ஓணம் பண்டிகை வரும் வியாழக்கிழமை (8.9.2022) அன்று கொண்டாடப்படுகிறது.
கேரளாவின் அறுவடைத் திருவிழா. இது வெளிநாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களை கவர்ந்து இழுக்கிறது. இந்த பருவகாலத்தில் வழிபடுதல், இசை, நடனம், விளையாட்டு, படகு போட்டி மற்றும் பல வகையான உணவு வகைகள் பங்கு வகிக்கும். இந்த விழா ஆகஸ்டு இறுதி அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் தொடங்கும்.
இது ஒரு அறுவடைத் திருவிழா. ஓராண்டு காலத்திற்கான கடின உழைப்பிற்காகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் திருச்சூரில் மிகப்பெரிய ஊர்வலம், பம்பை ஆற்றில் வியப்பூட்டும் படகுப்போட்டிகள் நடைபெறும்.
பெண்கள் ஒன்றாக சேர்ந்து ரங்கோலி மற்றும் பூக்களால் கோலம் போடுவர். ஓணம் என்பது மகாபலிச்சக்கரவர்த்தியின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
முன்னொரு காலத்தில் மகாபலிச்சக்கரவர்த்தி கேரளாவை ஆண்டு மக்களைக் காத்து வந்தார். ஓணம் நல்லாட்சி பெறும் அரசு மற்றும் சுதந்திரத்தைக் குறிக்கிறது.
ஓணம் அன்று மகாபலிச்சக்கரவர்த்தி கேரள மக்களைப் பார்வையிட வருவதாக ஐதீகம். கேரள மக்கள் இப்பண்டிகையை ஒட்டி அவரவர் வீடுகளை சுத்தம் செய்வார்கள். ஓணத்தன்று புத்தாடை உடுத்தி மகிழ்வர்.
பல வகையான உணவுகளைத் தயார்செய்து தலைவாழை இலையில் பரிமாறுவர். வீடுதோறும் வாசல்களை பூக்களால் ஆன கோலம் அலங்கரிக்கும். இதை அத்தைப்பூ கோலம் என்பர். மகாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும் பொருட்டு வீடுதோறும் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
ஓணம் தினத்தன்று முந்தைய நாள் பாரம்பரிய வழிபாடுகள் நடக்கும். அன்று பெரும் விருந்துகள் கொண்டாடி மகிழ்வார்கள். இந்த உணவுகளில் சிறப்பானது பாயாசம்.
ஓணத்தன்று அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இந்தப்பண்டிகையில் நடத்தப்படும் பெரிய படகு பந்தயத்தின் பெயர் வல்லம் கழி. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு டிரம்ஸ் மற்றும் தாளங்களுக்கு ஏற்றவாறு ஓட்டுவார்கள்.
இதில் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு படகுக்கும் மேல் பட்டுக்குடையும் அதிலிருந்து தங்க நாணயங்களும் தொங்கவிடப்படும். இதில் வெற்றி பெற ஒவ்வொரு படகும் போட்டி போட்டுக்கொண்டு செல்வது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.
ஓணம் இந்துக்களின் பண்டிகை தான் என்றாலும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுடனும் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா இனம், மதம் பாகுபாடின்றி அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
இந்தத் திருவிழாவையொட்டி ஆலப்புழாவில் படகுப் பந்தயம் நடைபெறுகிறது. இந்தப்பந்தயம் பம்பை நதியில் நடக்கிறது. இங்கு கிருஷ்ணன் மற்றும் அர்ச்சுனன் கோவில்கள் உள்ளன. படகுப்பந்தயம் பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் நடைபெறும்.
பம்பா நதியின் கரையோரம் ஏராளமானோர் குவிந்து இருந்து இந்தப் போட்டியை உற்சாகப்படுத்துவர். இந்த நதிக்கரை ஓரம் உள்ள குக்கிராமத்தினர் இந்தப் போட்டியில் கலந்து கொள்வர். இந்தப்பந்தயத்தில் போட்டி என்பதை விட திருவிழாவின் ஓர் அங்கம் என்றே கூறலாம்.
ஒரு கிராமம் வெற்றி பெற்றால் அந்த மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் எவ்வித பகைமை உணர்வையும் ஏற்படுத்துவதில்லை. 4 மாலுமிகளும் 100 துடுப்பு போடுபவர்களும் 25 பாடகர்களும் இந்த 100 அடி பாம்பு போல நீண்டு காணப்படும் சுங்கன் வல்லம் எனப்படும் படகுகளில் நிறைந்து இருப்பார்கள்.
இந்தப்படகுகள் துவக்கத்தில் இருந்து முடியும் வரை ஆற்றில் போகும்போது பார்ப்பதே தனி அழகு. பாட்டும், ஆரவாரமும் விண்ணைப் பிளக்கின்றன. மக்கள் குதூகலம் பொங்க உற்சாக வெள்ளத்தில் மிதப்பர். வெகு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட படகுகள் தண்ணீரில் செல்வது நம் கண்களுக்கு விருந்து.
படகு ஓட்டுபவர்கள் வெள்ளை வேஷ்டி, தலைப்பாகை சகிதம் காணப்படுவர். அதேபோல் யானைகளுக்கு அலங்காரம் செய்து ஊர்வலம் வருவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஓணத்திருநாளில் பெரியோர்களின் ஆசி பெற்று நாமும் கொண்டாடி மகிழ்வோம்.
இனிய ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.