நவராத்திரியின் 7ம் நாளான இன்று (21.10.2023) முப்பெருந்தேவியரில் 3வதாக விளங்கக்கூடிய கலைமகளை வழிபடக்கூடிய நாள். அவளை சரஸ்வதி என்று நாம் வணங்குகிறோம். அந்த அம்பிகையின் ஒரு ரூபம் சாம்பவி. இவள் நமக்கு ஞானத்தைத் தருகிறாள்.
ஞானம் என்றால் அறிவின் முதிர்ச்சி என்று சொல்லலாம். அறிவு என்றால் அறிந்து வருவது. தெரிந்து வருவது ஞானம். அறிவு என்பது இப்பொருளை இன்னதென்று இன்னொருவர் சொல்ல அதை நாம் அறிந்து கொள்ளக்கூடிய அந்த தெளிவிற்கு அறிவு என்று பெயர்.
ஞானம் என்பது இது எத்தன்மையானது? இது எப்படி இருக்கும்? இது எங்கிருந்து வரும்? இது யாருக்கு ஆகும்? யாருக்கு ஆகாது என நாமே நம்மைப் பண்படுத்தி ஆய்ந்து அறிந்து தெளிந்து அதன்பிறகு அடைவதற்கு ஞானம்.
அந்த ஞானத்தின் சொரூபமாக விளங்குவதால் தான் அம்பிகைக்கு ஞானசொரூபினி என்று பெயர். ஞானத்தின் பிம்பமாகத் தான் அம்பிகையின் வடிவத்தையே நமக்குக் காட்டியிருக்காங்க. அப்படிப்பட்ட அற்புதமான நாயகியை இன்று நாம் வழிபடுகிறோம்.
சாம்பவி என்ற திருநாமத்துடன் இன்று நமக்குக் காட்சி தருகிறாள். இவள் கையில் வீணை வைத்திருக்கிறாள். அப்படி இருந்தாலே அது சரஸ்வதியின் ரூபம். இவள் கல்வி, ஞானம் தரக்கூடியவள். குண்டலினி யோகத்தில் அகக்கண்ணைத் திறக்கக்கூடிய ஒரு பயிற்சி இருக்கு. நமக்கு 3வதாக உள்ள கண் தான் அது. அது வெளியே தெரியாமல் இருப்பதால் தான் அகக்கண் என்று பெயர் வைத்தார்கள்.
அந்த மூன்றாவதாக இருக்கக்கூடிய அகக்கண் ஒவ்வொரு மனிதருடைய ஆதாரத்தைக் கடந்தது. ஒருவர் குண்டலினி யோகத்தை முயற்சிக்கிறார். அந்த யோகநிலையில் ஒவ்வொன்றாகக் கடந்து வருகிறார். நாளாக நாளாக அந்த யோகநிலைக்குக் கை கொடுக்கக்கூடிய தேவியாக சாம்பவி விளங்குகிறாள்.
அவருடைய அகக்கண் திறப்பதற்கும் காரணமான தேவியாக இந்த சாம்பவி விளங்குகிறாள். அதனால் தான் சாம்பவி என்றாலே அகக்கண்ணுக்கு உரிய தேவி என்று நாம் சொல்கிறோம்.
அது சரிங்க. நமக்கு தான் புறத்துல இரண்டு கண் இருக்கே. அகத்துல கண் இருந்து என்ன பண்ணப் போறோம்? உள்ளுக்குள்ள உறுப்புகளையா பார்க்கப் போறோம்னா அது அப்படி கிடையாது. அதைப் பார்த்தா நாம பயந்து போயிடுவோம். அதனால தான் கடவுளே நம்மை வெளியே மட்டும் பார்க்குற மாதிரி படைத்து இருக்கிறார்.
