சுவாமியே….ய்…சரணம் ஐயப்பா…! முதன் முதலில் இருமுடியைத் தலையில் ஏற்றியது யார் தெரியுமா?

By Sankar Velu

Published:

சபரிமலை யாத்திரை.. என்றாலே அது ஒரு புனிதமான யாத்திரை. எல்லோராலும் அவ்வளவு சீக்கிரத்தில் சென்று விட முடியாது. கடும் விரதம் இருக்க வேண்டும். மனமுருகி ஐயப்பனை பிரார்த்தித்து அவரது அருள் இருந்தால் மட்டுமே அங்கு போய் சுவாமியைத் தரிசிக்க முடியும்.

இருமுடி கட்டி செல்லும் பக்தர்கள் தங்கள் பாதை எத்தகைய கரடு முரடாக இருந்த போதும் ஐயப்பனை போய் தரிசித்து விடுகிறார்கள். அதைப் போல அவர்களது வாழ்க்கையிலும் பாதைகள் கரடு முரடாக இருந்தால் அது சுலபமாக அவர்களுக்கு வழிகொடுத்து அவர்களுடைய வாழ்வை மலரச் செய்யும்.

அதைத் தான் ஐயப்ப தரிசனம் நமக்கு நினைவூட்டுகிறது. எல்லா பாரத்தையும் இறைவன் மேல் போட்டு விட்டு சுவாமியை நம்பிக்கையுடன் தரிசிப்பவர்களுக்குத் தான் இத்தகைய பாதை புலப்படும்.

அதற்காக செய்யும் கடமையையும் செய்யத் தவறிவிடக்கூடாது. இப்போது ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டிச் செல்லும் போது நெய், தேங்காய் கொண்டு செல்வது ஏன்? உங்களுக்கு தெரியுமா?
வாங்க பார்க்கலாம்.

ஐயப்பன் கோவிலில் நெய்யால் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடக்கும். ஆனால் தனி நெய்யையோ, தனி தேங்காயையோ நிவேதனம் செய்யமாட்டார்கள். தேங்காய்க்குள் நெய் ஊற்றி நெய் தேங்காயையே நிவேதனமாக்கினர்.

Iyappa devotees
Iyappa devotees

தேங்காய்

முக்கண் கொண்ட தேங்காய் சிவனை ஞாபகப்படுத்தும். பசு நெய் கோபாலனாகிய மகா விஷ்ணுவை நினைவுப்படுத்தும். சிவன், விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் சக்தியாக அவதரித்தவர் ஐயப்பன். இதனால் சிவவிஷ்ணு வடிவமான நெய், தேங்காயை அவருக்கு நிவேதனம் செய்கின்றனர்.

நெய் அபிஷேகம்

பந்தள மன்னனின் மனைவி வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான் ஐயப்பன்.

தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும்போது, காட்டில் இருக்கும்போது உண்ணக்கூடிய உணவுகள் பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாக கட்டினார்.

அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் கட்டிக் கொடுத்தார்.

அந்த இருமுடிகளையும் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறை நாளடைவில் நிலைத்துவிட்டது.

நெய்யை என்ன செய்வாங்க?

சபரிமலை ஐயப்பன் சிலை கடந்த 1800ஆம் ஆண்டு வரை தாரு சிலை எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட சிலையாக தான் இருந்தது. அதன் காரணமாக அப்போது வரை சுவாமிக்கு நெய் அபிஷேகம் நேரடியாக செய்யும் வழக்கம் இல்லாமல் இருந்தது.

இதனால் ஐயப்ப பக்தர்கள் கொண்டு செல்லக்கூடிய நெய்யை அங்குள்ள நெய்த் தோணியில் கொட்டிவிட்டு வரும் பழக்கம் இருந்தது. தற்போது நேரடியாக ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு அந்த பிரசாதத்தை பக்தர்கள் வீட்டுக்கு கொண்டு வருகின்றனர்

இருமுடியில் நெய்.. தேங்காய்

Irumudi
Irumudi

தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும், தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் ஐயப்பன் கூறினார்.

பந்தள மன்னன், மணிகண்டா! நீ காட்டுக்குள் குடியிருக்க போவதாய் சொல்கிறாய். நாங்கள் உன்னைக் காண வேண்டும் என்றால் மலைகளைக் கடந்து வர வேண்டும். வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன்? என்றார்.

அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம் என அருள்பாலித்தார்.

ஆண்டுக்கு ஒருமுறை

அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தள மன்னன் மலைக்குச் செல்வார். மகனைக் காண செல்லும்போது ஐயப்பனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்வார். நெய் இலகுவில் கெட்டுப் போகாத ஒன்று. எனவே நெய்யில் செய்த பலகாரங்களைக் கொண்டு செல்வார்.

மேலும் நெய்யை தேங்காய்க்குள் ஊற்றிக் கொண்டு சென்றால் இன்னும் பல நாள்கள்; வரையிலும் கெட்டுப்போகாமல் இருக்கும். பந்தள மன்னன் ஐயப்பனைக் காண நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும். எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கமாக தற்போது வரை இருந்து வருகிறது.