நாளை (2.10.2024) மிக மிக முக்கியமான நாள் அமாவாசையிலேயே இது உன்னதமானது. அதனால் தான் மகாளய அமாவாசை என்கின்றனர் நம் முன்னோர்கள். மறந்து போனவர்களுக்கு மகாளய அமாவாசை என்பார்கள்.
அதாவது மாதந்தோறும் அமாவாசை வருகிறது. அப்போதெல்லாம் நாம் நம் முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து திதி கொடுக்கலாம். அதிலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மிக மிக முக்கியமான நாள். அந்த நாள்களில் பெரும்பாலானோர்கள் திதி கொடுப்பார்கள்.
அப்படியும் கொடுக்க முடியாதவர்கள் இந்த மகாளய அமாவாசையில் கொடுக்கலாம். நாளை (அக்.2) வரும் இந்த மகாளய அமாவாசையில் சூரியகிரகணமும் சேர்ந்து வருவதால் அதிவிசேஷம் நிறைந்த நாளாகக் கருதப்படுகிறது.
இந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பவர்கள் ஆண்டு முழுவதும் கொடுத்ததற்கான பலனைப் பெறுவார்கள்.
இந்த நாளில் முறைப்படி விரதம் இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். நம்மில் சிலர் அப்படி செய்யாமல் நானும் விரதம் இருந்து தான் பார்க்கிறேன். ஒண்ணும் நடக்க மாட்டேங்குதுன்னு அங்கலாய்ப்பவர்களையும் பார்த்திருக்கிறோம்.
ஆனால் அவர்களுக்கு எந்த முறையில் விரதம் இருப்பது என்று தெரிவதில்லை. முன்னோர்கள் வழிவழியாகச் சொல்லிச் சென்றதைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போய்விடுகிறார்கள். நினைவில் உள்ள ஒரு சிலவற்றை வைத்துக் கொண்டு விரதம் இருக்கிறார்கள். குறிப்பாக நாளைய தினம் வாசலில் கோலம் போடக்கூடாது. கடன் கொடுக்கவும், வாங்கவும் கூடாது.
அமாவாசைக்கு முந்தைய 15 நாள்கள் மகாளயபட்ச காலம் எனப்படுகிறது. ஒரு சிலர் இந்த நாள்களிலும் விரதம் இருப்பார்கள். தொடர்ந்து அமாவாசை விரதத்தையும் கடைபிடிப்பார்கள்.
இந்த நாள்களில் நமது சொந்த சுகங்களைத் துறந்து நம் முன்னோர்களையே நினைத்து விரதம் இருந்து வழிபட்டு தினமும் 2 பேருக்காவது அன்னதானம் செய்து வர வேண்டும்.
இது நல்ல பலனைத் தரும். அப்படி முடியாதவர்கள் நாளை ஒருநாளாவது விரதம் இருந்து அன்னதானம் செய்வது உன்னத பலனைத் தரும்.
நாளை நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு மிக முக்கியமான விஷயமும் உண்டு. அதாவது நாளைய தினம் சமையலில் நாம் வெங்காயம், வெள்ளைப்பூண்டு, முருங்கைக்காய், முள்ளங்கி ஆகிய காய்கறிகளைச் சேர்க்காமல் சமைக்க வேண்டும். விரதம் இருந்து அன்னதானம் கொடுத்து விட்டுத் தான் நாம் சாப்பிட வேண்டும்.
காக்கைக்கும் முதலிலேயே படையல் வைத்து விட வேண்டும். இப்படி அன்னதானம் செய்வது 100 பசுமாடுகளைத் தானம் செய்ததற்குச் சமமான பலனைத் தருமாம். அதே போல விரதம் இருந்து அன்னதானம் இருப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம், திருமணத்தடை விலகுவது போன்ற சுபகாரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம். அன்றைய தினம் மாலை வேளையில் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றலாம்.
வீட்டில் விளக்கேற்றுபவர்கள் நல்லெண்ணை தீபம் ஏற்ற வேண்டும். மகாளயபட்ச காலத்தில் நம் முன்னோர்கள் பூமிக்கு இறங்கி வந்து நமது வீட்டிற்கு வருவதால் அவர்களை நாம் தினமும் நினைத்து விரதம் இருந்து வழிபட்டு அன்னதானம் செய்வது நமக்கு வாழ்க்கையில் எத்தகைய தடைகள் இருந்தாலும் அதை விலகி ஓடச் செய்து விடும். அவர்களது பரிபூரண அருளாசி நமக்கு கிடைக்கும். அன்றைய தினம் பசுமாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்லது.