கந்த சஷ்டியின் ஆறாவது நாள் விரதம் இருப்பது எப்படி? வள்ளி திருமணத்தின் தத்துவம் என்ன?

கந்த சஷ்டியின் 6ம் நாள் (18.11.2023) முருகப்பெருமானின் 6வது முகத்தையும் வழிபடுவது பற்றியும் விரதம் எடுப்பது பற்றியும் பார்ப்போம்.

ஒருநாள் விரதம் எப்படி இருப்பது என்று பார்ப்போம். பலரும் சஷ்டி அன்று மட்டும் ஒருநாள் விரதம் இருப்பார்கள். காலையிலேயே எழுந்ததும் குளித்துவிட்டு முருகப்பெருமானின் திருவுருவப்படத்துக்கு முன் நின்று முருகா இந்த நாள் இந்த விஷத்திற்காக விரதத்தை எடுத்து இருக்கிறேன் என்று வேண்டிக்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும்.

நைவேத்தியமாக வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு, ஒரு டம்பளர் பால், சர்க்கரையோ தேனோ கலந்து வைத்து வழிபடலாம். வாய்ப்பு இருந்தால் தேன், தினைமாவு வைத்துக் கொள்ளலாம். பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். ஒருநாள் விரதம் இருப்பவர்கள் இந்த முறையைப் பின்பற்ற வேண்டும். மாலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. முடிந்ததும் விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாகக் குளிக்க வேண்டும்.

ஒருநாள் விரதம் இருப்பவர்கள் குளித்ததும் சற்கோண தீபம் ஏற்றி திருப்புகழ் பாராயணம் பண்ணி தீப, தூப ஆராதனைகள் காட்ட வேண்டும். நெய்வேத்தியமாக 6 சாதம் செய்து வைக்கலாம். தக்காளி சாதம், சர்க்கரைப் பொங்கல், புளிசாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதம் இப்படி 6 வகையான சாதங்கள் வைக்கலாம்.

இதெல்லாம் செய்ய முடியாதவர்கள் சாமிக்கு ஏதாவது ஒரு நைவேத்தியம் செய்து மாலை வழிபடுங்க. ஒருநாள் விரதம் இருப்பவர்கள் 6ம் நாள் மாலையே வழிபட்டு விரதத்தை முடித்துவிடுவார்கள். 6 நாள்களும் விரதம் இருப்பவர்கள் முழுமையாக விரதம் இருக்கணும்னா 7ம் நாள் திருக்கல்யாணம் முடிந்ததும்தான் விரதத்தை முடிக்க வேண்டும்.

6வது முகமாக அருணகிரிநாதர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா… வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று என்கிறார். முருகப்பெருமான் வள்ளியைக் கல்யாணம் பண்ணுவதற்கு வந்த அந்த அற்புதமான திருமுகத்தைப் பற்றிப் பேசுகிறார். வள்ளி என்பவள் முருகனின் உள்ளே இருக்கும் இச்சா சக்தி. அதை திருமணத்திற்காகக் கொஞ்சநாள் வெளியே வைத்து திருமணம் செய்து காட்டுகிறாள்.

சக்தி அருகில் இருந்தால் சம்ஹாரம் நடக்காது என்பதற்காக தனக்குள்ளே இருந்த சக்திகளை வெளியே வைக்கிறார். வள்ளி, தெய்வாணையை இச்சா சக்தி, கிரியா சக்தியாக வெளியே வைத்து சம்ஹாரம் முடிந்ததும் மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்கிறார். இதுதான் இந்த திருமணத்தின் தாத்பரியம்.

எப்படி உன்னில் இருந்து பிரிந்த சக்தியை மீண்டும் இணைத்துக் கொண்டாயோ, அது போல ஆன்மாவாக உன்னில் இருந்து வெளிப்பட்டு வந்த நான் இப்போது தனிப்பிறவியாக உலகில் பிறவி எடுத்துச் சுற்றிக்கொண்டே இருக்கிறேன்.

என்னை உன்னோடு சேர்த்துக்கொள். நான் எடுத்த பிறவி எல்லாம் போதும். அதனால் என்னை உன்னோடு இணைத்துக் கொள். எனக்கும் அப்படிப்பட்ட ஒரு கருணையைக் காட்டு என்று வேண்டுகிறார்.

முடிவில்லாத ஆற்றல் எல்லா ஆற்றல்களையும் உண்டாக்குகிற ஆனந்த சக்தி என்பதே ஆறாவது முகத்தின் தத்துவம். இறைவனிடத்தில் முடிவில்லாத ஆற்றல் இருக்கிறது. அதனால் அவர் எல்லாவற்றையும் தன்னுடையதாக்கிக் கொண்டு மிகப்பெரிய ஆனந்த சக்தியை வழங்குகிறார். எல்லாம் நான் அனுபவிச்சிட்டேன்.

Pazhamuthirsolai
Pazhamuthirsolai

எல்லா கடமைகளையும் முடிச்சிட்டேன். இனி எனக்கு என்ன தேவை. ஜீவன் சிவனோடு கலக்க வேண்டும். அவ்வளவு தான். இதுதான் 6வது முக தத்துவத்தில் சொல்லப்படுகிறது. இந்த ஆறாவது படைவீடு தான் பழமுதிர்ச்சோலை. கீழே அழகர் மலை உள்ளது. அதாவது மாமனார் இருக்கும் இடம்.

மேலே முருகன் வள்ளி, தெய்வாணையோடு ஆனந்தமாக இருக்கும் இடம் இதுதான். அதன் மேலே ராக்காயி அம்மன். அங்கிருந்து தான் நூபுர கங்கை வருகிறது. அங்கு சிவபெருமானோடு அம்பிகை இருக்கிறார்.