மார்கழி மாதம் என்று சொன்னாலே நம் மனதுக்கு இதமான மாதம் என்று தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். குளிர் நிறைந்த காலச்சூழல் நிலவும் மாதம். இது மனதுக்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் குளுமையான மாதம். 16.12.2024 முதல் 13.01.2025 வரை மார்கழி மாதம் உள்ளது.
கிருஷ்ணபரமாத்மாவும் மாதங்களில் நான் மார்கழி என்று சொல்லி இருக்கிறார். இந்த மாதம் ரொம்ப நல்ல மாதம் என்று சொல்கிறோம். ஒரு சிலர் இது பீடை மாசம், ஆகாத மாசம்னு சொல்றாங்க. ஆனா அப்படி கிடையாது. அப்படி இருந்தா இந்த மாசத்துல தான் சிவனுக்கு உகந்த திருவாதிரையும் வருகிறது. பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசியும் வருகிறது. இது வழிபாட்டுக்குரிய மாதம்.
இறைவனிடத்தில் எல்லா காலத்திலும் எல்லாவற்றையும் வேண்டலாம். அத்தனை நாள்களும் சிறப்பானதுதான். ஆனால் இதுல ஒரு சில நாள்கள் விசேஷமானது. தேவர்களுக்கு விடியற்காலை என்றால் அது இந்த மார்கழி மாதம்தான். காலைப்பொழுதுல எல்லாருக்குமே ஒரு மலர்ச்சி, சந்தோஷம் இருக்கும். அப்போது எழுந்தவர்களுக்கு இது தெரியும்.
மார்கழி மாதம் அதிகாலை 4 மணிக்கு எழுந்து பாருங்க. அது எவ்ளோ உன்னதமான அனுபவம் என்று தெரியவரும். தேவர்களுக்கு இது உன்னதமான மாதம். அதனால் அந்த மாதத்தில் தேவர்களுக்கு நாம் ஏதாவது வேண்டுதலை வைத்து வழிபட்டால் அது நிச்சயமாக நிறைவேறும்.
இந்த மார்கழி மாதத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் 3 தான். முதலில் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுங்க. சாணி வைத்து பூ வைக்கலாம். அப்படி சாணி கிடைக்காதவர்கள் வெறும் பூ வைக்கலாம். 2 அகல் விளக்கு ஏற்றி வையுங்க.
அகல்விளக்குல பஞ்சுதிரி போட்டு நல்லெண்ணை விட்டு விளக்கு ஏற்றுங்க. நல்ல செல்வம் கிடைக்கணும். சொந்த வீடு கட்டணும்னு உங்களோட பிரார்த்தனையை வச்சி வழிபடலாம். அதுக்கு அப்புறமா உங்க வேலையைப் பார்க்கலாம்.
அதனால இந்த மார்கழி மாதத்தில் 29 நாள்களும் இப்படி செய்து பாருங்க. காலையில் தான் கோலம் போடணும். ராத்திரியிலே கோலம் போட்டுட்டு விடியற்காலம் போட்ட மாதிரி காட்டக்கூடாது.
அகல்விளக்கு எரிந்து கருப்பாகிவிட்டால் 2 புது விளக்கு வைத்துக் கொள்ளுங்கள். 29 நாள்களும் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால் வீடும், மனசும் சந்தோஷமாக இருக்கும். மார்கழி மாதம் ஒரே ஒரு நாள் செய்ய வேண்டியதைப் பார்ப்போம். மார்கழி மாதத்தில் கோவிலில் தனுர் மாத அபிஷேகம் நடக்கும்.
அதுல ஏதாவது ஒரு நாள் அந்த பூஜையில் கலந்து கொள்ளுங்க. சின்ன சின்ன கோவில்ல கூட நடக்குற இந்தப் பூஜையில் கலந்து கொள்ளலாம். காலையில் நடக்கும் தனுர்மாத அபிஷேகம் பற்றிக் கேளுங்க. அதுக்கு 200 அல்லது 300 ரூபான்னு கோவிலைப் பொருத்து பூஜைக்கான செலவை சொல்வாங்க. அந்த தொகையைக் கட்டி அந்த அபிஷேகத்துல கலந்துக்கோங்க. அதுவும் முடியாதவர்கள் அந்த அபிஷேகம் நடக்கும்போது போங்க. ஒரு அரை லிட்டர் பால் வாங்கிக் கொடுங்க.
எல்லாருக்கும் வாய்ப்பு இருக்கு. அதை நாம தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். காலை அபிஷேகம்தான் விசேஷமானது. மார்கழி மாதத்தில் ஒரு நாள் மட்டும் இந்த அபிஷேகத்தை செய்தால் ஆண்டு முழுவதும் செய்ததற்கான பலன் கிடைக்கும்.
மூணாவது விஷயம் ரொம்ப எளிமையானது அன்னதானம். இந்த மார்கழி மாதத்தில் செய்யக்கூடிய அன்னதானம் ரொம்ப ரொம்ப விசேஷமானது. இப்படி நல்ல காலத்தில் நாம் செய்யக்கூடிய தர்மங்கள் ரொம்ப நல்ல பலனைத் தரும். அதனால தான் அந்தக் காலத்தில் இருந்தே சுண்டல், புளியோதரை, பாயாசம் கொடுப்பாங்க.
அதனால உங்களால முடிஞ்சதை செய்து கோவிலுக்கு வர்ற பக்தர்களுக்குப் பிரசாதமாக செய்து கொடுத்தால் அது உங்களுக்கு மிக உயர்ந்த பலனைத் தரும். இந்த 3 விஷயங்களையும் செய்து பாருங்க. இந்த ஆண்டு ரொம்ப வறுமையில் இருப்பவர்கள் அடுத்த ஆண்டு நல்ல செல்வ நிலைக்கு இறைவன் அழைத்துச் செல்வார்.
அதே போல மார்கழி மாதம் காலை திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாராயணம் பண்ணுங்க. வளைகாப்பு தவிர புதிதாக செய்யும் விஷயங்களை இந்த மார்கழியில் செய்ய வேண்டாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.