பெரியவங்க கால்ல விழுறது, கோவில்ல சாஷடாங்கமா நமாஸ்காரம்… இதெல்லாம் தேவையான்னு நினைக்கிறீங்களா?

By Sankar Velu

Published:

ஒரு நல்லது நடந்தாலோ அல்லது நல்ல காரியமாப் போனாலோ அந்தக் காலத்தில் இருந்தே பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கச் சொல்லுவாங்க. ஆனா ஏதோ சம்பிரதாயம்னு தான் நினைப்பாங்க. அது எதுக்குன்னு பலருக்கும் தெரியாது. என்னன்னு பார்க்கலாமா…

ஆசீர்வாதம் 

ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். அவர்களின் ஆசி கூடுதல் சிறப்பு என்று சொல்வார்கள்.

காலில் விழும் கலாச்சாரம்

எதற்கெடுத்தாலும் காலில் விழுறாங்க. இந்தக் காலில் விழும் கலாச்சாரம் இன்னும் ஒழியலையான்னு கேட்பாங்க. எல்லாத்துக்கும் காரணம் இருக்கு. கூழைக்கும்பிடு தான் போடக்கூடாது. காலைத் தொட்டு வணங்குவதில் கலாச்சார அடிப்படையும் உண்டு, விஞ்ஞான அடிப்படையும் உண்டு. கலாச்சாரம் என்று பார்த்தால், மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்று சொல்லலாம்.

சக்தி அதிகரிக்கும்

பெரியவர்கள், குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கே முழு மூலக்காரணமாக இருந்தவர்கள் அவர்கள் தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாதத்தை தொட்டு வணங்குகிறோம். பெரியோர்கள், வயதானவர்களின் காலில் விழுந்து ஆசி பெறும் போது நம்மிடம் சக்தி அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆசீர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது.

சக்தி

நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் நடக்கிறது என்று விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். அதைப் பயன்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது தான் காலில் விழும் பழக்கம். ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது, அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறுகிறோம் எனில், அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது. காலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது.

மேலும் ஆசி வழங்கும் போது சொல்லும் வார்த்தைகளில் அதிக சக்தி இருக்கிறது. மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும் போது அதன் சக்தி அளவிட முடியாதது. பல பாவங்களையும், தோஷங்களையும் கூட அது போக்குகிறது என்பது நம்பிக்கை.

சாஷ்டாங்க நமஸ்காரம்

namaskaram
namaskaram

கோவிலுக்கு சென்றால் தரையில் விழுந்து கடவுளை சாஷ்டாங்க நமஸ்காரம் செய் என்று சொல்வார்கள். அது ஏன்? என்று நீங்கள் யோசித்தது உண்டா? அதற்கும் காரணம் இருக்கிறது. நம் முன்னோர்கள் எதையுமே காரணம் இல்லாமல் செய்து இருக்க மாட்டார்கள்.

நேர்மறை ஆற்றல்

கோவிலில் கடவுள், சக்தி ரூபமாக விளங்குகிறார். அங்கிருக்கும் சக்தியை பெற்றுக் கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை. ஏனென்றால் நமது மனமும், உடலும், அறிவும் சரிவர ஒத்துழைக்காததே இதற்கு காரணம்.

மனக்குழப்பத்தில் இருக்கும் போது தான் அதிகப்படியானோர் கோவிலுக்கு வருகின்றனர். அவ்வாறு மனம் குழப்பத்தில் இருக்கும் போது, மனமும், அறிவும் நேர்மறை ஆற்றலையும், சக்தியையும் பெறும் தன்மையை இழக்கிறது.

உடலுக்கும் கோவிலுக்கும் தொடர்பு

அவ்வாறு, ஏற்கும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும், கோவிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும். அதாவது, கோவிலின் தரையில் அமர வேண்டும் அல்லது உடல் தரையில் படும்படி ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். ஆண்கள் என்றால் தங்கள் உடல் தரையில் படும்படியாக வணங்க வேண்டும்.

பஞ்சாங்க நமஸ்காரம் 

பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அதாவது தலை, கைகள் இரண்டு, முழங்கால் இரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதன் மூலம் நமது உடல் வழியாக கோவிலில் இருக்கும் நேர்மறை ஆற்றலும், சக்தியும் நம் உடலுக்குள் சென்று விடும். ஆசீர்வாதம் பெறுவது மட்டுமல்ல. ஆசீர்வாதம் செய்வதும் உங்களுக்கு சக்தியை கொடுக்கும். நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில் தான் விஷயமே இருக்கிறது.

என்ன சொல்லி வாழ்த்த…?

நம்மிடம் ஒருவர் ஆசி கேட்கும் போது மனப்பூர்வமாக எந்தவொரு நல்ல சொல்லையும் கூறி வாழ்த்தலாம். பெண்களுக்கு ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று வாழ்த்தலாம். இதற்கு தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று பொருள்.

aasirvatham
aasirvatham

ஆண்களுக்கு ‘தீர்க்காயுஷ்மான் பவ’ என வாழ்த்த வேண்டும். இதற்கு நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் அல்லது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்று பொருள். மணமக்களுக்கு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தலாம்.

இப்படிப்பட்ட நல்ல வார்த்தைகளைக் கூறும் போதும், கேட்கும் போதும் சக்தி அதிகரித்து, நல்லதே நடக்கும். பெரியோர்களிடம் ஆசி பெற்றே மார்க்கண்டேயன், ஆஞ்சநேயர் போன்றோர் இன்னும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என ஆன்றோர்கள் கூறுகின்றனர்.