யார் அந்த துர்க்கை அம்மன்? நவ அவதாரங்கள் என்னென்ன?… கடவுளுக்கு ஏன் ஆயுதங்கள்?

By Sankar Velu

Published:

கடவுளைக் கும்பிட்டு நமக்கு என்ன தான் நடக்கிறது? ஒண்ணுமே நடக்கலைன்னு வருத்தப்படுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது என்னன்னு உள்ளே படிக்கும்போது பார்க்கலாம். இப்போது நவராத்திரி பற்றியும், துர்க்கா தேவியின் அவதாரங்கள், அவளது கைகளில் உள்ள ஆயுதங்கள் பற்றியும் பார்ப்போம்.

துர்க்கை அம்மனின் ஒரு வடிவம் தான் பார்வதி தேவி. துர்க்கையின் அவதாரம் தான் காளி தேவி. இவர் தான் நவதுர்காவாகிறார். அதைத் தான் நமக்கு நவராத்திரி ஆகக் கொண்டாடுகிறோம். தான் 9 வடிவங்களாக அவதரிக்கிறாள். அது தான் நமக்கு நவராத்திரி ஆகிறது. இந்த திருவிழாவைத் தான் நாம் தற்போது கோலாகலமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

இந்து புராணத்தில் புகழ்பெற்ற கடவுள் துர்க்கை அம்மன். 10 கைகளிலும் ஆயுதங்கள் ஏந்தி 3 கண்களுடன் சிங்கத்தின் மீது சவாரி செய்து கம்பீரமாகக் காட்சி அளிக்கிறாள். மிகவும் சக்தி வாய்ந்தவள். படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில்களைச் செய்கிறாள்.

துர்க்கா தேவியின் 9 அவதாரங்கள் என்னென்னு தெரியுமா? ஷைல்புத்ரி, பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்த மாதா, காத்யாயனி, காலராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி.

துர்க்கா என்ற வார்த்தைக்கு வெல்ல முடியாத என்று பொருள். பொதுவாகவே அனைவரின் கவலை, துன்பங்களைப் போக்குகிறாள். துர்க்கையை நாம் பார்த்ததும் நமக்கு அவரது பத்து கைகளும், அதில் ஏந்திய ஆயுதங்களும் தான் நினைவுக்கு வரும்.அப்படி என்னென்ன ஆயுதங்கள், அதன் சிறப்புகள் என்னன்னு பார்க்கலாமா…

சங்கு என்பது துரக்கையின் கையில் உள்ள ஆயுதங்களில் ஒன்று. இது அண்டசராசரத்தின் ஆணி வேர் ஒலியான ஓம் என்பதைக் குறிக்கும். அந்த வகையில் எல்லா ஒலிகளையும் விட கடவுளின் ஒலியே சிறந்தது என்பதைக் குறிக்கிறது.

கடவுளின் கையில் இருக்கும் வில்லும், அம்புகளும் ஆற்றலைக் குறிக்கின்றன. தன் கையில் வில்லையும், அம்புகளையும் ஏந்தி நிற்பதால் அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து ஆற்றல்களையும் கட்டுப்படுத்துபவர் அவர் என்பதைக் குறிக்கிறது.

இடியேறு என்ற இந்த ஆயுதம் அம்மனின் திடத்தை அதாவது உறுதியைக் குறிக்கிறது. சந்திக்கிற சவால்கள் எத்தகையதாக இருப்பினும் இடியை மனதில் கொண்டு அதை முறியடிக்க வேண்டும் என்பதைத் தான் இது உணர்த்துகிறது.

துர்க்கை அம்மனின் கையில் பாதி மலர்ந்த தாமரை இருக்கும். இது வெற்றி நிரந்தரமல்ல என்பதைக் குறிக்கிறது. ஏன்னா சேறுக்கு மத்தியில் தாமரை பூப்பதைப் போல, உலகத்தில் உள்ள பல சுகங்களுக்கு மத்தியில் மனித மனது ஆன்மிகத்தை நாடிச் செல்ல வேண்டும் என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது. எவ்வளவு கஷ்டங்கள், இன்னல்கள் வந்தாலும் இறைவனை வழிபடுவதை ஒருபோதும் கைவிடக்கூடாது.

துர்க்கை அம்மனின் கையில் இருக்கும் வாள் அறிவைக் குறிக்கிறது. இதுவே உலகின் மிகப்பெரிய சக்தி. இதனால் தான் வாள் பளபளப்பாகவும், கூர்மையாகவும் இருக்கிறது. துரு பிடிப்பதும் இல்லை.

durga
durga

உலகமே தன் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்பதை தான் சுதர்சன் சக்ரா குறிப்பிடுகிறது. அதனால் தான் அம்மனின் ஆள் காட்டி விரலில் அழகாக சுழல்கிறது. தீய சக்திகளை அளிக்க வந்த துர்க்கை இந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவார் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

துர்க்கையின் கையில் இருக்கும் திரிசூலம் 3 அம்சங்களைக் குறிக்கும். சத்வா, ராஜாஸ், தாமாஸ். அதாவது அமைதியையும், மோட்சத்தையும் அடைய ஒருவர் இந்த 3 அம்சங்களையும் சரிசமமாகக் கொண்டு இருக்க வேண்டும்.

கடவுளின் ஒரு கை எப்போதும் தன் பக்தர்களை ஆசிர்வதிக்கும் அபய முத்திரையைக் கொண்டு இருக்கும். இதுவும் ஒரு ஆயுதம் தான். தன் பக்தர்களின் பயத்தை எப்போதும் காப்பதற்காகவே இப்படி வைத்துள்ளார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.