கிராமங்களில் உள்ள கோவில்களில் கடவுளுக்கு கோவில் கொடைத்திருவிழா நடக்கும்போது பெரிய படையலாக வைத்து இருப்பார்கள். அந்த வாடை வெளியே போய்விடக்கூடாது என்று வேட்டி கட்டி மறைத்துக் கொள்வார்கள். அது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.
‘என்னடா வெறும் சிலையைத் தானே நாம் கடவுளாக வழிபடுகிறோம்? அது எப்படி சாப்பிடும்? இதெல்லாம் நடக்கிறதா? அதை மக்களும் எப்படி நம்புகிறார்கள்’ என சிலர் பிதற்றுவர். அப்படிப்பட்டவர்களுக்கு தெளிவு பிறக்க வைப்பது தான் இந்தக் கதை.
குருவிடம் சிஷ்யன் தன் மனதில் நீண்ட நாளாக இருந்த அந்தக் கேள்வியைக் கேட்கிறான். ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை கடவுள் சாப்பிடுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி சாப்பிட்டால் அது அளவில் குறைய வேண்டுமே? பிறகு நாம் எப்படி பிறருக்கு அதை பிரசாதமாக வழங்க முடியும்?” என்று சிஷ்யன் கேட்டான்.
குரு அதற்கு எதுவும் சொல்லாமல். அவனை உற்றுப் பார்த்தார். அப்புறம் சொன்னார். ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார். அன்றைய உபதேச வகுப்பில், அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு. அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு. குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான். ”சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றிக் கொண்டாயா?” என்றார். ”முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே” என்றான்.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்” கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூறத் துவங்கினான்..” பூர்ண மித பூர்ண மிதம் …” என கூறி முடித்தான். மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார். “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தைக் காட்டு” . பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தைக் காட்டியபடி சொன்னான். “குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதைப் போலவே சொன்னேன்”.
“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?” இதிலிருந்து உள் வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றிக் கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?” சிஷ்யன் குழம்பி விட்டான். குரு தொடர்ந்தார், ‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம்.
கடவுள் சூட்சம நிலையில் இருப்பவன். கடவுளுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே சாப்பிடுகிறான். நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான் கடவுள் சாப்பிட்ட பிரசாதம் அளவில் குறையாமல் உள்ளது. அதை நாம் எல்லோரும் சாப்பிடுகிறோம்.
ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் கடவுள் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை சாப்பிடுகிறோம்’ என்று குரு விளக்கம் அளித்தார். அப்போது தான் சிஷ்யனுக்கு உரைத்தது.