வாழ்நாளில் ஒரு தடவையாவது ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வர வேண்டும் என்று பக்தர்கள் பலரும் நினைப்பார்கள். ஆனால் அது சாதாரண விஷயம் அல்ல. மற்ற கோவிலுக்குச் செல்வது போல எளிதில் சென்று விட முடியாது. அதுக்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்.
அதாவது நாம் விரதம் இருக்கவும், வேலை செய்யவும், வீட்டில் ஒத்துழைக்கவும், பொருளாதார வசதியும் என எல்லா சூழலும் ஒத்துவர வேண்டும். முக்கியமாக மனதுக்குள் ஆழமாக ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். சரி. இப்போ ஐயப்பன் கோவிலின் சிறப்புகளைப் பற்றிப் பார்ப்போமா….
ஐயப்பன் தியானம் செய்த இடம்
ஐயப்பன், சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வருபவர். ஐயப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது. சபரிமலை, கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலம். மகிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என கூறப்படுகிறது.
அமைவிடம்
சுவாமி ஐயப்பன் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல், தை மாதம் முதல் நாள் வரை ஏறத்தாழ இலட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
ஐயப்பனின் வேறு சில பெயர்கள்
மணிகண்டன், பூதநாதன், பூலோகநாதன், தர்மசாஸ்தா, எருமேலிவாசன், ஹரிஹரசுதன், ஹரிஹரன், கலியுகவரதன், கருணாசாகர், லக்ஷ்மண பிராணதத்தா, பந்தளவாசன், பம்பாவாசன், ராஜசேகரன், சபரி, சபரீஷ், சபரீஷ்வரன், சபரி கிரீஷ், சாஸ்தா, வீரமணி.
இந்த பெயர்கள் அனைத்தும் அப்பன் ஐயப்பனின் முக்கியமான பெயர்கள். இந்த பெயரை சொல்லும்போது துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும். சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அர்ச்சனை
ஐயப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும். சபரிமலை ஐயப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை சீட்டு பின்பக்கத்தில் உங்கள் ராசி, நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் அர்ச்சனை செய்து தருவார்கள்.
சபரிமலையில் பக்தர்கள் கொடுக்கும் பொருட்கள், சன்னிதானம் அருகே வாரம் இருமுறை ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கலாம். சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் திறந்து இருக்கும். அந்த நாட்களைத் தெரிந்து கொண்டு பக்தர்கள் சென்று வரலாம்.
அஷ்டாபிஷேகம்
சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும். ஐயப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம். ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.
ஆராட்டு உற்சவம்
சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.
சபரிமலை ஐயப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு ஐயப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாதவர்கள் இந்த சமயத்தில் ஐயப்ப உற்சவரை தரிசிக்கலாம்.
சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம்.
பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை ஐயப்பனின் ஆபரணப் பெட்டியை சுமந்துவர 15 சங்கங்கள் உள்ளன. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் என்பதைப் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது