தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முருகனுக்கு மிகவும் உகந்த நாள்.
பக்தர்கள் பலர் விரதமிருந்து காவடி எடுத்து அலகு குத்தி வழிபடுவர். இந்த நாளுக்கு ஒரு வரலாறு உண்டு. பார்க்கலாமா…
சுவையான வரலாறு
சிவன் அசுரர்களுக்கு அளித்த வரம் காரணமாக சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய 3 அசுரர்களும் பல அற்புத சக்திகளைப் பெற்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் தேவர்களை சிறைபிடிக்கத் தொடங்கினர். இதனால் தேவர்கள் அஞ்சி வாழ்ந்து வந்தனர். தங்களது இக்கட்டான நிலையிலிருந்து காக்க வேண்டி மகாதேவரிடம் முறையிட்டனர்.
கருணைக்கடலான எம்பெருமான் தேவர்களைக் காக்கும் பொருட்டு தனது நெற்றிக்கண்ணிலிருந்து உருவான தீப்பிழம்புளால் 6 குழந்தைகளை உருவாக்கினார். இந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து வந்தன. அவர்கள் குழந்தைகளுக்குப் போர்க்கலைப் பயிற்சியை அளித்தனர்.
ஒரு நாள் பார்வதி தேவி வந்து அந்த ஆறு புத்திரர்களையும் ஒரு சேர அணைக்க அறுவரும் இணைந்து ஒருவராக மாறினர். ஆறு குழந்தைகளின் சக்தியும், ஆற்றலும் இணைந்து முருகன் உருவானார். பல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.
அசுரர்களின் அழிவுகாலம் வந்தபோது ஆண்டிகோலத்தில் பழனியில் இருந்த முருகனுக்கு ஞானவேலைக் கொடுத்தார் அன்னை பார்வதி தேவி. அப்படி அந்த ஞானவேல் கொடுக்கப்பட்ட தினமே தைப்பூசம்.
இந்த ஞானவேல் கொண்டே கந்தன் அசுர வதம் புரிந்து தேவர்களைக் காத்து அருளினார். அசுர வதம் நடந்த இடம் தான் திருச்செந்தூர். பழனி முருகன் ஞானவேலைப் பெற்றதால் தான் தைப்பூசமானது பழனியில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
காவடிச்சிந்து
இந்த நாளுக்காகப் பக்தர்கள் துளசி மாலை அணிந்து 48 நாள்கள் விரதமிருந்து பழனிக்குச் சென்று முருகனைத் தரிசிப்பார்கள்.
சிதம்பரத்தில் நடராஜர் உமாதேவியுடன் ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு தைப்பூசத்தினத்தில் தான் தரிசனம் கொடுத்தார். பிரகஸ்பதியின் நட்சத்திரம் தைப்பூசம். அன்று குருவழிபாடு செய்வது உத்தமம். தைப்பூசத்திற்கு முருகன் கோவில்களுக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழி நெடுக முருகனைப் பற்றிப் பாடல்கள் பாடி வருவர். அந்தப் பாடல்கள் காவடிச்சிந்து என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகளுக்குக் காது குத்துதல், கல்வி கற்கச் செய்தல், கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற நாள்.
இந்த இனிய நாள் வரும் ஞாயிறு (பிப்ரவரி 5) அன்று வருகிறது. இந்தியா மட்டுமின்றி மலேசியா, மொரீஷியஸ் உள்பட பல வெளிநாடுகளிலும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசம் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு ஆரோக்கியமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும், வளங்களும் ஒருசேர அமையப் பெறுகின்றன.