ஆன்மாவைப் பார்க்கக்கூடிய கண் தான் அகக்கண். நாம் ஒவ்வொருவருக்கும் நமது உயிர் எங்கே இருக்குன்னு கண்ணுக்குத் தெரியாது. ஆனா அந்த உயிரையும் தாண்டி அதை இயக்கும் சக்தியாக விளங்குவது ஆன்மா.
நம்மை யார் என அறிந்து கொள்வதற்கு. இந்த உடம்பு எப்படி வந்தது? இது தானே வந்ததா? இல்லை. ஒருவன் தந்து வந்ததா? இந்த உடம்பைத் தந்தவன் யார்? அவனை அறிந்தவர்கள் யார்? அவர்கள் காட்டிய வழியில் நாம் போகலாமா? அப்படிப் போனால் நாம் இறைவனை அடைய முடியுமா? இப்படி பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
கேள்விகள் கேட்கலாம். ஆனால் விடையை எங்கிருந்து தேடுவது? நாம் தான் தேடணும். இன்னொருவர் தேடிக் கண்டுபிடித்த விடை நமக்கான விடையாக இருக்காது. நமக்குப் பசிக்கிறதுன்னா நம்ம தான் சாப்பிடணும். இன்னொருவர் சாப்பிட்டு விட்டு அவர் அந்த ருசியைப் பற்றி விவரித்து பேசினால் நமக்குப் பசி தீருமா? தீரவே தீராது. அதனால் அதை விவரிப்பதோடு மட்டுமல்லாமல் அதை அனுபவமாக ஆக்கிக் கொண்டால் தான் பசி தீரும்.
பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் அனுபவத்தில் சொன்னதை நமது அனுபவமாக ஏற்றுக்கொண்டு அதை நாம் கடைபிடிக்க ஆரம்பிக்க வேண்டும். இப்படி செய்தால் தான் அந்த 3வது கண் திறக்கும். இதற்கு இந்த சாம்பவி தேவியை நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
சண்ட முண்டனோடு போர் செய்யக்கூடிய தேவியாக அம்பாள் இன்று எழுந்தருள்கிறார். இன்று தாழம்பூ, தும்பைப் பூக்களால் வழிபாடு செய்யலாம். எலுமிச்சை சாதம், பேரீச்சம்பழம், கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியமாக வைத்துக் கொள்ளலாம்.
சரஸ்வதிக்குரிய துதியான சகலகலாவல்லிமாலையைப் பாடி பிரார்த்திக்கலாம். பெண்கள் கணவரைப் பற்றி பிறரிடம் குறை சொல்வது தவறு. இதைக் கேட்கும் பிறரும் அதை ஆமோதிப்பது போல தங்கள் கணவரைக் குறை சொல்வர். ஆனால் தனியாகப் போய் அவர்களைக் கேட்டால் அவளே அவள் புருஷனைப் பற்றிக் குறை சொல்கிறாள்.
நான் கணவரைப் பற்றி பெருமையாகப் பேசினால் அதைப் பார்த்து அவள் கண்போட்டு விடுவாள் என்று சொல்கிறார்கள். இது அறியாமையின் உச்சம். தங்களைத் தாங்களே குறை சொல்லக்கூடாது.
அப்படி யாராவது குறை சொன்னால் அவங்களுக்கு நாம் தான் பக்குவமாக யோசனை சொல்ல வேண்டும். இப்படி சொன்னால் அவர்களும் யாரையும் குறைசொல்ல மாட்டார்கள். அதே போல் பெண்கள் இன்னொருவர் மத்தியில் குடும்ப விஷயங்களைக் குறை சொன்னால் அதைக் கேட்கும் நாமும் உம் கொட்டக்கூடாது.
மாறாக நாம் உண்மையைப் பேசி அவர்களைத் திருத்தப் பார்க்க வேண்டும். நல்லதையேப் பேசப் பேச அது இன்றைக்கு நடக்காவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் நிச்சயம் நடக்கும் என்பதை மனதில் உறுதியாகக் கொண்டு அதன்படி பின்பற்றி வரவேண்டும்.