ஆண்டுதோறும் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா களைகட்டும். பக்தர்கள் பல்வேறு வேடங்கள் பூண்டு கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்துவர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களே இந்தத் திருவிழாவால் ஒரு மாதமாகக் கோலாகலமாக இருக்கும்.
பொதுவாக குலசை முத்தாரம்மனுக்குப் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. ஆனால் எது உண்மையான வரலாறு என்பது யாருக்குமே தெரியாது. இருந்தாலும் கோவிலின் சுவர்களில் இந்தக் கதையைத் தான் படமாக வரைந்து இருக்கிறார்கள். அதைத்தான் இப்போது நாமும் பார்க்க இருக்கிறோம். அப்படிப்பட்ட இந்த குலசை முத்தாரம்மன் உருவான வரலாறைப் பார்ப்போமா…
அதிக சக்தியும், ஆணவமும் கொண்டவர் வரமுனி. இவர் சிவபெருமானின் ஆணையை ஏத்துக்கிட்டு கைலாசத்தில் இருந்து தெற்கே இருக்கும் பொதிகை மலைக்கு வருகிறார்.
அகத்தியர் வரும் சமயம் அவரைக் கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்துகிறார் வரமுனி. அதுமட்டுமல்லாமல் குள்ளமுனின்னு அவரைக் கிண்டல் செய்கிறார். கோபத்தின் உச்சிக்குச் சென்ற அகத்தியர் எருமைத்தலையும், மனித உடலுடனும் சுற்றித்திரி. உன்னோட சாபம் நீங்க ஒரு காலம் வரும். அதுவரை இப்படியே சுற்றித்திரின்னு சாபம் விட்டுறாரு.
அப்படி சாபம் விட்டும் வரமுனி திருந்தவில்லை. திரும்பவும் தவம் இருக்கிறார். ஏகப்பட்ட வரங்களை வாங்குகிறார். மகிஷாசூரனா மாறுறாரு. பூலோகம், மேலோகம், கீழோகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கிறார்.
பொம்பளைக் கையாலத் தான் சாவேன்னு திமிரா வரத்தையும் வாங்கிடுறாரு. நம்மளைக் கொல்றதுக்கு ஆம்பளைங்களே கிடையாது. பொம்பளைங்க எப்படி வருவாங்கன்னு நினைச்சிக்கிட்டுக் கொடுமைக்கு மேல கொடுமை பண்றாரு.
தேவர்களைப் பூராவும் விரட்டி அடிச்சி இந்திரலோகத்தைப் பிடிச்சிக்கிறாரு. இப்படியே இவரு ஆட்டம் போடறதைப் பார்த்து சிவபெருமான், விஷ்ணு தேவரோட சேர்ந்து என்ன செய்யலாம்னு கலந்து ஆலோசிக்கிறாங்க.
அதன்படி, பெரிய வேள்வித்தீயை வளர்க்கிறாங்க. அதில இருந்து அன்னை பார்வதி தேவியின் அம்சமாக லலிதாம்பிகை என்ற பச்சைக்குழந்தை பிறக்குது. இந்தக் குழந்தை பிறந்து 9 நாள்களுக்குள் வளர்ந்து பெரிய பெண்ணாகி 10வது நாளில் விஜயதசமி அன்று சிங்கத்து மேல ஏறி மகிஷாசூரனை சூரசம்ஹாரம் பண்றாங்க.
இதுதான் குலசை முத்தாரம்மன் கோவிலில் சொல்லப்படுற கதை. இது கோவில் உருவான கதை அல்ல. குலசை முத்தாரம்மன் உருவான வரலாறாகச் சொல்லப்படுகிறது.
அதுசரி. குலசையில் முத்தாரம்மனுடன் ஞானமூர்த்தீஸ்வரரும் இருப்பது எப்படி என்கிறீர்களா? அவர் விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்கிறார். ஞானமூர்த்தீஸ்வரருக்குப் பெயர் காரணம் உண்டு. ஞானம் என்றால் பேரறிவு.
மூர்த்தி என்றால் வடிவம். ஈஸ்வரர் என்றால் ஈகை சுரப்பவர் என்று பொருள். அதாவது ஞானமூர்த்தீஸ்வரர் என்றால் பேரறிவுடைய வடிவத்தைத் தாங்கி ஈகை சுரப்பவர் என்று பொருள்.