ஏகாதசி திதியில் பெருமாளை வழிபடுவது எப்படி…? இதை மறக்காமல் செய்யுங்க…

By Meena

Published:

ஒவ்வொரு இந்து கடவுள்களுக்கும் ஒவ்வொரு திதி உகந்ததாக இருக்கும். அப்படி மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணுவுக்கு வழிபாடு செய்ய ஏற்ற திதி ஏகாதசி திதி ஆகும். வருடத்திற்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் மாதம்தோறும் வரும் ஏகாதேசி தினத்தன்று பெருமாளை எப்படி வழிபடுவது எப்படி விரதம் இருப்பது என்பதை பற்றி விரிவாக இனிக் காண்போம்.

அந்த காலத்தில் மன்னர்கள் எல்லாம் தம் மக்களையும் நாட்டையும் பாதுகாக்க கடவுளுக்கு அஸ்வமேதை யாகம் நடத்துவார்கள். இந்த ஏகாதசி தினத்தன்று ஒருவர் விரதத்தை கடைப்பிடித்து கடவுளை வணங்கினால் அந்த அஸ்வமேத யாகம் நடத்திய பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி தான் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதை தவிர்த்து மாதத்தில் இரண்டு முறை வளர்பிறையில் மற்றும் தேய்பிறையில் ஏகாதசி திதி நிகழும்.

இந்த ஏகாதசி திதி எப்படி பிறந்தது என்ற கதை உங்களுக்கு தெரியுமா? முரண் என்ற அசுரன் தேவர்களையும் முனிவர்களையும் பாடாய்படுத்தி வந்துள்ளான். அவன் கொடுமை தாங்க முடியாமல் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள் தேவர்கள் மற்றும் முனிவர்கள். அந்த அசுரனை அழிக்க சென்ற மகாவிஷ்ணு முரணோடு சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் போர் புரிந்தாராம். போரின்போது களைப்படைந்த மகாவிஷ்ணு ஒரு குகையில் சென்று ஓய்வெடுத்தாராம்.

மகாவிஷ்ணு ஓய்வெடுக்கும் தருணத்தில் அவரை கொன்று விட வேண்டும் என்று சென்ற அசுரனை மகாவிஷ்ணுவிடமிருந்து வெளியான ஒரு சக்தி பிழம்பானது முரணை எரித்துக் கொன்று விட்டதாம். உறங்கிக் கொண்டிருந்த மகாவிஷ்ணு எழுந்து அந்த சக்திக்கு ஏகாதசி என்று நாமம் வைத்தாராம். எனவே ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் சகல நன்மைகளையும் நான் வரமாக கொடுப்பேன் என்று ஏகாதசியை தன்னுள் ஏற்றுக் கொண்டாராம் மகாவிஷ்ணு.

ஏகாதசி திதி என்று காலையில் குளித்து சுத்தமாக அன்றைய நாள் விரதம் கடைபிடிக்க வேண்டும். ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை நாள் முழுவதும் பாராயணம் செய்ய வேண்டும். முழுதாக விரதம் இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் சாப்பிடலாம். அன்றைய தினம் பூஜை அறையில் பெருமாளுக்கு அலங்காரம் செய்து தீப ஆராதனைகள் காண்பிக்க வேண்டும். மாலை வரை விரதம் இருந்து சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்தியமாக வைத்து பெருமாளை பூஜித்த பின்பு விரதத்தை நிறைவு செய்யலாம்.

பின்னர் பெருமாள் கோயில்களுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபட்டால் நோய் இல்லாத வாழ்வை, செல்வ செழிப்பை வழங்குவார் மகாவிஷ்ணு. வீட்டில் பூஜை செய்யும்போது விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மோட்சத்தை கொடுக்கும். குறிப்பாக ஏகாதசி தினத்தன்று விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாதாம். படிக்கத் தெரியாதவர்கள் இதனை ஓலிவடிவமாக வீட்டில் ஒலிக்க செய்யலாம்.