தீபாவளி தினத்தில் கங்கா ஸ்நானம் செய்வதால் இத்தனை நன்மைகளா? பட்டாசு வெடிப்பது ஏன்னு தெரியுமா?

By Sankar Velu

Published:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குதூகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகை தீபாவளி. அதே போல புதுமணத்தம்பதிகளுக்கு தலைதீபாவளியாகக் கொண்டாடி மகிழ்வர்.

சிவபெருமானை வழிபடக்கூடிய அஷ்டவிரதங்களுள் ஒன்று இந்த தீபாவளி திருநாள். இந்த நாளில் தான் கேதார கௌரி நோன்பும் வருகிறது.

இந்த ஆண்டு 12.11.2023 அன்று வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளிப்பண்டிகை வருகிறது. இந்த நாளை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று பார்க்கலாம்.

பண்டிகைகளிலேயே ரொம்ப சீக்கிரமா அதிகாலையிலேயே நிறைவு செய்யும் பூஜை தீபாவளி.

காலையில் செய்யக்கூடிய இந்த கங்கா ஸ்நானம் அவ்வளவு விசேஷமானது. தீபாவளி அன்று தலைக்கு வைக்கக்கூடிய நல்லெண்ணையில் மகாலெட்சுமி வாசம் செய்கிறாள். சீயக்காய்த்தூளில் சரஸ்வதி தேவி வாசம் செய்கிறாள். சுடுநீரில் கங்கா தேவியும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரிமாதாவும் வாசம் செய்கிறாள்.

மலர்களில் யோகியர்களும், புத்தாடையில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள். இனிப்புல அமிர்தமும், லேகியத்தில் தன்வந்திரி பகவானும் வாசம் செய்கிறார். தீபத்துல பரமாத்மாவும், பட்டாசு வெடிக்கும் நெருப்புப்பொறியில் ஜீவாத்மாவாகிய நாமும் வாசம் செய்கிறோம்.

மனிதப்பிறவியின் முக்கியமான நோக்கமே ஜீவாத்மாவாகிய நாம் பரமாத்மாவுடன் போய்ச் சேர வேண்டும். அப்படி என்றால் நாம் செய்கிற வினைகளை எல்லாம் குறைக்க வேண்டும். அதற்கு நன்மைகள் நிறைய சேர வேண்டும். அந்த நன்மைகளை நமக்கு சேர்ப்பதற்குத் தான் இதுபோன்ற விரத நாள்.

இந்தத் தீபாவளிக்கு நாம் பயன்படுத்தும் பொருள்கள் எல்லாம் வெறும் பொருள்கள் அல்ல. தேவாதி தேவர்களும் அன்று மட்டும் வாசம் செய்யும் பொருள்கள். அன்றைய தினம் அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குள் கங்கா ஸ்நானம் பண்ண வேண்டும்.

கங்கா ஸ்நானம் எப்படி பண்ண வேண்டும் என்றால் வீட்டில் யார் பெரியவர்களோ அவர்கள் கையால் நாம் தலைக்கு எண்ணையும், அரப்புப் பொடியும் வைத்துக் கொள்ள வேண்டும். சுடுதண்ணீரில் தான் அன்று குளிக்க வேண்டும். இது குளிருக்காக அல்ல. கங்கா தேவியின் அருளைப் பெறுவதற்காக.

குளிச்சிட்டுப் புத்தாடையை உடனே சிலர் போடுவாங்க. சிலபேரு சாமிக்கு படைச்சிட்டுப் போடுவாங்க. எது உங்களுக்குப் பழக்கமோ அதே மாதிரி செய்யுங்க.

இந்தநாளைக்குப் பேரே தீப ஒளித்திருநாள். அதனால் எவ்வளவு தீபங்கள் ஏற்ற முடியுமோ ஏற்றிக் கொள்ளுங்கள். விளக்குகளை வரிசையாக ஏற்றி வைப்பதே தீபாவளி. ஆவளி என்றால் வரிசை. இவற்றில் ஒன்று கண்டிப்பாக நெய் தீபமாக இருக்க வேண்டும். இலை முழுக்க இனிப்பு, கார பலகாரங்கள் படையலாக வைத்துக் கொள்ள வேண்டும். புத்தாடையை ஓரமாக வைத்துக் கொள்ள வேண்டும். 2 பட்டாசு படைக்க வேண்டும்.

Lord Shiva
Lord Shiva

விளக்குகளை ஏற்றி அந்த ஒளியில் நாம் சிவபெருமானை வணங்க வேண்டும். சிவபுராணம் பாராயணம் பண்ணுங்க. அனைவரும் சேர்ந்து சிவபெருமானை வேண்டி நன்றி சொல்லி முழுமையாக வழிபட வேண்டும். பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க.

பட்டாசு கொளுத்துங்க. இயலாதவர்களுக்கும் நாம் உதவி செய்யும் நல்ல நாள் தான் இது. நம்மைச் சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு நாம் உதவி செய்தால் கண்டிப்பாக நமக்கு இறைவனின் அருள் கிடைக்கும்.