அமாவாசைகளில் பெரிய அமாவாசையாக மகாளய அமாவாசையைத் தான் சொல்வார்கள். இன்று ஒரு நாள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபடுவது வருடம் முழுவதும் வழிபட்டதற்குச் சமம்.
மகாளய அமாவாசை 2.102024 அன்று புதன்கிழமை வருகிறது. 1.10.2024 அன்று இரவு 10.35 மணிக்கு தொடங்கி 3.10.2024 அன்று அதிகாலை 12.34 மணிக்கு முடிவடைகிறது.
பித்ருலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வரப்போகும் நம் முன்னோர்களை எப்படி வரவேற்பது? பொதுவாக நம் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.
எள்ளும், தண்ணீரும் முன்னோர்களுக்கு மிக முக்கியமானது. எள் என்பதை வட மொழியில் திலன் என்பர். விஷ்ணு பகவானிடம் இருந்து அவரது அம்சமாகத் தோன்றியது எள். பெற்றோர் இல்லாத ஆண்கள் கண்டிப்பாகத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
கணவன் இல்லை என்றால் மனைவி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சுமங்கலிப் பெண்கள் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதற்குப் பதிலாகத் தங்களுக்குப் பிடித்த உணவுகளை சமைத்துப் படையலாக வைக்கலாம். அமாவாசை அன்று சுமங்கலிப் பெண்கள் விரதம் இருக்கக்கூடாது.
அன்று இரவு ஒரு கைப்பிடியாவது சோறு சாப்பிட்டு விட்டுப் படுக்க வேண்டும். அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி நம்மைக் காணவரும் முன்னோர்களை எள்ளும், தண்ணீரும் இறைத்து வரவேற்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள். சூரிய உதயத்திற்குப் பின் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிக்குள் தர்ப்பணம் செய்யலாம்.
ராகு காலம், எமகண்டம் தவிர்க்க வேண்டும். ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற கடலை ஒட்டியுள்ள ஆலயங்கள், புனித நதிக்கரைகள், அவினாசி, சிவகாசி, தென்காசி, விருதாச்சலம், வாரணாசி போன்ற புனித தலங்களில் தர்ப்பணங்கள் கொடுக்கலாம்.
மேற்கண்ட இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் அந்தணரை அழைத்துத் தானம் கொடுத்து தர்ப்பணம் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள் வீட்டில், எள்ளும், தண்ணீரும் இறைக்கலாம்.
தரையில் விரிப்பு விரித்து அமருங்கள். தாம்பூலத் தட்டை எடுத்துக்கொள்ளுங்கள். பித்தளை சொம்பு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வலது கை மோதிர விரலில் தர்ப்பைப் புல்லை அணிந்து கொள்ளுங்கள்.
உள்ளங்கையில் கருப்பு எள்ளையும், பச்சரிசியையும் எடுத்துக் கொள்ளுங்கள். பித்தளை சொம்பில் தண்ணீரை எடுங்க. வலது கையில் இறைக்கும் எள்ளை தாம்பூலத் தட்டில் இறைக்க வேண்டும். யாருக்குத் தர்ப்பணம் கொடுக்கிறீர்களோ அவரது பெயரைச் சொல்லுங்க. பெயர் தெரியாதவர்கள் ‘முன்னோர்கள் அனைவருக்கும்’ என்று சொல்லுங்கள்.
பின்பு அகத்தியர் அருளிய பித்ரு தர்ப்பணம் மந்திரமாக இந்தப் பாடலைச் சொல்லுங்க.
‘மெய்யில் விளங்கும் சோதி,
மெய்யுணர்ந்த மேல் நீத்தார்
மனம் குளிர வார்த்த
எள், நீர் ஏற்று மனம் குளிர்வீர்!
மனம் குளிர்வீர்! மனம் குளிர்வீரே! ‘
என்ற பாடலைப் பாடுங்க. இறைத்த எள், தண்ணீரை நீர் நிறைந்த நிலைகளில் சென்று கரைத்து விடுவது நல்லது. வீட்டிற்கு அருகில் உள்ள ஏரி, ஆறு, கிணறு, குளம் போன்ற இடங்களுக்குச் செல்லலாம்.
பின்னர் வீட்டுக்கு வரும் முன்னோர்களுக்கு நம் வாசலில் உள்ள கோலம் தடையாக இருக்கும். அதனால் அன்று மட்டும் கோலம் போடக்கூடாது. முன்னோர்களின் படங்களை சுத்தம் செய்து அதற்கு மாலையிட்டு வாழை இலை படையலிட்டு கற்பூரம் காட்டி வழிபட வேண்டும். அமாவாசை அன்று காகத்திற்கு உணவு கொடுத்து விட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.