பெருமாளை வழிபாடு பண்ணுவதற்கு உயர்ந்த விரதம் என்றால் அது ஏகாதசி விரதம் தான். விரதங்களிலேயே மிக உயர்ந்த விரதம் ஏகாதசி விரதம் தான். அப்படி என்ன இந்த விரதத்தில் சிறப்பு என்று பார்ப்போமா…
அஸ்வமேத யாகம் பண்ணின பலன் ஒருவருக்கு கிடைக்க வேண்டும் என்றால் ஏகாதசி விரதம் இருக்கலாம். நோய், வறுமை நீங்கி செல்வ வளம் பெருக வைக்கும். வாழ்க்கையில் மகாலெட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
என்ன வேண்டி எந்த நோக்கத்திற்காக இந்த விரதம் இருக்கிறார்களோ அவர்களது தேவை நிச்சயமாகப் பூர்த்தியாகும். இதெல்லாம் வாழும் காலத்திற்காக மட்டும் பூர்த்தியாவது. ஆனால் வாழ்க்கைக்குப் பிறகும் இந்த ஏகாதசி விரதம் பலன் கொடுக்கிறது.
எப்படி என்றால் அவர்களுக்கு வைகுண்டத்தில் உறுதியாக இடத்தைப் பெற்றுக் கொடுக்கச் செய்கிறது இந்த ஏகாதசி விரதம். அதற்கு இந்த வழிபாடு நிச்சயம் உதவுகிறது.
வாழ்க்கைக்குப் பிறகு எல்லோரும் எதிர்பார்க்கக்கூடியது இந்த வைகுண்டபதவி தான். அதைப் பெற்றுத்தரும் உன்னதமான வழிபாடு இதுதான்.
மொத்தம் 25 ஏகாதசி உள்ளது. இந்த விரதத்தை முறைப்படி கடைபிடிப்பவர்களுக்கு அனைத்துப் பலன்களும் கிடைக்கிறது.
கடைபிடிப்பது எப்படி?
இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது என்று பார்க்கலாம்.
முதல் நாள் தசமி அன்று மதியத்துடன் சமைத்த சாப்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும். இரவு ஏதாவது பழம், பால் சாப்பிடலாம். மறுநாள் காலை எழுந்ததும் பெருமாளுக்குத் துளசியால் அர்ச்சனை பண்ண வேண்டும்.
முதல் நாளே துளசியைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். பக்கத்தில் ஏதாவது கோவில் இருந்தாலும் போய்ட்டு வரலாம். அன்று முழுவதும் விரதம் இருக்க வேண்டும். எதுவுமே சாப்பிடக்கூடாது.
ஆரோக்கியமாக இருப்பவர்கள் நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். தண்ணீரில் கூட துளசி இலைகளைப் போட்டுத் தான் குடிக்க வேண்டும்.
நாளை மறுநாள் ஏகாதசி
இந்த அற்புதமான நாள் வரும் ஞாயிறன்று 20.11.2022 அன்று வருகிறது. அதனால் நாளை தசமி…முதலே நினைவு வைத்து மேலே சொன்னபடி விரதம் இருங்கள். உங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
மறுநாள் காலை எழுந்து குளித்து விட்டு சமைத்து சாமிக்கு நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். இப்படி சாப்பிடுவதற்கு பாரனை என்று பெயர்.
இப்படி 3 நாள்களுடன் தொடர்புடைய விரதத்தை இருப்பவர்களுக்குக் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். எதை வேண்டி இருக்கிறோமோ அது நிச்சயமாகக் கைகூடும்.
25 ஏகாதசியும் இருக்க முடியாதவர்கள் ஒரு ஏகாதசி முறையாக விரதம் இருந்தாலும் சரி. நிச்சயமாக அதற்கான பலன் மற்றும் நாராயணரின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். சில வருடங்களில் மட்டும் 25 ஏகாதசிகள் வரும். சித்திரை மாதம் பாபமோஹினி, காமதாவும், வைகாசியில் வருதினி, மோகினியும், ஆனியில் அபரா, நிர்ஜலாவும், ஆடியில் யோகினி, சயன ஏகாதசிகளும் வருகின்றன.
அதே போல ஆவணியில் காமிகை, புத்திரதாவும், புரட்டாசியில் அஜா, பத்மநாபாவும், ஐப்பசியில் இந்திரா, பாங்குசாவும் வருகிறது.
கார்த்திகையில் ரமா, பரபோதினியும், மார்கழியில் உற்பத்தி, மோட்ச (வைகுண்ட ஏகாதசி), தை மாதம் ஸபலா, புத்ரதாவும், மாசி மாதம் ஷடதிலா, ஜயாவும் வருகிறது.
கடைசி இரு ஏகாதசிகள் சாப விமோசனத்தை நீங்கச் செய்கிறது. பங்குனியில் விஜயா, ஆமலதியும் செய்கையில் நமக்கு கோதானம் செய்த பலன் கிடைக்கிறது.
ஒவ்வொரு மாதமும் முதலில் சொல்லிய ஏகாதசி தேய்பிறையிலும் அடுத்து சொல்லியது வளர்பிறையிலும் வருகிறது. அந்தவகையில் நாளை மறுநாள் வரும் ரமா ஏகாதசியில் விரதம் இருந்து மிக உயர்ந்த நன்மைகளைப் பெறுவோம்.