மகாளய அமாவாசை அன்று நாம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது சாலச் சிறந்தது. வரும் செப்டம்பர் 21 அன்று இந்த அற்புதமான நாள் வருகிறது. அமாவாசைகளில் மிகப்பெரியது இதுதான். இந்த அமாவாசையையொட்டி வரும் காலம் மகாளயபட்ச காலம். இது 15 நாள்களைக் கொண்டது. இந்த காலத்தின் சிறப்பம்சங்களைப் பற்றிப் பார்ப்போம்.
தீராத பிரச்சனைகள் பலருக்கும் உண்டு. அதனால் தொடர்ந்து தொல்லைகள் வரும். ஜாதகத்தைப் போய் பார்த்தால் பித்ரு கடன் இருக்குன்னு சொல்வாங்க. முறையாக தர்ப்பணம் செய்கிறீர்களான்னுதான் கேட்பாங்க. அப்படி செய்யலன்னா பித்ரு தோஷம் வரும். அதனால சாபம் உண்டாகி நமக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வரும். அது நமக்கு மட்டும் அல்லாமல் நமது பரம்பரைக்கே தொடர்ந்து வரும். இது போன்ற நிலை இருந்தால் அதைப் போக்க உகந்த காலம் தான் இந்த மகாளயபட்ச காலம்.
மேலோகத்தில் இருந்து நம் பித்ருக்களின் ஆத்மா பூலோகத்திற்கு இந்தக் காலத்தில் தான் வரும். அதிலும் இந்த அமாவாசையையொட்டி வரும் மகாளயபட்ச காலத்தில் நாம் அவர்களுக்காக செய்யும் பூஜையும், தர்ப்பணமும் பெரிய பலனைத் தரும். அன்னதானத்தை தவறாமல் செய்வது யாகம் செய்த பலனைத் தரும். நம் முன்னோர்களும் நம்மை ஆசிர்வதிப்பார்கள்.
15 நாள்களும் தர்ப்பணம் கொடுக்கலாம். அப்படி முடியாதவர்கள் அந்தக் காலத்தில் ஏதாவது ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து தர்ப்பணம் கொடுக்கலாம். மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம், அன்னதானம் கொடுப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. சாதாரணமாக அமாவாசையில் நாம் பெற்றோருக்குத் தர்ப்பணம் கொடுப்பது 3 தலைமுறையினருக்குத் தான் நாம் எள்ளும், தண்ணீரும் இறைப்போம்.
ஆனால் மகாளய அமாவாசைக்குத் தர்ப்பணம் கொடுத்தால் 3 தலைமுறைகளையும் தாண்டி 3 தலைமுறைக்கும் முன்னால் வாழ்ந்த நம் முன்னோர்களுக்கும் போய்ச் சேரும். உங்க பங்காளிகளில் யாருக்காவது ஆண்வாரிசு இல்லாமல் இருக்கலாம். அதன் மூலம் அவருக்கு வருடாவருடம் திதி கொடுக்க முடியாமல் நின்று போய் இருக்கும்.
அப்படி வாழ்ந்து இறந்து போனவர்களுக்கும் தர்ப்பணம் கொடுப்பதால் உங்கள் வம்சத்தில் உள்ள அனைவரும் பூலோகத்தில் தேடி வருவார்கள். அதனால் நீங்கள் செய்த தர்ப்பணம் வரும் 21 தலைமுறைகளையும் ஈடேறச் செய்யும். பொதுவாக நம் தலைமுறை செழித்து வளர முன்னோர்களின் மனநிறைவான ஆசிர்வாதம் ஒன்றே போதும். 8.9.2025 பிரதமை முதல் 22.9.2025 பிரதமை வரை உள்ள காலகட்டம் மகாளயபட்ச காலம் வருகிறது. யாரும் மறந்தும் இருந்தும் விடாதீர்கள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



