நம்ம வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் நாம் கோட்டை விட்டு விடுகிறோம். எதை வெளியில் சொல்ல வேண்டுமோ, அதைத்தான் சொல்ல வேண்டும். எதை சொல்லக்கூடாதோ அதை வெளியில் சொல்லக்கூடாது. இது தெரியாமல் நாம் எல்லாவற்றையும் நான் ஓபன் டைப் என்று வெளியில் சொல்லி விட்டு வசமாக மாட்டிக் கொள்கிறோம். அவர் எனது நெருங்கிய நண்பர். இவர் காதலி. இவர் மனைவி. வீட்ல உள்ளவங்கதானே.
அண்ணன், தம்பி தானே. அக்கா, தங்கை தானே. அப்பா, அம்மா தானே. இதெல்லாம் சொல்வதில் தவறு ஏதும் இல்லையே என்றுதான் நாம் பேசுவோம். பல விஷயங்களையும் பேசுவோம். உண்மையே பேசிய அரிச்சந்திரன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டான்? நாம் அவனைப் போல இருக்க முடியாது. ஆனாலும் சொல்லக்கூடாத விஷயங்களில் பொய் சொல்லி விடுகிறோம். எதைச் சொல்லக்கூடாதோ அதை சொல்லி விட்டு வீண் வம்பில் மாட்டிக் கொள்கிறோம். அந்தவகையில் இந்து தர்ம சாஸ்திரம் சில விஷயங்களை வெளியே சொல்லக்கூடாது என்று லிஸ்ட் போட்டுள்ளது. பார்க்கலாமா…
இந்து தர்ம சாஸ்திரப்படி நாம சில விஷயங்களை ரகசியமா வைக்கணுமாம். அதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கான்னு நமக்கே ஆச்சரியமாக இருக்கும். முதல்ல தன்னோட வயசை சொல்லக்கூடாதாம். அடுத்து பணம் கொடுப்பது, வாங்குவதுன்னு எதையும் யாரிடமும் சொல்லக்கூடாது. வீட்டுல நடக்குற சண்டை, சச்சரவுகளையும் வெளியே சொல்லக்கூடாதாம்.
மருந்துகளில் சேர்க்கப்படும் பொருள்கள் குறிப்பாக மூலிகைகளை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாதாம். கணவன், மனைவியின் காம அனுபவங்களையும் சொல்லக்கூடாதாம். அடுத்ததாக தான் செய்யும் தான தருமங்களைப் பற்றி வெளியே சொல்லித் தம்பட்டம் அடிக்கக் கூடாதாம். அதே போல தனக்குக் கிடைத்த மற்றும் கிடைக்கப் போற புகழ் மற்றும் சந்தித்த அவமானங்கள் மற்றும் பயன்படுத்திய மந்திரம் என எதையும் வெளியே சொல்லிடாதீங்க.