எங்கும் இல்லாத சிறப்பு குலசை முத்தாரம்மனுக்கு மட்டும் ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். அதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அங்கு மட்டும் அம்மன் சுயம்புவாகத் தோன்றி இருக்கிறாள். அதனால் சக்தி வாய்ந்த அம்மனாக பக்தர்கள் ஏராளமானோர் முத்தாரம்மனை வேண்டுகின்றனர். கோவிலில் ஞானமூர்த்தீஸ்வரரும் உடன் உறைந்த தெய்வமாக வீற்றிருக்கிறார்.
மைசூரில் நடைபெறும் தசராவுக்கு அடுத்தபடியாக பிரசித்திப் பெற்றது குலசை தசரா தான். தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம் என்ற ஊர் உள்ளது. இதையே சுருக்கமாக குலசை என்று அழைக்கிறோம்.
தசரா இங்கு 10 நாள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றம் நடந்து தசரா விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி நேர்த்திக்கடனாக வேடமணிந்து காணிக்கை பெற்று வந்தனர். இன்று தசராவின் சிகர நிகழ்ச்சி. அதாவது சூரசம்ஹாரம்.
இங்குள்ள கடற்கரையில் கோலாகலமாக நடைபெறும். இன்று இரவு அம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் காட்சி அளிப்பாள். கடற்கரையில் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். மகிஷனின் தலையைக் கொய்து வெற்றிக்கொடியை நிலை நாட்டி அம்மன் அற்புதமான கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.
கடற்கரை முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்து இந்த நிகழ்ச்சியைக் காண்பர். ஊரின் எல்லையிலேயே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். அங்கு இருந்து எங்கு காணினும் பக்தர்கள் வேடமணிந்தும், மேளம் அடித்தும், சாமி ஆடியபடியும் வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். காளி, கருங்காளி, பத்ரகாளி, அனுமன், கரடி, புலி, எலும்புக்கூடு, நர்ஸ், லேடி, கிறுக்கன், கருப்பசாமி என விதவிதமான வேடங்கள் மெய்சிலிர்க்க வைக்கும்.
சூரசம்ஹாரம் முடிந்ததும் நாளை 11வது நாளில் (13.10.2024) நாளை மாலை முத்தாரம்மனுக்குக் காப்பு களையப்படும். பிறகு பக்தர்கள் விரதத்தை முடித்துக் கொண்டு காப்பு களைவார்கள். நாளை மறுநாள் (14.10.2024)அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மதியம் பாலாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து புஷ்ப அலங்காரத்துடன் தசரா விழா நிறைவடையும்.
இந்த விழாவுக்காக இன்று இரவு ஏராளமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்ட நெரிசலில் வர முடியாத பக்;தர்கள் வீட்டில் இருந்தபடியே டிவியில் கண்டுகளிக்கும் வகையில் நிகழ்ச்சியை நேரடியாக தனியார் சானல் மற்றும் யூடியூப் சானல்களில் ஒளிபரப்பு செய்வார்கள்.