சத்தியத்தைப் பேசுபவர்களிடத்தில் இறைவன் எப்போதும் குடியிருக்கிறார்…! ராமபிரான் அவதரித்தது எப்படி?

By Sankar Velu

Published:

சத்தியம் எப்போதும் நம்மை சோதிக்கும். ஆனால் கைவிடுவதில்லை. எவ்வளவு தான் சோதனை வந்தாலும் அவை எல்லாம் இறைவன் நம்மை பரீட்சித்துப் பார்ப்பதற்காகத் தான் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். துணிந்து நாம் சத்தியத்தின் வழியில் சென்று முன்னேற வேண்டும்.

அப்போது தான் இறைவன் நம்மிடம் இணங்கி வருவார். இந்த இனிய நாளான மார்கழி 14 (30.12.2022) அன்று மாணிக்கவாசகர், ஆண்டாள் பாடிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.

காதார் குழையாட என்று தொடங்குகிறது இன்றைய பாடல்.

Markali 14
Markali 14

மாணிக்கவாசக சுவாமிகள் என்ன சொல்கிறார் என்றால் இறைவனைப் பற்றி ஏகப்பட்ட விஷயங்களை நமக்கு சொல்கிறார். பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெயவளை தன் பாதத் திறம்பாடி என்று சொல்கிறார்.

அந்தத் திறத்தையும் பாடி நாம போற்ற வேண்டும். இறைவனுக்கு தாயுமானவர் என்ற ஒரு பெயர் உண்டு. நம்மை வளர்த்தெடுத்த தாய் அவர் தான். தாயான உள்ளத்தோடு இறைவன் ஆட்கொள்கிறார்.

தந்தையான இறைவன் ஒரு சமயம் தாயும் ஆனார். அதனால் தான் தாயுமானவர் என்று ஒரு பெயர் உண்டு.

திருச்சியில் தாயுமான சுவாமிகள் எழுந்தருளி அருள்புரிகிறார். ஆனந்தத்தை அள்ளித் தரும் மூர்த்தி. ரத்னாவதி என்ற பெண் காவிரிபூம்பட்டினத்தில் இருந்து கல்யாணமாகி திருச்சிக்கு வந்து இருக்கிறார். அங்கு தனது கணவரோடு வாழ்க்கை நடத்தி வந்தார்.

அவருக்கு தாயுமான சுவாமிகள் மீது அலாதி பற்று. அங்குள்ள கோவிலுக்குச் சென்று தொண்டு செய்வதே இவர் தன் அன்றாட கடமையாகக் கருதினார். கணவர் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்குப் பயணம் போய் விடுவார்.

இப்போ தன்னோட உதவிக்கு ஆள் வேணுமே என தாயாருக்குக் கடிதம் எழுதுகிறாள். அவர் இருப்பதோ காவிரி பூம்பட்டினம். தற்போது இதைப் பூம்புகார் என்கிறோம்.

அங்கிருந்து மகளுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு நடந்தே திருச்சி வரை வந்தார். அங்கு வந்தால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. என்ன செய்வது என்றே தாய்க்கு தெரியவில்லை. வெள்ளம் வடியட்டும் என்று காத்திருக்கிறார். இந்தக்கரையில் மகளுக்குப் பிரசவ வலி வந்துவிட்டது.

பெருமானே…கணவரும் இப்போ இங்க இல்ல…தாயும் இன்னும் வரல…உன்னைத் தான் தாயாக நினைத்துக் கும்பிட்டு வருகிறேன். நீ தான் அருள்புரிய வேண்டும் என தாயுமானவரிடம் முறையிட்டார். தந்தையாக இருந்த பெருமான் தாயாக மாறி வருகிறார். பிரசவம் பார்க்க உடன் அம்பிகையாக வருகிறார்.

ரத்னாவதியின் தாயார் உருவத்திலேயே வருகிறார். ஏம்மா இவ்ளோ தாமதம் என்கிறார் ரத்னாவதி. சுவாமி தான் என்று அவருக்குத் தெரியவில்லை. உடனே அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்து அந்தக்குழந்தையை தனது குழந்தையாக வளர்க்கிறார்.

