதி தேவி.

அந்தக் குழந்தை தான் பிற்காலத்தில் மிகப்பெரிய ஞானவானான ஸ்ரீஹர்ஷர். நளச்சரித்திரத்தை எழுதியவர் இவர் தான். இவர் சரஸ்வதி தேவியின் அருளைப் பெற்றவர். அந்த அருளை நாமும் பெற்று நலமுடன் வாழ்வோம்.

Mochai payaru
Mochai payaru

இன்று அம்பிகையின் பெயர் நரசிம்மதாரணி. ரோஜா மலர், மருதாணி இலை அர்ச்சனை. திராட்சைப்பழம், பால் சாதம் நைவேத்தியம். இன்று படையலுக்கு மொச்சைப் பயறு சுண்டல் சிறந்தது. புன்னக வராளி ராகத்தில் அமைந்தப் பாடல்களைப் பாடலாம். இப்படி வழிபட்டால் நமக்கு கஷ்டங்கள் நீங்கி இஷ்;டசித்திகள் உண்டாகும்.

அந்தக் காலத்தில் அடுப்படியில் உட்கார்ந்து கொண்டு பெண்கள் சமைத்தார்கள். இப்போது எல்லா வேலைகளையும் நின்றபடியே செய்ய வேண்டி உள்ளது. அதனால் கால் வலிக்கும் போது ஒரு காலைத் தூக்கி இன்னொரு கால் மேல் வைத்துக் கொள்வார்கள். பெண்களும் சரி. ஆண்களும் சரி. வீட்டில் ஒற்றைக்காலில் நிற்கக்கூடாது.

அம்பிகை ஒரு காலில் நின்று வைராக்கியத்தில் இருந்து தவம் செய்து இறைவனை அடைந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் தான் நின்றாள். அதே போல் நாமும் நின்றால் ஒற்றைக்காலில் பிடிவாதமாக இருக்கிறாள் என்பார்கள். அதனால் தான் கிராமத்தில் பொம்பளைப் பிள்ளை ஒற்றைக்காலில் நிற்கக்கூடாது. வீட்டுக்கு ஆகாது என்பார்கள்.

உடலில் உள்ள எல்லா எடையையும் சமமாகத் தாங்குவதற்குத் தான் 2 கால்கள் உள்ளன. ஒற்றைக்காலில் நின்றால் அது உடலில் சீக்கிரத்திலேயே இடுப்பு எலும்பைப் பாதித்து கை, கால்களில் வலி ஏற்படக் காரணமாகிறது. அதனால் பெண்கள் ரொம்பக் கஷ்டமாக இருந்தால் அந்த வேலையை செய்யாதீர்கள். நமக்கும், குடும்பத்துக்கும் பிரச்சனையை வரவழைத்து விடாதீர்கள்.