மகாசிவராத்திரியில் 4 கால பூஜை உண்டு. அதிலும் 3ம் காலம் தான் லிங்கோத்பவர் காலம். இது சிவனுடனே எப்போதும் இருக்கும் சக்தி வடிவான பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜித்த காலம். இந்தக் காலத்தில் நாம் என்ன வேண்டினாலும் கிடைக்கும் என்பது ஐதீகம். தியானம் செய்து வழிபடுவதால் பலவித நன்மைகள் உண்டாகும். இதுதான் சிவராத்திரியிலேயே மிக முக்கியமான காலம். வாங்க எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாம்.
நோயாளிகள், கர்ப்பிணிகள் லிங்கோத்பவர் காலம் வரையாவது வழிபடலாம். அந்த நேரம் மிக முக்கியமான நேரம். அப்போது யாரும் தூங்கக்கூடாது. அடிமுடி காணாத அண்ணாமலையாராக சிவபெருமான் காட்சி கொடுத்த காலம் அதுதான். இந்த நேரத்தில் 12 மணிக்கு மேல 15 நிமிஷம் அமைதியாகத் தியானம் செய்யலாம். இது அதிசக்தி வாய்ந்ததாக இருக்கும்.
பிரபஞ்சம் முழுக்க பரவி இருக்கும் இறைவனின் அருளை நாம் ஈர்த்துக் கொள்ளலாம். இதன்மூலம் உடலையும், மனதையும் செம்மைப்படுத்தலாம். அந்தத் தியானம் இந்த லிங்கோத்பவர் காலத்தில் செய்தால் அற்புதமான ஆற்றலாக இருக்கும். இது பழகியவர்களுக்குப் புரியும். அதனால் இந்த நேரத்தில் தியானம் செய்பவர்கள் மறக்காம செய்து கொள்ளுங்கள்.
அதேபோல சிவராத்திரியை முன்னிட்டு கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும். இது மிக அற்புதமான பலன்களைப் பெற்றுத் தரும். பால், பழம், திருநீறு, ருத்ராட்சை கொடுக்கலாம். விரதம் நிறைவு செய்யும் மறுநாளும் அன்னதானம் செய்யலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
சிவராத்திரி அன்று கண்விழித்து இருக்கணும் என்பதற்காக ஜாலியாக பேசிக்கொண்டோ, விளையாடிக்கொண்டோ, சினிமா பார்த்துக்கொண்டோ இருக்காதீங்க. முழுக்க முழுக்க சிவனை நினைத்து அவருக்கே உரிய பாடல்களைப் பாராயணம் செய்தும், சொற்பொழிவு கேட்டும், பூஜையில் கலந்து கொண்டு இறைவனை மனமுருக வழிபடுங்கள்.