நாளை முதல் அக்னி பகவான் வருகிறார்… பராக்… பராக்…! என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

By Sankar Velu

Published:

சித்திரை மாதம் வந்தாலே வெயில் பற்றிய பயம் வந்துவிடும். மே மாதத்தை எப்போது கடத்தப் போகிறோமோ என்று பயப்படுவோம். இந்த ஆண்டு வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. முடிந்த அளவு உச்சி வெயிலில்; வெளியே செல்வதைத் தவிர்க்கவும். நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும், தண்ணீரையும் நிறைய எடுத்துக் கொள்ளுங்கள்.

மசாலா உணவுகள் இல்லாமல் எளிய உணவுகளான கூழ், கஞ்சி மாதிரியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். மே 4 முதல் மே 28 வரை அக்னி நட்சத்திரம் உள்ளது.

அக்னி பகவான் தனக்குக் கிடைக்கின்ற இரைகளை எரித்து சாம்பலாக்குவது தான் அவரது வேலை. ஹோமம் நடத்தும் போது நிறைய நெய்யை விட்டு நிறைய ஆகுதி கொடுத்து இந்தப் பொருளை இந்தத் தேவர்களுக்குக் கொடுங்க என சொல்கிறபோது இந்த வேலையைச் செய்யக்கூடியவர் அக்னி பகவான் தான்.

அதிகமாக நாம் உணவு எடுத்துக் கொள்ளும்போது மந்தமான சூழல் உருவாகும். அந்த சமயங்களில் நாம் வயிற்றைக் காயப் போட்டால் நம் உடலில் உள்ள அக்னி செரிமானமாகாமல் இருக்கும் உணவை எரித்து நம் உடலை சமநிலைப்படுத்தி அடுத்த வேளைக்குத் தேவையான பசியை உருவாக்கும். இது இயல்பான மாற்றம் தான்.

ஒரு சூழ்நிலையில் அக்னிபகவானுக்கு மந்தநிலை ஏற்பட்டது. நிறைய ஆகுதி, நிறைய நெய் அவரால் தகிக்க முடியல. எரிக்க முடியவில்லையாம். அதனால் அவர் இறைவனிடம் நிலையை எடுத்துக்கூறி எனக்கு அதீதமாக எரிப்பதற்கு இவற்றை எல்லாம் சுட்டு சாம்பலாக்குவதற்கு ஒரு வாய்ப்பும் காலமும் கொடுங்க என கேட்கிறார். அப்படி அவர் பெற்ற காலம் தான் இந்த அக்னி நட்சத்திர காலம். இந்த காலத்தில் அவர் தனக்குள் இருக்கிற பவரைக் கொண்டு எல்லாவற்றையும் எரித்து விடுகிறார்.

Akni Natchathram
Akni Natchathram

சீமந்தம், வளைகாப்பு செய்யலாம். வாடகை வீட்டுக்குக் குடி போகலாம். கடைகள் கட்டுவது சம்பந்தமான வேலைகளைத் துவங்கலாம். மொட்டை அடித்துக் காது குத்தக்கூடாது. மரங்களை வெட்டக்கூடாது. தோட்டத்தைப் புதுப்பிக்கக்கூடாது. புதுசா விதை விதைக்கக்கூடாது. புதுசா சொந்த வீட்டுக்குக் குடிபோகக் கூடாது. கூரை வேயக்கூடாது. புதிதாக தூர தேசம் போவதைத் தவிர்க்கலாம். அவசியமாகப் போய்த்தான் ஆகணும்னா போகலாம்.

பிள்ளையார், சிவன், பெருமாள் கோவில் என எதுவானாலும் அந்தக் கோவிலில் அபிஷேகத்திற்குப் பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் என குளுமையான பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம். சிவபெருமானைக் குளிர்வித்தால் உலக உயிர்கள் பிரச்சனை இல்லாமல் இந்தக் காலத்தைக் கடந்து செல்வார்கள்.

சுவாமிக்கு மேல் அழகா தாராபாத்திரம் வைத்து அதில் பன்னீர் விட்டு சிவனைக் குளிர்விப்பார்கள். வாய்ப்பு உள்ளவர்கள் அந்தப் பாத்திரத்தை வாங்கிக் கொடுக்கலாம். அதே போல தண்ணீர், மோர், செருப்பு என தானம் செய்யலாம். கோடைகாலத்தில் கிராமப்புறங்களில் கஞ்சித்தொட்டியில் தண்ணீர், கஞ்சி என ஊற்றி வைப்பார்கள்.

பறவைகளுக்கும், நாய், ஆடு, மாடுகளுக்கும் வீட்டு வாசலில் தண்ணீர் வைக்கலாம். இதுபோன்ற கால்நடைகள் எல்லாம் தண்ணீர் இன்றி தவிக்கும்போது நாம் செய்யும் இதுபோன்ற உதவியால் அது போன்ற சின்னசின்ன உயிர்களும் நம்மை வாழ்த்தும். இறைவனைக் குளிர்விக்கும்பொருட்டு நம் வீட்டிலும் மலர்களால் அர்ச்சனை, விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்தால் நமக்கு குளுமையான மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.