இன்று (மே.5) சித்ரா பௌர்ணமி. அதிகாலை 5 மணிக்கு மேல் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். மாதம் தோறும் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் இந்நாள் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானுக்கு கிரிவலம் செல்ல உகந்த நாள். திருவண்ணாமலை போல அனைத்து தலங்களிலும் கிரிவலம் வரலாம். அம்பிகைக்கும் விசேஷமான நாள்.
நாராயணருக்கும் சத்திய நாராயணர் பூஜையை செய்தால் அதிவிசேஷம். சித்திர குப்தனின் வழிபாடும் இந்நாள் தான். புதிய கணக்கு தொடங்குவதும் இந்த நாளில் தான் என்று சொல்லலாம்.
அழகருக்காகவே தான் மதுரை சித்திரை திருவிழா மாற்றப்பட்டது என்கிறது வரலாறு. திருமலைநாயக்கர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வுகள் சீரோடும் சிறப்போடும் இன்று வரை தொடர்கிறது.
அழகர் வரும் இடம் எல்லாம் திருவிழாக்கூட்டம் தான். இன்று அதிகாலை 5.45 மணி முதல் 6.10க்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
வைகை ஆறு முழுவதும் இன்று இரவு முதலே பக்தர்கள் கூட்டம் களைகட்டி வருகிறது. சர்க்கரை தீபம் ஏற்றுவது சிறப்பு. பெருமாளை குலதெய்வமாக வழிபடுபவர்கள் ஒரு விளக்கேற்றி ஒரு நாட்டுச்சர்க்கரையை வைத்தால் போதும். அழகர் உடுத்தும் உடையின் நிறமே நாட்டின் நிலவரத்தை அப்படியேக் காட்டக்கூடியதாக இருக்கும்.
போக முடியாதவர்கள் டிவியில் பார்த்துக் கொண்டும் வீட்டிலேயே இருந்தபடி வழிபடலாம். திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் என கிரிவலம் சென்றும் வழிபடலாம். போக முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம். நம்மால் எப்போ முடிகிறதோ அப்போ வரேன் என சுவாமியிடம் வேண்டிக் கொள்ளலாம்.
சித்திரகுப்தன் வழிபாடும் இன்றைய நாளில் விசேஷமானது. பலர் நோட்டுப்புத்தகத்தில் வரைந்து வழிபடுவார்கள். சிலர் பேனா, நோட்டு என வைத்து வழிபடுவார்கள். இது எதற்காக என்றால் நம்முடைய பாவம் எல்லாம் குறைந்துவிடாது. பாவச்சிந்தனை இல்லாத நல்ல சிந்தனையைக் கொடுப்பார் சித்திரகுப்தர்.
மாலையில் 5, 9, 11 என ஏதாவது ஒரு எண்ணிக்கையில் தீபம் ஏற்றி வைத்து சந்திரனுக்குக் காட்டி வழிபாடு செய்யலாம். நைவேத்தியமாக சித்ரா அன்னங்கள் படைக்கலாம். சக்கரைப் பொங்கல், புளிசாதம், தயிர் சாதம், நெல்லிக்காய் சாதம், மாங்காய் சாதம், தேங்காய் சாதம் என வகைவகையாக சித்ரா அன்னங்கள் செய்யலாம்.
சந்திரனைத் தரிசித்தபின் வீட்டின் மொட்டை மாடியில் உட்கார்ந்து குடும்பத்தோடு சவுகரியமாக உணவை சாப்பிடலாம். புதுமணத்தம்பதிகள் பக்கத்தில் எங்காவது ஆறு இருந்தால் அங்கு உறவினர்களுடன் சேர்ந்து வந்து சாப்பிடுவார்கள்.
இந்த நாளில் நாம் சந்திரனைத் தரிசிப்பதன் மூலம் நமக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் அகலும். மனோவியாதிகள் கூட தீர்க்கக்கூடிய அற்புதமான தெய்வம். சந்திரனைத் தலையில் சூடிய சந்திரமௌலீஸ்வரராகிய சிவபெருமானையும் வணங்குவது உத்தமம். சத்தியநாராயணரை வழிபாடு செய்வதன் மூலம் எல்லாவகையான நன்மைகளும் கிடைக்கும்.
அதெல்லாம் சரி… என்ன இது? இரண்டு பாடல்களும் தலைப்பில் என்று சந்தேகம் வருகிறதா? முதல் பாடல் கள்ளழகர் படத்தில் வரக்கூடிய புகழ்வாய்ந்த பாடல். சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. கள்ளழகர் வைகைஆற்றில் இறங்கும் வைபவம். இந்த நாளில் கள்ளழகரை பக்தகோடிகள் உற்சாகம் பொங்க வரவேற்பதாக அமைந்தது முதல் பாடல்.
வாராரு வாராரு… அழகர் வாராரு… என்ற பாடல். இரண்டாம் பாடல் அரண்மனைக்கிளியில் ராஜ்கிரண் நடித்த பாடல். புதுமணத்தம்பதிகள் ஆற்றங்கரையில் அமர்ந்து சித்ரா பௌர்ணமி அன்று இரவில் தான் நிலாச்சோறு சாப்பிடுவார்கள். அப்போது அவர்கள் மகிழ்ச்சி பொங்க பாடும் பாடல் தான் அது. ராத்திரியில் பாடும் பாட்டு… கேட்க கேட்க ஆசையாச்சு… ஆற்றங்கரை ஈரக்காத்து மேலப்பட்டு மோகம் ஆச்சு… போடு நிலாச்சோறு… என் பொன்னுமணி தேரு… என்ன ஒரு பொருத்தம் பார்த்தீர்களா?