Thayumanavar
Thayumanavar

கொஞ்ச நாள் கழித்து வெள்ளம் வடிந்ததும் தாய் வருகிறார். இப்போது ரத்னாவதி குழம்பிப் போகிறாள். அப்படின்னா அது யாரு என பார்க்கிறாள். சுவாமி சொல்கிறார். நானும் தாய் தான். உன் உடலுக்கு அவர் தாய். நான் உன் ஆன்மாவுக்குத் தாய் என்கிறார்.

என்னை நீ அம்மா என்றழைத்ததால் தாயாக வந்தேன். நீயும் உன் பிள்ளையும், கணவரும் சிறப்பாக வாழக்கடவது. என்றும் உன்னைப் போல உள்ளவருக்கு நான் தாயாகவே இருப்பேன் என்கிறார்.

மாணிக்கவாசக சுவாமிகள் ஒரு தாயாக இருந்து என்னை ஆட்கொண்ட பெருமானை நான் எப்படி பாடுவேன். அந்தத் திறனையும் சேர்த்துத் தான் பாடுகிறேன் என்கிறார்.

ஆண்டாள் நாச்சியார் இன்றைய பாடலில் உங்கள் புறக்கடைத் தோட்டத்து என்று ஆரம்பிக்கிறார்.

Aandal 14
Aandal 14

இந்தப் பாடலில் ஆண்டாள் தனது தோழியிடம் இவ்வாறு சொல்கிறாள். நேற்று என்னை எழுப்புகிறேன் என்று சொன்னாய் அல்லவா..? அந்த சொன்ன சொல்லை நீ மறந்து விட்டாயே…இது நியாயமா..? என கேட்கிறார். சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர்களிடம் இறைவன் இணங்கிப் போவார்.

தசரத சக்கரவர்த்திக்கு இறைவனே குழந்தையாக ராமபிரானாக எழுந்தருள்வார். புத்திரப் பாசத்தினால் தான் தசரதசக்கரவர்த்தி மாண்டு போனார் என உலகமே நினைத்தது. ஆனால் வாலியின் மோட்சத்தின் போது வாலி ராமருக்கே விளக்குகிறார்.

அவர் உங்க அப்பா எதனால மாண்டார்னு தெரியுமா? அது புத்திர சோகம் இல்லை. வாய்மையும், மரபையும் காக்க தன் உயிர் துறந்த வள்ளல் அவர். கைகேயிக்கு 2 வரம் கொடுத்தார். ராமன் காட்டுக்குப் போகணும். பரதன் நாடாளணும்.

இதுல தசரதன காட்டுக்குப் போகக்கூடாது…நாட்டுல இருக்கணும்னும் எதுவுமே இல்ல. தசரத சக்கரவர்த்தி எதுக்காக பட்டாபிஷேகத்துக்கு ஏற்பாடு பண்றாரு? மகனிடம் ராஜ்ஜியத்தைக் கொடுத்துவிட்டு தான் கானகம் சென்று தவம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

ராமர் காட்டுக்குப் போகும் போது சீதா, இலட்சுமணன் இருவரும் போகத் தானே செய்தார்கள். தசரதன் மட்டும் ஏன் போகவில்லை என்று உணர வேண்டும். அவர் அப்படி போயிருந்தால் புத்திர சோகம் வந்துருக்காது. இறந்து இருக்கவும் மாட்டார்.

மனு தர்மம் என்ன சொல்கிறது என்றால் மூத்தவனுக்குத் தான் பட்டம் என்று ஒரு நியதி உள்ளது. பரதனுக்குப் பட்டம் என்றால் நியதியைக் காப்பாற்ற முடியாது. மனுதர்ம நியதியைக் காப்பாற்றினால் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற முடியாது.

இந்த இரண்டுக்கும் நடுவில் சிக்கிய அவர் கடைசியில் சத்தியம் தான் உயர்ந்தது…தன் நிலையை மாற்ற முடியாது என்று அதன் வழியில் நடக்கிறார். இதனால் இறைவன் அவருக்கே மகனாக வந்து பிறக்கிறார்.

சத்தியத்தைக் காப்பாற்றுபவர்கள் இடத்தில் தான் கண்ணனும் வந்தருள்வார்.