வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மகத்தான பண்டிகை…. நாடெங்கிலும் களைகட்டும் தீபாவளி…!

By Sankar Velu

Published:

இன்று (31.10.2024) நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தீபாவளித் திருநாள். அதிகாலையிலேயே சூரிய உதயத்திற்கு முன்பாக எண்ணை தேய்த்து, சீகைக்காய் தலையில் தேய்த்துக் குளிக்க கங்காதேவியை மனமுருக நினைத்தபடி அவளை வீட்டிற்கே வரவழைத்து குளித்து அவளது அருளையும் பெறலாம்.

மகாலட்சுமியை உள்ளன்போடு வேண்டி முறைப்படி பூஜை செய்து புத்தாடை அணிந்து பட்டாசைக் கொளுத்தி மகிழலாம். இந்த செயல்கள் ஒவ்வொன்றும் நம் மனதில் அடுத்த ஆண்டு தீபாவளி வரைக்கும் மனது மறக்காத தீபாவளியாக மாறி விடுகிறது. சொந்த பந்தங்கள் அனைவரையும் நாம் கண்டு கொஞ்சிக் குலாவும் நாள் என்பதும் இந்நாளே.

பல்வேறு ஊர்களில் இருந்தும் சொந்த ஊருக்கு வருவார்கள். தீபாவளிப் பரிசாக இனிப்பைக் கொண்டு வருவார்கள். அவர்கள் பெரியோர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள். அந்த வகையில் ஊரெங்கும் மக்கள் பட்டாசை வெடித்துக் கொண்டாடி தன் மனதில் உள்ள கனத்த சிந்தனைகளை எல்லாம் காற்றில் பறக்க விடும் நன்னாளாக இந்த பொன்னாள் அமைகிறது. இனி தீபாவளியை நாடெங்கும் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்போம்.

தீபாவளி என்றாலே பல கதைகள் சொல்வார்கள். அதில் பொதுவாக சொல்லப்படும் கதை நராகாசூரனை வதம் செய்தது தான். ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலின் கட்டிடப்பணிகள் தீபாவளி தினத்தன்று தொடங்கப்பட்டது. அதனால் அவர்கள் எல்லோரும் தீபாவளி அன்று இரவில் வீடு, ஆலயங்களில் மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளை ஏற்றி வைத்து தீபாவளியை வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள்.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி போரில் எதிரியை வென்ற நாளையே மகாராஷ்டிராவில் தீபாவளி நாளாகக் கொண்டாடுகின்றனர். மேற்கு வங்காளத்தில் தீபாவளி திருவிழா என்றாலே காளி பூஜை தான். அங்கு பல்வேறு இடங்களில் காளியின் சிலையை வைத்து வழிபாடு நடத்தி மக்கள் எல்லோரும் உற்சாகமாகத் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

asoka sivaji
asoka sivaji

குஜராத்தில் தீபாவளியைத் தான் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். புதிய தொழில் தொடங்குவது, புதிய சொத்துகளை வாங்குவது, திருமணம் செய்வது போன்ற பல சுபகாரியங்களை இந்த நாளில் தான் செய்கின்றனர். அதே நேரம் மழை வர வேண்டும் எனறு நம்பிக்கையுடன் வீடுதோறும் தீபங்களை ஏற்றி விடுகின்றனர்.

புத்தமதத்தினர் மற்றும் சமண மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். இவர்களில் புத்த மதத்தினர் அசோக சக்கரவர்த்தி அனைத்தையும் துறந்து சென்று புத்த மதத்திற்கு மாறினார் அல்லவா. அந்த சிறப்புமிக்க நாளையே தீபாவளியாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். அதே போல அந்த நாளை அசோக விஜயதசமி என்றும் அழைக்கின்றனர்.சமணர்களோ மகாவீரர் முக்தி அடைந்த நாளையே தீபாவளி நாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

நாடெங்கிலும் பல்வேறு இனம், மதம், மொழி என வேறுபட்டாலும் இந்தியர் ஒன்றே என ஒன்றுபட்டு வேற்றுமையிலும் ஒற்றுமையைக் கண்டு நாம் தனிச்சிறப்புக்குரியவர்கள் ஆகிறோம். அதே போல நாடெங்கிலும் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு காரணங்களுக்காக தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டாலும் எல்லாம் அந்த ஒரே நாளில் என்று அனைவரும் ஒற்றுமையுடன் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவது தீபாவளிக்கே உரிய தனிச்சிறப்பு.