7ம் நூற்றாண்டில், அதாவது கலியுகம் பிறந்து 98-வது நள வருடத்தின் ஆடிமாதம் வளர்பிறையில், செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவதரித்தவர் ஆண்டாள். பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரால் மகாலட்சுமியின் அம்சமாக நந்தவனபூமியில் கண்டெடுக்கப்பட்ட அற்புத தெய்வீக மங்கை அவர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்று ஸ்ரீவில்லிப்புத்தூர். இங்கு பெருமாள் அடியவரான விஷ்ணு சித்தர் உருவாக்கிய நந்தவனத் தோட்டத்தில், மாசற்ற துளசிசெடியின் கீழ் அழகிய பெண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை, பின்னாளில் பெரியாழ்வார் என்று அழைக்கப்பட்ட விஷ்ணு சித்தர் எடுத்து, கோதை என்று பெயரிட்டு வளர்த்தார்.
சிறு வயதிலிருந்தே கண்ணன் மீது அதீத காதல் கொண்டு, எந்நேரமும் அவன் நினைவில் பாக்களைப் பாடியபடி வளர்ந்தாள், கோதை. பெரியாழ்வார் தான் வழிபடும் அரங்கனுக்கு சூட்ட, நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் புத்தம் புதிய மலர்களை பறித்து வந்து அதைத் தொடுத்து மாலையாக்கி வைப்பார். அதை அவர் அறியாமல் ‘தான் நேசிக்கும் கண்ணனுக்கு அம்மாலை பொருத்தமானதுதானா?’ என்று அறிய தன் கழுத்தில் சூடி அழகு பார்ப்பாள் ஆண்டாள்.
ஒரு நாள் இதைக் கண்ட பெரியாழ்வார் மனம் வருந்தினார். ‘தன் பெண் சூடிய மாலையையா கண்ணன் அணிந்தான்?’ என்ற கவலையில் வாடினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணன், ‘கோதை சூடிய மாலையே தனக்கு விருப்பமானது’ என்றார். அன்று முதல் ஆண்டாள் ‘சூடிக் கொடுத்த சுடர்கொடி’ ஆனாள்.
ஆண்டாளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய, அவளோ ‘நான் கண்ணனையே மணப்பேன்’ என்று உறுதி கொண்டாள். பின்னர் பிரம்ம முகூர்த்தத்தில் கண்ணனை மனதில் நினைத்து பாவை நோன்பு ஏற்று விரதம் இருக்கத் தொடங்கினாள்.
பெரியாழ்வார் என்ன செய்வதென்று அறியாமல், அரங்கனிடம் சென்று வேண்டினார். அரங்கனோ, ‘திருமணக்கோலத்தில் மகளுடன் திருவரங்கம் வந்து சேர்’ என்று அருளினார். அதன்படி மேளதாளம் முழங்க மகளை திருவரங்கம் அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். ஸ்ரீரங்க கோவில் கருவறைக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்த ஆண்டாளை, அரங்கநாதப் பெருமாள் தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



