நவராத்திரி 6ம் நாளில் மகாலெட்சுமியை வழிபடும் நிறைவு நாள் (01.10.2022) தான் இது. இன்று அம்பிகைக்கு சண்டிகா என்று பெயர். நவதுர்க்கையில் இன்று கார்த்தியாயினி என்று பெயர்.
இதன் பொருள் என்னவென்றால் கார்த்தியாயன முனிவர் தவம் செய்து அம்பிகையே தனக்கு குழந்தையாக வர வேண்டும் என்று வேண்டினார். அதன்படி அவருக்கு அம்பிகையே வந்து பிறந்ததால் கார்த்தியாயினி என்ற பெயர் வந்தது. இந்த அம்பிகை வேண்டும் வரங்களைத் தரும் தேவியாகவே காட்சி தருகிறாள்.
இந்த சண்டிகா என்ற ரூபமே மகிஷாசுரமர்த்தினியாக வந்தது. அவளே கார்த்தியாயினியாக இன்று காட்சி தருகிறாள். தீமை புரிகின்ற தீயவர்களை எல்லாம் அழிக்கும் தேவியாக வருகிறாள். பாவச்செயல் செய்பவர்களையும், தீய சக்திகளையும் அழிக்கிறாள். இதன்மூலம் பக்தர்களை வாஞ்சையோடு காக்கிறாள்.
சண்டிகா, கார்த்தியாயினி என்ற திருநாமங்களில் நாம் வணங்கும்போது நமக்கு மேலும் மேலும் நன்மைகள் கிடைத்து வாழ்வில் மேலோங்கக்கூடிய தன்மையை அருள்கிறாள்.
இந்த அம்பிகைக்கு செம்பருத்தி மலர்களால் அல்லது சந்தன இலைகளால் அர்ச்சிக்கலாம். தேங்காய் சாதம், நார்த்தம்பழம், ஆரஞ்சுபழம், பச்சைப் பயிறு சுண்டல் ஆகியவற்றை செய்து நைவேத்தியமாக வைத்து பூஜை செய்யலாம். நீலாம்புரி ராகத்தில் பாட்டுப்பாடி கிளிப்பச்சை நிறத்தில் உடையணிந்து பூஜை செய்வது சிறப்பு.
நம் துயரங்கள், நோய்கள் நீங்கும். பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பல ஜென்ம பாவங்களை உணர்ந்து வெளிவர இந்த அம்பாளை உருகி பிரார்த்தனை பண்ணினால் போதும். யோகநிலையில் ஆக்ஞா சக்கரத்திற்கு உண்டான யோகபலன்களைத் தருகிறாள்.