மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ராம அவதாரம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
ராமபிரான் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளை தான் ராம நவமி என்று கூறுகின்றோம். அந்த வகையில் ராம நவமி இன்று (30.03.2023) ராமநவமியை நாம் கொண்டாடி வருகிறோம்.
ராமர் பிறந்த கதை
அயோத்தியை ஆண்ட மன்னர் தசரத சக்கரவர்த்தி. இவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள். ஆனால் வெற்றிக்கொடி கட்டிப் பறந்த தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
தசரத சக்கரவர்த்தியின் குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம்? என்ற ஆலோசனையை கேட்டார். முனிவர் சொன்ன ஆலோசனை படி தன்னுடைய அரண்மனையில் புத்ர காமேஷ்டி யாகத்தை நடத்த முடிவு செய்தார்.

யாகம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், யாகத் தீயிலிருந்து யக்னேஸ்வரர் தோன்றி, பாயாசம் நிறைந்த ஒரு குடுவையை தசரத சக்கரவர்த்தியின் கையில் கொடுத்தார். அந்த குடுவையில் இருக்கும் பாயாசத்தை மன்னரின் மனைவிகள் அருந்த வேண்டும் என்ற கட்டளையையும் இட்டார் யக்னேஸ்வரர்.
தசரதனின் மனைவிகளும் பாயாசத்தை அருந்தினார்கள். அதன்பின்பு பங்குனி மாதம் நவமி தினத்தில் கோசலை ராமபிரானை பெற்றெடுத்தாள். கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணனும், சத்ருக்கனனும் மகனாக பிறந்தார்கள்.
மன்னர்களுக்கு உதாரணபுருஷர்
ராமர் வசிஷ்ட முனிவரிடம் வித்தைகளை கற்றுத் தேர்ந்தவர். ராம பானத்திற்கு இணை வேறு ஏதும் இல்லை. ராமர் வாழ்க்கையில் தனக்கு எத்தனை இன்னல்கள், கஷ்டங்கள் வந்தபோதிலும் நேர்மை தவறாமல் நடந்து கொண்டவர்.

இந்த பூமியில் மனிதராக பிறப்பவர் எப்படி வாழ வேண்டும்? என்பதற்கான உதாரணமாகவும், ஆட்சியை நடத்தும் ஒரு மன்னன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதற்கு உதாரணமாகவும் வாழ்ந்து காட்டியவர் தான் ராமபிரான்.
அது சரி. இவ்ளோ படிச்சாச்சு. இன்னும் தலைப்பு வரலயே என்கிறீர்களா…? அதையும் தான் பார்த்து விடுவோமே. ராமபிரான் எதற்காக நவமி திதியில் பிறந்தார் என்று தெரியுமா?
பொதுவாக அஷ்டமி திதி அன்றும், நவமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் ஒருநாள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டன.
விஷ்ணுபகவான் அவைகளுக்கு ஆறுதல் அளித்தார். உங்கள் இருவரையும் போற்றக்கூடிய நாள் வரும், அதுவரை நீங்கள் இருவரும் காத்திருக்க வேண்டும் என்று கூறினார். இதன் படியே அஷ்டமி திதி அன்று எம்பெருமான் கிருஷ்ணர் அவதாரத்தையும், நவமி திதி அன்று ராமர் அவதாரத்தையும் எடுத்தார்.
இதன் அடிப்படையில் நாம் எல்லோரும் கோகுல அஷ்டமியும், ராம நவமியும், அஷ்டமி, நவமி திதியில் கொண்டாடி வருகின்றோம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



