கார்த்திகை மாதம் சோமவார விரதத்தில் சிவன் கோவிலுக்குப் போனால், 108, 1008 என சங்காபிஷேகம் நடப்பதைக் கண்குளிரப் பார்க்கலாம். இந்த விரதம் தான் சோமவார விரதம். இதைக் கடைபிடிப்பது எப்படி? இதற்கான பலன்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
சோம வாரம் என்றால் ஆடி மாதத்தில் துவங்கி கார்த்திகை மாதம் நிறைவு செய்யும் வரை 21 வாரங்களாக இந்த விரதத்தை இருக்க வேண்டும்.

நளச்சக்கரவர்த்தியின் மகன் இந்திர சேனன். இவரது பேரன் சந்திராங்கதன். இவரது மனைவி சீமந்தனி. இவள் முதலில் சந்திராங்கதனை மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற போது அந்தக்காலத்து ஜோதிடர்கள் இவருக்கு தீர்க்க ஆயுள் கிடையாது.
அதனால் மாங்கல்ய பலம் இல்லை என்கின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் ரொம்ப கவலைப்பட்டு வருகிறாள். அந்த சமயத்தில் யாக்ஞவல்கியர் என்ற முனிவரும் அவரது மனைவி மைத்ரேயியும் அவள் சந்திக்கிறாள்.
அப்போது மைத்ரேயி சீமந்தினியைக் கூப்பிட்டு நீ ஏம்மா இவ்ளோ கவலையா இருக்குற…கார்த்திகை மாதம் வரும் சோமவார விரதம் சிவபெருமானின் மிக முக்கியமான விரத நாள். இந்தநாளில் விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் மட்டுமல்லாது நினைத்தது நிறைவேறும் என்றும் சொல்கிறாள்.
அப்போது இந்த விரதத்தைக் கடைபிடிக்கும் முறையைப் பற்றியும் அவளிடமே கேட்கிறாள். அதன்படி தனக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை முறியடித்து முறைப்படி விரதம் இருக்கிறாள். அப்போது இவளை சோதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அங்கிருக்கக்கூடிய ஒருவர் ஒரு பெண் வேடத்தை அணிந்து தனது நண்பரையும் துணையாக அழைத்து தம்பதியராக வருகின்றனர்.

சீமந்தினி இந்த விரதத்திற்காக மதிய நேரம் தம்பதிகளுக்கு உணவு கொடுப்பது வழக்கம். வெளியே வந்து பார்த்த போது அந்த தம்பதியர் வந்தனர். அவர்களை அழைத்து பூஜை செய்து வணங்கினாள். அவர்களை பார்வதியாகவும், பரமேஸ்வரனாகவும் எண்ணி வணங்கினாள்.
அந்த பூஜையை அவள் முறைப்படி உள்ளம் உருக வேண்டியபடி பூஜித்து அந்த பெண் வேடமிட்ட பக்தர் முன்னால் பூவை வைத்தாள். அப்போது அந்த வேடமிட்ட பக்தர் நிஜமாகவே பெண் ஆனாள்.
அவர் மனம் வருந்தி தான் உன்னை சோதிக்கவே வந்தேன். என்னை மன்னித்து விடு. என்னை மீண்டும் ஆணாக மாற்றி விடு என்றார். பின்னர் மீண்டும் சிவபெருமானிடம் வேண்டி அவரை ஆணாக மாற்றினாள்.
இது நடக்காது…இது கிடைக்காது என்று நாம் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் கஷ்டப்படுகிறோமோ அதைப் பூர்த்தி செய்வது தான் இந்த விரதம்.
எப்படி இருப்பது?
திங்கள் கிழமை காலை எழுந்ததும் குளித்து சிவபெருமான் பட உருவத்திற்கு முன் அமர்ந்து பூஜை செய்து சிவபுராணம் படிக்கலாம். காலையில் உபவாசம் இருந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு மாலை பால் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். அல்லது காலை, மதியம் உபவாசம் இருந்து மாலையில் உணவு எடுத்துக் கொள்ளலாம்.
இந்த விரதத்தின் மகிமை என்னவென்றால் அது அன்னதானம். இந்த கார்த்திகை சோமவாரத்தில் செய்யும் அன்னதானத்திற்கு இணையானது வேறு எதுவும் இல்லை. எத்தனையோ ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பலனால் தான் சோமவார விரதம் இருக்கும் வாய்ப்பே அமையுமாம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



