கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் நமது ஆகம விதிப்படி கோவில்களைக் கட்டியிருப்பாங்க நம் முன்னோர்கள். அதற்கு முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வழிபாடுகளும் முறையாக நடந்து வரும். கோவில் கோபுரங்களின் உச்சியில் கலசங்கள் இருக்கும். இவற்றில் கூரிய முனை காணப்படும்.
இது ஏன்னா பிரபஞ்சத்தில் இருக்கும் உயிர்சக்தியை முழுமையாகக் கிரகிப்பதற்காகவே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சக்தி கோவிலில் சாமி கும்பிட வரும் நமக்கும் கிடைக்கும். இதனால் புத்துணர்ச்சி, மனதில் தெளிவு, நோய் எதிர்ப்பு சக்தி என அனைத்தும் கிடைக்கிறது. இதற்காகத் தான் அப்பவே நம்ம பெரியவங்க கோபுர தரிசனம் கோடி புண்ணியம்னு சொன்னாங்க.

கோபுரத்தில் இருப்பதைப் போலவே ஒவ்வொரு கர்ப்பக்கிரகத்தின் மேலும் கலசங்கள் வைக்கப்பட்டு இருக்கும். இதுவும் அப்படித்தான். பிரபஞ்ச ஆற்றலை கிரகித்து கலசத்தின் நேராகக் கீழே கர்ப்பக்கிரகத்தில் மூலவராக வீற்றிருக்கும் இறைவனின் பீடத்திற்கு வரும். அதே போல ஒவ்வொரு கோவிலிலும் கர்ப்பக்கிரகத்தின் கிழக்கு, வடக்கு திசைகளில் அபிஷேகம் செய்த நீர் செல்வதற்கான பாதை அமைக்கப்பட்டிருக்கும்.
இதிலிருந்து வெளிவரும் அபிஷேக நீரிலும் அந்த சக்தி கலந்து இருக்கும். அதனால் தான் சாமி கும்பிட்டு விட்டு கோவிலை வலம் வரும்போது நாம் அந்த நீரைக் கையில் ஏந்தி நம் தலையில் தெளித்துக் கொள்கிறோம். சிலர் கண்களில் ஒற்றிக்கொள்வர்.
அப்படிப்பட்ட மகத்தான சக்தியை ஒட்டுமொத்தமாகத் தருவது கோவில் கும்பாபிஷேகம். நாளை நடைபெற உள்ள பழனி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

அதேபோல பலராலும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படும். அவர்கள் வீட்டில் இருந்து எளிமையாக வழிபடும் முறை எப்படி என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
வீட்டில் இருந்தபடி டிவியில் பார்த்து ரசிக்கலாம். கும்பாபிஷேகத்தின்போது கலசத்தில் புனித நீர் விடும் சமயம் இதை செய்யுங்கள். இந்த சின்ன விஷயத்தை செய்யும் போது உங்களது மனதும், இறைவனின் அருளும் பரிபூரணமாக இருப்பதை நாம் உணர முடியும்.
முருகருடைய படத்திற்கு மலர் மாலை போட்டு, சந்தனம், குங்குமம் வைத்து ஏதாவது ஒரு நைவேத்தியம் தயார் பண்ணிக்கொள்ளுங்கள்.

கலசத்தில் புனித நீர் விடும்போது உங்க வீட்டில் உள்ள முருகப்பெருமான் படத்துக்கு தீப தூப ஆராதனைகள் காட்டி வழிபடுங்க. நாளை பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடக்க இருக்கிறது. இப்படி முருகப்பெருமானின் படத்தை வைத்து பூஜை செய்து மனதார வழிபடுகையில் நாம் கும்பாபிஷேகம் சென்று இறைவனை வழிபட்டதற்கான பலன் கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல் இறைவனின் அனுக்கிரகமும், மனதிருப்தியும் கிடைக்கும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



