எமனைக் காலால் எட்டி உதைத்தது சக்தியா….சிவமா?! காவலனிடம் பேசுவது எப்படி?

By Sankar Velu

Published:

இந்த வருடத்தின் கடைசி நாளான இன்றைய இனிய நாளில் மார்கழி 16 (31.12.2022) மாணிக்கவாசகர், ஆண்டாள் அருளிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.

முன்னிக்கடலை சுருக்கி என்று தொடங்குகிறது இன்றைய பாடல். இதில் மாணிக்கவாசகர் என்ன சொல்ல வருகிறார் என்று பார்க்கலாம்.

Markali 15 1
Markali 15

சுவாமிக்கு எவ்வளவு கருணை உண்டோ அதே போல அம்பாளுக்கும் கருணை உண்டு. அதைவிட ஒரு படி அதிகமாகவே உண்டு. பொதுவாகக் குழந்தைகளுக்கு அம்மாவைத் தான் மிகவும் பிடிக்கும். அதனால் அம்பிகையின் கருணைத்திறனை இங்கு மழையைப் போன்றவள்…மழைமேகம் போல கருத்தத் திருமேனியைக் கொண்டவள்.

அம்பிகையின் பெயர் சியாமளா. அப்படி என்றால் கருத்தத் திருமேனியை உடையவள். இவள் சுவாமியை விட வேகமாக வந்து கருணையைக் காட்டுவாள். கண்ணப்பர் இறைவனுக்குக் கண்ணைக் கொடுத்தார்.

அங்கிருந்து வேகமாக வருகிறார். ஒரு கண்ணில் இரத்தம் வழிந்து கொண்டு இருக்கிறது. அப்போது யாரோ ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. ஊன் கொடுத்தால் சரியாகி விடும் என்று. கண்ணுக்குக் கண் கொடுத்தால் சரியாகி விடும் என்று நினைத்தார். கொஞ்சம் கூட யோசிக்காமல் 16 வயதாகும்போதே தனது சுயநலம் பற்றி சிந்திக்காமல் அம்பைக் கொண்டு தன் கண்ணை எடுத்து இறைவனுக்கு வைத்தார். அப்போது பக்தி போய் அந்தக் கண்ணை இறுக்கிப் பிடித்துக் கொண்டதாம்.

இறைனிடத்தில் கொடுத்ததற்கு மகிழ்ச்சி. அங்கும் இங்கும் ஓடுகிறார். ஆடுகிறார். பாடுகிறார். அப்போது இன்னொரு கண்ணில் இருந்தும் ரத்தம் வழிகிறது. இந்தக் கண்ணையும் எடுத்துவிட்டால் சுவாமியைப் பார்க்க முடியாதே என்று தன் செருப்பு அணிந்த காலைத் தூக்கி நடுநெற்றியில் அடையாளமாக வைத்துக் கொண்டார்.

அந்த அம்பை எடுத்துக் கண்ணைப் பெயர்த்து எடுக்கப் போகின்ற வேளையில் வேகமாக கையைப் பிடித்து இழுத்தது. அந்தக் கை வளையல் போட்டு இருந்தது. நில்லு கண்ணப்பா…நில்லு கண்ணப்பா…என்று சுவாமி அழைக்கிறார். திண்ணப்பனாக இருந்தவரைக் கண்ணப்பன் என்று இறைவன் கூப்பிட்டு ஆட்கொள்கிறார்.

ஆனால் அந்தக் கண்ணைப் பறிப்பதற்கு முன் ஒரு கை வந்து வேகமாக வந்து பிடித்ததல்லவா அது தான் அம்பாள். சுவாமி தான் காப்பாற்றுவாரே…அதற்குள் அம்பாள் எதற்கு இவ்வளவு அவசரம் என்றால் எங்க சுவாமி வருவதற்குள் இந்தப் பிள்ளை அவசரமாகக் கண்ணைக் குத்தி எடுத்துவிட்டால் என்று பதறிப்போய் தாய்ப்பாசத்துடன் வேகமாக வந்துக் காப்பாற்றுகிறாள்.

