கல்யாணம் பண்ணிப் பார்… வீட்டைக் கட்டிப்பார்னு நம்ம பெரியவங்க சொல்லிருப்பாங்க. ஆனா இப்போ எல்லாம் கல்யாணம் நடப்பதே போதும் போதும் என்றாகி விடுகிறது. மாப்பிள்ளை நிறைய இருக்கின்றனர். அவர்களுக்கு ஏற்ற பெண் கிடைப்பதில்லை. பெண் இருந்தால் அவருக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைப்பதில்லை.
இருவரும் கிடைத்துவிட்டால் ஜாதகப் பொருத்தம் இல்லை. எல்லாமே இருந்தால் அங்கு பொருளாதார பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. ஒரு வழியாகக் கல்யாணமும் நடந்து விட்டால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு வந்துவிடுகிறது.
அது திருமணமான சில மாதங்களிலேயே வந்துவிடுவதால் இருவருக்குள்ளும் மனக்கசப்பு வந்து பிரிய நேரிடுகிறது. கொஞ்ச காலம் பிரிந்து சேர்ந்து விட்டால் பரவாயில்லை. நிரந்தரமாக விவாகரத்து வரை கூட சில தம்பதியினர் சென்று விடுகின்றனர்.
லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து, ஜாதகம் பொருத்தம் எல்லாம் பார்த்து, நாள் நட்சத்திரம் பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பது இவர்கள் சந்தோஷமாக வாழ்வதற்கா? இல்லை பிரிவதற்கா? என்னதான் இல்வாழ்க்கை நன்றாகப் போனாலம்
அவர்களும் மனிதர்கள் தானே. ஆசா பாசம் எல்லாம் இருக்கத்தான் செய்யும். அதனால் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளும், மனஸ்தாபங்களும் உண்டாவது இயல்பு தான். அதுவும் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும்போது இணைபிரியாத தம்பதிகளாகி விடுவர்.
சரி. இப்போது விஷயத்திற்கு வருவோம். தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேலோங்க என்ன செய்ய வேண்டும்? புரிதல் இருந்தாலும் கடவுளையும் வழிபட வேண்டும் அல்லவா? எல்லாவற்றுக்கும் மூல காரணமே நம்மைப் படைத்த கடவுள் தான். அந்த வகையில், கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை மேலோங்கச் செய்வதற்கும் ஒரு விரதம் உள்ளது. என்னவென்று பார்ப்போமா…
கணவன், மனைவியின் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்வதற்கும் உள்ள அற்புதமான விரத நாள் கார்த்திகை ஞாயிறு.
தமிழகத்தில் ஸ்ரீவாஞ்சியம் என்று ஒரு அற்புதமான திருத்தலம் உள்ளது. இங்கு தான் மகாவிஷ்ணு மகாலெட்சுமியை அடைவதற்காக இறைவனுடைய அனுக்கிரகத்தினாலே அந்த நற்பலன்களைப் பெற்ற திருத்தலம். இங்கு ஞாயிற்றுக்கிழமை நீராடல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
குப்த கங்கை தீர்த்தம் இங்குள்ளது. இந்தத் திருக்குளத்தில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி நீராடுகின்றனர். இன்றும் ஸ்ரீவாஞ்சியத்தில் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நீராடல் வெகுசிறப்பாக நடைபெறும்.
இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அம்பாள் எப்போதும் இறைவனுக்கு சரிபாதியாக இருக்க வேண்டும். பிரியக்கூடாது என்பதற்காக இறைவனை வழிபட்டு நலன் பெற்ற நாள் என்கிறார்கள். அதுதான் இந்த கார்த்திகை ஞாயிறு.
கணவன், மனைவி ஒற்றுமையாக இருக்கணும்னு நினைக்கிறவங்களும், கருத்து வேறுபாடுகளால் பிரிந்து இருப்பவர்களும், பிரிகிற நிலைமையில் இருப்பவர்களும் இந்த விரதத்தை இருந்து வந்தால் கண்டிப்பாக அவர்களுக்குள் ஒற்றுமை மேலோங்கும்.
காலையில் எழுந்து நீராடி உபவாசம் இருக்கலாம். ஸ்ரீவாஞ்சியம் பக்கத்தில் உள்ளவர்களாக இருந்தால் அங்கு போய் வழிபடலாம். இல்லாவிட்டால் அருகில் உள்ள சிவன்கோவில், பெருமாள் கோவிலுக்குப் போய் தாயாரையும், இறைவனையும் வழிபட்டு வர வேண்டும்.