நாம் எல்லோரும் கோவிலுக்குச் செல்கிறோம். சாமி கும்பிடுகிறோம். உள்ளக்குமுறலை இறைவனிடம் கொட்டுகிறோம். ஆனால் எப்படி வணங்குகிறோம் என்று தெரியாமலேயே வணங்கிவிட்டும் வந்து விடுகிறோம்.
இறைவனை வணங்கும் முறை பற்றியும், மாணிக்கவாசகர், ஆண்டாள் பாடல்களைப் பற்றியும் இன்றைய மார்கழி 24 (8.1.2023) நாளில் பார்ப்போம்.
திருப்பள்ளியெழுச்சியின் நான்காம் நாள் பாடல் இது. இன்னிசை வீணையும் யாழினர் ஒருபால் என்று ஆரம்பிக்கிறது.
இந்தப்பாடலில் மாணிக்கவாசகர் ஆலயத்தில் பூஜை நடைபெறும்போது சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி விவரிக்கிறார். பெண்கள் அழகாக மாலைத் தொடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இறைவனைத் தொழக்கூடியவர்கள் ஒருபக்கம். அழக்கூடியவர்கள் ஒரு பக்கம். அழுகையை அதிகமாகி மயங்கிப் போகிறவர்களும் உண்டு. ஆடல், பாடல், இசை என அனைவருக்கும் இங்கு இடம் உண்டு. அவரவர் திறன்களை வெளிப்படுத்தி இறைவனை வணங்கி வருகின்றனர்.
கடவுளின் நாமத்தைக் கேட்கும்போதோ, இறைவனைப் பார்க்கும்போதோ நமக்கு ஆனந்தக்கண்ணீர் வருகிறது. இதைச் சொல்லவும், புரிந்து கொள்ளவும் ஒரு பக்குவம் வேண்டும். அப்போது தான் சொல்ல முடியும்.
இறைவனைப் பார்க்கும் போது பக்தர்கள் 2 வகையாக அழுகின்றனர். எனக்கு இப்படி குறை வச்சிட்டியே எனக் கேட்டு அழுவது ஒரு அழுகை. இறைவனைப் பார்த்ததும் வருவது ஆனந்த அழுகை. கடவுள் சன்னதியில் யார் அழுது வழிபடுகிறார்களோ அவர்கள் யார் முன்னிலையிலும் அழ வேண்டிய சூழ்நிலை வராது.
வள்ளலாரும் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே ஊற்றெழும் கண்ணீரினால் என இறைவனை வணங்கும்போது அழுது அழுது வழிபட்டு இருக்கிறார். இறைவனை வணங்கும்போது எழும் பேரின்பத்தை அனுபவமாக இன்னொருவரிடம் உணர வைக்க முடியாது.
செந்நியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் என்று மாணிக்கவாசகர் சொல்கிறார். கையைத் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டு வழிபடுங்கள் என்கிறார். ஆறு ஆதாரங்களையும் கடந்து பரவெளியில் அதற்கு மேல் உள்ள பரம்பொருளான இறைவனை வணங்க வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.
இறைவனைக் குனிந்து வணங்குவதே சாலச்சிறந்தது. இங்கு குனிந்தால் வெளியில் யாரிடமும் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை.
திருப்பெருந்துறை சிவபெருமானைத் தான் இப்படி எல்லாம் வணங்குவதாக மாணிக்கவாசகர் இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார்.
ஆண்டாள் இன்றைய பாடலில் அன்று இவ்வுலகைமளந்தாய் அடிபோற்றி என்று தொடங்குகிறார்.
இந்தப் பாடலில் எம்பெருமான் செய்த பல அவதார சாதனைகளை ஆண்டாள் போற்றிப் பாடுகிறார். வாமன அவதாரம், ராமர் அவதாரம் இவற்றைக் குறிப்பிடுகிறார். சீதாவை சிறை மீட்ட படலம் ராமாயணம்.
ராமனை கடவுளாகவும், சீதாவை ஆத்மாவாகவும் எடுத்துக் கொண்டால், சிறை போன்ற வாழ்க்கையில் இருந்து நம்மை மீட்பவர் ராமர் என்ற கடவுள் என்பதையே இந்தக் காவியம் நமக்கு உணர்த்துகிறது.
சீதையை சிறை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தை ராமர் பஞ்சவடியில் இருந்தே தொடர்ந்து கொண்டு வருகிறார். ஆஞ்சநேயர், சுக்ரீவன் உதவியால் பல இடங்களுக்குச் சென்று இறுதியில் சிறை மீட்கிறார்.
தன் கணவர் வந்து தான் தம்மைக் காப்பாற்ற வேண்டும் என்று வலிகளையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டு இருக்கிறார் சீதா. ஆஞ்சநேயர் அழைத்தும் அவர் வரவில்லை. தாயின் வயிற்றில் 10 மாதம் குழந்தை சிறையிருப்பதைப் போன்று இருக்கிறேன்.
இந்தத் தகவல்களை எல்லாம் அவரிடம் சொல்லிவிடு என்கிறார் சீதா. கண்ணனும் சிறைச்சாலையில் தான் அவதாரம் செய்கிறார். அந்தக் கண்ணனை நாம் வணங்கினால் நாமும் சிறைபட்டுக் கிடக்கும் துன்பங்களில் இருந்து விடுபட முடியும் என்கிறார் நாச்சியார்.
மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களில் இருந்து நான் இப்படித் தான் காப்பேன் என்று ஒரு உதாரண புருஷராகத் திகழும் கண்ண பரமாத்மாவின் வீர தீர பராக்கிரம செயல்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகிறார் நாச்சியார். அதனால் அவரிடம் நாம் சரணடைந்து விட்டால் எவ்வித துன்பங்களுக்கும் இடமில்லை என்கிறார் ஆண்டாள் நாச்சியார்.