மாசி மாதத்தின் மிக முக்கிய பண்டிகை, உற்சவம், திருவிழா மாசி மகம். சைவ, வைணவ, அம்பாள், முருகன் என எல்லா தெய்வங்களுக்கும் மாசிமகம் திருவிழா தான்..!
நட்சத்திரங்கள் 27. ராசிகள் 12. இந்த 27 நட்சத்திரத்தில் 10வது நட்சத்திரம், (கர்ம நட்சத்திரம்) மகம். 11வது ராசி கும்ப ராசி. மகம் நட்சத்திரத்தில் சந்திரன் இருக்க, கும்ப ராசியில் இருந்து சூரியன் சந்திரனை பார்க்கும் காலமே புனிதமான மாசி மகம் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.
குரு, சந்திரனை பார்ப்பதால் மிகப் பெரிய குரு சந்திர யோகம் ஏற்படுகின்றது. கால புருஷனுக்கு 5ஆவது ராசியான சிம்ம ராசி பூர்வபுண்ணிய ராசி. சூரியன் ஆன்மா. சந்திரன் மனம். உடல் என்றும் சொல்வார்கள். இந்த மாசிமகத்தில் நீராடுவதால், நீருக்கு காரணமான சந்திரன் மூலமாக, உடல் தூய்மையும், சூரியன் மூலமாக ஆன்ம தூய்மையும் கிடைக்கிறது.
சந்திரன், சிம்ம ராசியில் கேதுபகவானின் மகம் நட்சத்திரத்தில் இருக்கும் பொழுது இந்த மாசி மகம் வருவதால், இந்த நீராட்டம் செய்கின்ற பொழுது நம்முடைய கர்ம வினைகள் தீர்த்து விடுகின்றன.
மாசிமக காலத்தில் புனித நீராடுவதும், புண்ணிய யாத்திரை செய்வதும், புனித கோயில்களைத் தரிசிப்பதும், பாவங்களைப் போக்கும். புண்ணியங்களை அதிகரிக்கும். தோஷங்களை நீக்கி, நீடித்த நல் வாழ்வைத் தரும். சைவ ஆலயங்களாக இருந்தாலும், வைணவ ஆலயங்களாக இருந்தாலும், எந்த பெரிய விழாவிலும் நிறைவாக தீர்த்தவாரி நடைபெறும். வைணவ விழாவில் இதனை அவபிரதம் என்று சொல்வர்.
திருமலையில் கூட பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில் சக்கர தீர்த்தம் நடைபெறும். சைவத்தில், இதனை தீர்த்தவாரி என்பர். பிரம்மோற்சவம் எனப்படும் பெருவிழாவின் நிறைவு நாளில் மட்டுமல்லாது வேறு சில நாட்களிலும் தீர்த்தவாரி நடைபெறும். கிரகண காலங்களிலும், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி முதலிய நாட்களிலும் தீர்த்தவாரி விழா நடைபெறும்.
மாசி மாதத்திற்கு “மாகம்’’ என்று பெயர். மாசி பௌர்ணமி தினத்தன்று மகம் நட்சத்திரம் இணைவதால், மாகம் என்பது மகமாக மாறியது என்பார்கள். “அகம்” என்றால் பாவங்கள் அல்லது மாசுகள். “மா” என்றால் இல்லை என்று பொருள். “பாவங்களை இல்லை” என்று ஆக்கும் நாள் மாசி மகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த மாசி மகம் வரும் 12ம் தேதி புதன்கிழமை வருகிறது.