கடலுக்குள் சிறையிருந்த வருணபகவானை மீட்ட சிவபெருமான்….! மாசி மகத்தில் தீர்த்தமாடுவது ஏன்னு தெரியுமா?

தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புப் பெற்றது. அவற்றில் ஒன்று மாசி மாதம். இந்த மாதத்தைக் கடலாடும் மாதம், தீர்த்தமாடும் மாதம் என்று சொல்வார்கள்.

12 வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகத்தை மகாமகம் என்றும், வட இந்தியாவில் கும்பமேளா என்றும் கூறுவர். இவ்விழாவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வர்.

மாசி மாதத்தில் தீர்த்தமாடல் தோன்றியது எப்படி என்று தெரியுமா? அதற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு.

ஒருமுறை சமுத்திர ராஜாவான வருணபகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதனால் அவர் கட்டப்பட்டு கடலில் வீசப்பட்டார். இதன் காரணமாக வருண பகவானால் செயல்படவே முடியவில்லை. வறட்சியும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. அனைத்து உயிர்களும் துன்பம் அடைந்தன. தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வருணபகவானை விடுவிக்கும்படி வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் வருணபகவானை விடுவித்தார். அவர் கடலில் இருந்து விடுதலை பெற்று வெளிவந்த நாள் மாசி மகத் திருநாள்.

அப்போது வருணபகவான் மனமகிழ்ந்து சிவபெருமானிடம் வரம் ஒன்று கேட்டார். தான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடலில் இருந்தபடியே சிவனை வணங்கியதால் தோஷம் நீங்கியது. அதுபோன்று மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வணங்குபவர்களின் பாவ வினைகள், பிறவிப் பிணிகள், துன்பங்கள் யாவும் நீங்கி அவர்கள் உயர்வு பெற அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். வருணபகவானுக்கு அவ்வரத்தையே சிவபெருமான் வழங்கினார்.

Varuna Bhagavan
Varuna Bhagavan

அன்று முதல் தீர்த்தமாடல் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது. ஆறு, கடல், ஏரி, குளம் என நீர்நிலைகளில் நீராடலாம். மாசி மகத்தன்று பிரசித்திப் பெற்ற புண்ணிய தலங்களான ராமேஸ்வரம், திருவையாறு, வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் செய்வது நல்லது.

இம்மாதத்தில் எல்லா நாள்களிலும் புனித நீராடுவது நல்லது. கங்கை, யமுனா, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, தாமிரபரணி போன்ற இடங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடலாம்.

புனித நீராடுபவர்கள் ஒருமுறை மூழ்கினால் பாவங்கள் விலகும். 2ம் முறை மூழ்கினால் சொர்க்க பேறு கிடைக்கும். 3ம் முறை மூழ்கி எழுந்தால் அவரது புண்ணியத்திற்கு ஈடே கிடையாது.

நீராட முடியாதவர்கள் மாசி மகத்தன்று சிவசிந்தனையுடன் சிவபுராணம் படிக்கலாம். மாசி மகம் மகத்துவம் நிறைந்தது. ஏனென்றால் சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாள். கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் கொண்டு வெளிக்கொணர்ந்த நாளும் இந்த மாசி மகம் என்று புராணங்கள் கூறுகிறது.

திருமால் மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்ததும் மாசி மகம் தான். அன்னதானத்தின் பெருமையை உணர்த்துவதும் இந்த நாளில் தான். உயர்படிப்பு படிக்க விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மகத்தில் தொடங்குவதுதான் உத்தமம்.

Ambikai
Ambikai

உமாதேவியார் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் தான் தட்சணின் மகள் தாட்சாயிணியாக அவதரித்தாள். இந்த நாளில் அம்பிகையைக் குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட்டால் இன்பமும், வெற்றியும் கிடைக்கும். கல்விக்குரிய கலைமகளையும் இந்நாளில் வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம்.

உமாமகேஷ்வரனையும், மகாவிஷ்ணுவையும், முருகனையும் வணங்க உகந்த நாள் இது. இந்த மாதத்தில் நாம் செய்யும் எந்தக் காரியமும் இரட்டிப்புப் பலனைத் தரும். மாசி மகத்தில் விரதமிருந்து நீராடினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாசி மகத்தில் நீராடுபவர்களுக்கு மறுபிறவி கிடையாது. மாசி மகம் நீராடல் பிதுர்மகாஸ்தானம் என்கிறது சாஸ்திரங்கள்.