வருகிறது மகாசிவராத்திரி… விரதம் இருக்கும்போது இதைச் செய்ய மறந்துடாதீங்க..!

By Sankar Velu

Published:

ஆண்டுதோறும் பல இந்துப்பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் வருகின்றன. இவை ஒவ்வொன்றும் நமக்கு வாழ்வியல் நன்னெறிகளைப் பற்றிச் சொல்லித்தருகின்றன. இவை வருவதால் நமக்கு செலவு தானே என மட்டும் நினைத்துவிடாதீர்கள்.

குடும்ப ஒற்றுமையையும் இந்தப் பண்டிகைகள் தான் நமக்குத் தருகின்றன. அன்று மட்டும் தான் நாம் குடும்பம் குடும்பமாக ஒற்றுமையாக சேர்ந்து கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட முடிகிறது. அந்த வகையில் விரைவில் மகாசிவராத்திரி வருகிறது. இந்த நாளில் என்னென்ன சிறப்புகள், விரதம் இருப்பது எப்படி என்று பார்ப்போம்.

அம்பிகைக்கு நவராத்திரி எவ்வளவு சிறப்பானதோ அதே போல ஈசனுக்கு மகாசிவராத்திரி சிறப்பு. இந்த மகாசிவராத்திரிக்கு விரதம் இருக்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது. அவனருளாலே அவன்தாழ் வணங்கி என்ற வாக்கிற்கேற்ப சிவபெருமானின் அருள் இருந்தால் மட்டுமே இந்த மகாசிவராத்திரிக்கு விரதம் இருக்கும் பாக்கியம் கிடைக்கும்.

Lord Shiva
Lord Shiva

இந்த ஆண்டு மார்ச் 8 (வெள்ளிக்கிழமை) அன்று வருகிறது. சிவராத்திரிக்கு விரதம் இருப்பது எப்படின்னு தெரியுமா?

சிவராத்திரி அன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு பஞ்சாட்சரம் என்று சொல்லும் சிவாயநம என்ற மந்திரத்தை சொல்லி சிவனை வணங்க வேண்டும். காலையில் சாமிக்கு விளக்கேற்றி வைத்து தேவாரம், திருவாசகம் பாராயணம் பண்ணலாம். 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு அல்லது 1 டம்பளர் பால் வைத்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். அதன்பின் நாம் விரதம் இருக்க வேண்டும். மதியம், மாலை சாப்பிடக்கூடாது.

முழுநேரமும் விரதம் இருக்க முடியுமானால் அன்று முழுவதும் விரதம் இருங்க. அல்லது உடல்நலம் இல்லாதவர்கள் பழங்கள், அவல் சாப்பிடலாம். அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று அங்கு நடக்கும் 4 கால பூஜைகளிலும் கண்விழித்து சிவபெருமானை வழிபடலாம்.

கோவில்ல கொடுக்குற பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். அதே போல வீட்டிலும் சர்க்கரைப்பொங்கல் அல்லது லெமன் சாதம் செய்து அதை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து கோவிலுக்குக் கொண்டு போய் வைத்து வழிபட்டு அங்குள்ள அடியார்களுக்குக் கொடுத்தால் ரொம்ப புண்ணியம். சிவராத்திரி அன்று கண்விழித்து விரதம் இருந்ததும் மறுநாள் அசதியாக இருக்கு என தூங்கிவிடக்கூடாது. இப்படி வழிபடுவதால் சிவபெருமானின் அருளும், குலதெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கடினமான விரதங்கள் இருப்பது என்பது அவரவர் உடல்நிலையைப் பொருத்தது. உடல்நிலை பலகீனமானவர்கள் அப்படி இருக்க வேண்டிய தேவையில்லை. அவரவர் வசதிக்கேற்ப எளிமையான முறையில் விரதம் இருந்து கொள்ளலாம்.