மனிதனாகப் பிறந்து விட்டால் தோஷமே இல்லாதவர் என்று யாரும் இருக்க முடியாது. ஏதாவது ஒரு கிரகத்தோட தோஷம் ஜாதக லக்னப்படி அவர்களுக்கு இருக்கத் தான் செய்யும். இதன் படி, நாம் அதற்கு உண்டான பரிகாரத்தை செய்யாமல் அப்படியே இருந்துவிட்டால் பாதிப்பு ஏதாவது உண்டாகி விடும்.
அது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பண ரீதியாகவோ, விரயமாகவோ இருக்கலாம். இதற்கு என்னென்ன பரிகாரம் உண்டு? இத்தகைய தோஷங்களைப் போக்குவதற்கு என தலங்கள் ஏதேனும் உள்ளனவா என்று பார்ப்போம்.
சூரியன் வணங்கி வழிபட்ட, சென்னை செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு கோயிலில் அருளும் புஷ்பரதேஸ்வரரை தரிசித்தால் சூரியனால் உண்டான தோஷங்கள் விலகுகிறது.
கும்பகோணம் அருகேயுள்ள திருவையாற்றிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள திங்களூர் தல சந்திர பகவானை வணங்கினால் சந்திர கிரக தோஷங்கள் நீங்குகிறது.
மதுரையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள குருவித்துறையில் குரு பகவானையும் சித்திர ரதவல்ல பெருமாளையும் வழிபட்டால் குரு கிரக தோஷங்கள் நீங்கி குதூகல வாழ்வு கிட்டும்.
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பட்டீஸ்வரத்தில் அருளும் த்ரிபங்க நிலையில் உள்ள துர்க்காம்பிகையை உளமாற வழிபட்டால் ராகு கிரக தோஷங்கள் நீங்கிவிடும்.
64 திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டிய மதுரை சொக்கநாதப் பெருமாளை தரிசித்தால் புத கிரக தோஷங்கள் விலகியோடி பொன்னான வாழ்வு கிட்டும்.
சென்னை மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் தனிச் சந்நதி கொண்டிருக்கும் சரபேஸ்வரரை ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் பில்லி சூன்ய தோஷங்கள் விலகி ஓடும்.
ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி புரியும் ரங்கநாதப் பெருமானை வணங்கினால் சுக்கிர கிரக தோஷங்கள் தொலைந்து மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.
காஞ்சிபுரத்தில் அருளும் சித்ரகுப்தரை மனமுருக வேண்டினால் கேது கிரக தோஷங்கள் மறையும்.
மயிலாடுதுறை அருகேயுள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ள திருக்கொள்ளிக்காட்டில் அருளாட்சி புரியும் சனிபகவானை வணங்க சனி கிரக தோஷங்கள் சட்டென மறைந்து ஓடும்.
சென்னை அரக்கோணத்திற்கு அருகே தெற்கு நோக்கி தனிக்கோயில் கொண்டுள்ள வாராஹியை வணங்க, செவ்வாய் கிரக தோஷங்கள் தொலைந்து ஓடும்.
கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள ஐயாவாடி பிரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை தினத்தன்று செய்யப்படும் மிளகாய் வத்தல் யாகத்தில் கலந்துகொண்டால் மாந்தி, குளிகன் போன்றவர்களால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும்.