மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி 15.2.2026 அன்று வருகிறது. அன்று காலையில் உபவாசத்தை ஆரம்பித்து 16.2.2026 அன்று காலை 6 மணிக்குள் நிறைவு செய்யலாம். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு செய்து விட்டு தூங்கலாம். மவுன விரதமும் இருக்கலாம்.
காலையில் குளித்து விட்டு சிவலிங்கம் அல்லது சிவனின் திருவுருவப்படம் வைத்தால் அதற்கு பூஜை செய்து விரதத்தைத் துவங்கலாம். கர்ப்பிணிகள் விரதத்தைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் விரதத்தைத் தவிர்க்கலாம். வயோதிகர்கள் மருந்து சாப்பிட வேண்டியிருந்தால் விரதம் தேவையில்லை.
10வயதுக்கு மேல் ஆகும் குழந்தைகளுக்கு எளிமையான விரதம் இருக்கும் முறையைக் கற்றுக் கொடுத்து பால், பழம் கொடுத்து ஆரம்பிக்க வைக்கலாம். விரதம் ஆரம்பித்ததும் மாதவிடாய் ஆனால் விரதம் மட்டும் எடுங்க. கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய முடியாது. விரதம் இருப்பவர்கள் பிரசாதம் கொடுத்தால் சாப்பிடலாம். அதற்காக எப்பவும் பிரசாதமே சாப்பிட்டுக்கிட்டு இருக்கக்கூடாது.
முதல் காலம் பிரம்மதேவர் வழிபட்ட காலம். 7.30 மணிக்கு துவங்குகிறது. பால் அபிஷேகம், பாசிப்பருப்பு, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் சிறப்பு. வழிபடுபவர்களுக்கு கர்ம வினைகள் அனைத்தும் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். 2வது காலம் மகாவிஷ்ணு வழிபட்டது.
இது இரவு 10.30 மணிக்குத் துவங்குகிறது. பஞ்சாமிர்தம் அபிஷேகம், பால் பாயசம், கல்கண்டு சாதம் நைவேத்தியம் செய்வது சிறப்பு. வழிபடுபவர்களுக்கு செல்வ நலன்கள் வந்து சேரும். 3ம் காலம் அம்பிகை வழிபட்ட காலம். இது நள்ளிரவு 12 மணிக்கு துவங்குகிறது. தேன் அபிஷேகம், எள் சாதம் நைவேத்தியம் செய்வது சிறப்பு.
வழிபடுபவர்களுக்கு துன்பத்தை எரித்து அனைத்து விதமான இன்பநலன்கள் கிட்ட சிவபெருமான் அருளும் காலம். 4ம் காலம் தேவர்கள், மனிதர்கள் முதல் அனைத்து ஜீவ ராசிகளும் வழிபட்ட காலம். இது அதிகாலை 4.30 மணிக்கு துவங்குகிறது. கரும்புச்சாறு அபிஷேகம், சுத்த அன்னம் நைவேத்தியம் செய்வது சிறப்பு. வழிபடுபவர்களுக்கு சகலவிதமான நன்மைகள் வந்து சேரும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.




