வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வேண்டுமா…இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்யுங்க..

By Sankar Velu

Published:

பொதுவாகவே வாழ்க்கையில் மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்குமே ஏதாவது பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். அப்படி பிரச்சனை வரும்போது அதைக் கண்டு பயந்து ஓடாமல் துணிந்து எதிர்த்து போராடி ஜெயிக்க வேண்டும்.

அப்போது தான் நம் திறமை வளரும். நமக்கே நம் மீது ஒரு தன்னம்பிக்கையும் உண்டாகும். பிரச்சனைகள் எங்கிருந்து வருகின்றன என்றால் 90 சதவீதம் அது நம்மிடம் இருந்து தான் வரும். அது விதவிதமான வழிகளில் வருவதைப் போல நமக்குத் தோன்றும்.

அதை நாம் கொஞ்சம் யோசித்தால் சுயபுத்தியைக் கொண்டே தவிர்த்துவிடலாம். மீதமுள்ள 10 சதவீதம் தான் வெளியில் இருந்து உண்டாகின்றன. உதாரணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள், சக தொழிலாளர்கள் என சொல்லலாம். இதையும் தாண்டி ஒரு சிலர் சூழ்நிலையே சரியில்லைப்பா என அங்கலாய்ப்பர்.

எந்த முயற்சியும் செய்யாது பிரச்சனையாக வருகிறது என்று ஒரு மூலையில் போய் முடங்கிக் கிடப்பர். இவர்களும் சரி. எந்த பிரச்சனையானாலும் சரி. பக்தி வழியில் நடப்பவர்களுக்கு ஒரு அருட்பிரசாதமாக இருக்கிறது கோளறு பதிகம்.

அதாவது நவகோள்களால் ஏற்படும் பாதிப்பு நீங்கவே இந்த கோளறு பதிகம் இயற்றப்பட்டுள்ளது. தினமும் இதைப் பாராயணம் செய்ய வேண்டும். திருஞானசம்பந்தர் எழுதிய அற்புதமான பதிகம் இது. அற்புதமான 10 பாடல்களுடன் நூற்பயன் சேர்த்து 11 பாடல்கள் உள்ளன.

கோளறு பதிகம் என்றாலே முக்கியமாக இந்த முதல் பாடலைத் தான் சொல்வார்கள். இந்தப் பாடலுக்கான விளக்கம் பார்ப்போம்.

வேயுறு தோளி பங்கன் என்ற முதல் பாடலின் விளக்கம் எம்பெருமான் மூங்கிலைப் போன்ற தோள்களைக் கொண்டவர்.

Sivan
Sivan

தனது தோள்களின் இருபக்கத்தில் ஒரு பாகத்தை உமையாளுக்குக் கொடுத்து ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அதை அருந்தி தனது கழுத்தில் அடக்கிக்கொண்டவர்.

இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக் கொண்டிருக்கும் எம்பெருமான் களங்கமில்லாத பிறையை, கங்கையை தனது திருமுடி மேல் அணிந்து கொண்டு என் உள்ளத்தில் நிறைந்து இருக்கிறார்.

Artha nareeswarar
Artha nareeswarar

அதனால் அவருடைய சிவசிந்தனையில் நான் இருக்கும்போது சூரியன் சந்திரன், செவ்வாய், சுக்கிரன், புதன், குரு, சனி மற்றும் பாம்பிரண்டும் உடனே அதாவது ராகு, கேது என்ற 9 கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக சிவனடியாருக்கு என்றும் நல்லதையே செய்யும் என்று இந்த பாடல் விளக்குகிறது.

Kolaru pathigam7
Kolaru pathigam

பாராயணம் செய்ய வேண்டிய பாடல் இதுதான்…

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட
கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே.

Leave a Comment