எப்பவுமே பெண்களுக்கு இந்தப் பதற்றம் இருக்கும். எல்லாவற்றையும் சீக்கிரமாக செய்து விட வேண்டும் என்று. எம்பெருமான் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரராக எழுந்தருளி அருள்புரிகிறார். சாந்தமாக இருப்பவர் தான் அவர். காலனை வதம் செய்ததால் அவருக்குக் காலசம்ஹார மூர்த்தி என்றும் பெயர்.

Amirthakadeswarar
Amirthakadeswarar

மார்க்கண்டேயரைக் காப்பாற்றும் விதமாகவே இத்திருத்தலத்தில் எம்பெருமான் காலனை வதம் செய்கிறார் என்பது நாம் அறிந்ததே. 16 வயதே இவர் இருப்பார் என்ற நியதியுடன் வாழ்ந்து வருகிறார் மார்க்கண்டேயன். எவ்வளவு புத்திசாலித்தனம் அந்த வயதில் என்று பெற்றோர் வியந்தனர்.

ஆனால் அதே நேரம் இவர்களுக்கு நமது பிள்ளைக்கு ஆயுள் முடிந்துவிட்டதே என்று கவலை ஆட்கொண்டது. இதை அறிந்த மார்க்கண்டேயரும் பெற்றோர் வருத்தம் நீங்க சிவபெருமானைப் போய் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அப்போது எமன் அங்கு வந்து தன் கடமையை செய்ய பாசக்கயிற்றை சிறுவன் மீது வீசுகிறார்.

அது சிவனையும் சேர்த்து அணைத்துக் கொண்டது. அப்போது ஒரு கால் வந்து வேகமாக உதைத்தது. அப்போது எமன் பட்ட வேதனை சொல்லி மாளாது. அது சதங்கை அணிந்து இருந்த கால். இது இடதுகால். அதனால் அது அம்பிகையின் பாகம் தான். முதலில் வந்த கோபம் அவருக்கு தான். தன் கணவன் மீது எப்படி பாசக்கயிற்றை வீசுகிறார். அதன் பிறகு சுவாமி வந்து சம்ஹாரம் செய்கிறார்.

மழைமேகம் பார்வதி தேவி போல கருத்து இருந்து எங்களுக்கு மழையாகப் பெய்கிறது…அது கருணை மழை என்கிறார் மாணிக்கவாசகர்.

ஆண்டாள் இன்றைய பாடலில் நாயகனாய் நின்ற என்று தொடங்குகிறார்.

Aandal 15 1
Aandal 15

இந்தப்பாடலில் நாயகனாய் நின்ற நந்தகோபாலின் கோவிலைக் காப்பவனே என்று அந்த வாயிற்காவலனோடு பேசுவது போல் அமைந்துள்ளது.

நாங்க உள்ளே போய் கண்ணனைப் பார்க்க வந்துருக்கோம். இந்த நேரத்துல உள்ளே போக முடியாது என்று அபசகுணமாக சொல்லி விட வேண்டாம். நாங்கள் உள்ளே போவதற்கு அனுமதியைத் தர வேண்டும் என்கிறார் ஆண்டாள் நாச்சியார்.

இந்தப்பாடலில் தாத்பரியம் என்னவென்றால் நாம் பழகுபவர்கள்எ எப்போதும் நம்மை விட உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும். நம்மை விட கீழ்நிலையில் உள்ளவர்களாக இருக்கக் கூடாது.

ஆனால் ஆண்டாள் ஒரு வாயிற்காப்பாளனிடம் என்ன பேச்சு? அவர் காவலாளியிடம் கதவைத் திறக்க நயமாக பேசுகிறார் அல்லவா? அது அவசியம் தேவை. அதைத் தான் ஆண்டாள் நாச்சியார் இந்தப் பாடலில் காவலனும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நயமுடன் பேசி அவருக்குள்ளும் இறை உணர்வைத் தட்டி எழுப்புகிறார்.