தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலம் தான் மார்கழி மாதம். அதனால்தான் நாம் வழிபாட்டுக்குரிய மாதமாகக் கொள்கிறோம். ஏன்னா அப்போது நாம் கடவுளை வணங்கினால் தேவாதி தேவர்களையும் வணங்கிய பலன் கிட்டும். இந்த மாதத்தில் என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாதுன்னு பார்க்கலாம்.
கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யலாம். புதுவீடு குடிபோகக்கூடாதுன்னு சொல்வாங்க. ஆனால் தவிர்க்க முடியாதபட்சத்தில் கடவுளின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டுப் போகலாம். ரொம்பநேரம் தூங்கக்கூடாது.
சூரிய உதயத்துக்கு முன்பாவது மார்கழி மாதத்தில் எழுந்து விட வேண்டும். அதிகாலையில் படிப்பதோ, இறைவழிபாடைச் செய்வதோ மனதுக்கு நிம்மதியைத் தரும். இரவில் கோலம் போடக்கூடாது. அதிகாலையில்தான் கோலம் போட வேண்டும். அனைத்துவிதமான தெய்வ வழிபாடுகளையும் செய்யலாம். புது வாகனம் வாங்கலாம்.
சீமந்தம் செய்யலாம். சஷ்டியப்பபூர்த்தியும் செய்யலாம். புது தொழில் அவசரமாகத் தொடங்க வேண்டி இருந்தால் அவரவர் சவுகரியத்துக்கு ஏற்ப அதை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. மார்கழி மாதத்தில் தெய்வ சிந்தனை உயர்நிலையில் இருந்தால் நல்ல மனநிலையும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.
இந்த மாதத்தில் நாலு விஷயங்களை அனைவரும் அவசியம் செய்ய வேண்டும். அருகில் உள்ள கோவிலுக்கு அரை லிட்டர் பால் வாங்கிக் கொடுத்து காலையில் நடைபெறும் தனுர்பூஜையில் கலந்து கொள்ளலாம். வழக்கம்போல அன்னதானத்தை மறந்து விடாதீங்க.
குறைந்தபட்சம் இந்த மாதத்தில் நாலு நாளாவது அன்னதானம் கொடுக்கலாம். தினமும் காலையில் வாசலில் 2 விளக்கை ஏற்றி வைங்க. வாசலில் கோலமிட்டு பூசணிப்பூ, செம்பருத்திப்பூ, அருகம்புல் வைக்கலாம். மனதில் குழப்பம் உள்ளவர்கள் அதிகாலை நேரத்தில் 10 நிமிடம் உட்கார்ந்து தியானம் பண்ணுங்க.
அதற்கு முன் சிவபுராணத்தைப் பாராயணம் செய்துவிட்டு தியானம் பண்ணுங்க. விளக்கேற்றி விட்டு சாம்பிராணி போட்டு விட்டு சிவபுராணம் படித்தால் மனதில் அப்படி ஒரு தெளிவும், அமைதியும் உண்டாகும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



