தீபாவளிப்பண்டிகை இன்னும் சில தினங்களில் வருகிறது. இதனால் இப்போது இருந்தே கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஜவுளிக்கடை, பட்டாசுக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அதற்கு சற்றும் சளைக்காமல் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்களின் முகத்தில் சந்தோஷம் நிரம்பி வழிகிறது. தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறை என்பதால் இப்போது இருந்தே கொண்டாடத் தயாராகி விட்டனர். அது சரி. தீபாவளிக்கு இன்னோரு பேரு இருக்கு… அது என்னன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
நரக சதுர்த்தசி. இது தான் தீபாவளிக்கு இன்னோரு பேரு. அதுக்கான ஒரு சின்னக்கதையைப் பார்ப்போம். தேவர்களை கொடுமை செய்தான் அரக்கன் நரகாசுரன். அவனைப் பற்றி விஷ்ணுவிடம் முறையிட, அவர் மனைவி சத்யபாமா உதவியுடன், அரக்கனை வதம் செய்த நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். இது பற்றி தெரிந்திருக்கும்.
தீபாவளியின் நிஜ பெயர் நரக சதுர்த்தசி. வடமாநிலங்களில் இதை பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர். நரகாசுரனை கொன்றதால் மட்டுமல்ல, நரகத்தை தவிர்த்து சொர்க்கம் செல்ல விரதம் அனுஷ்டிக்கும் நாள் என்பதாலும், நரக சதுர்த்தசி என பெயர் வந்தது.
அது என்ன சதுர்த்தசி என்று கேட்கிறீர்களா? அதற்கும் விளக்கம் தருகிறோம். காலண்டரை பாருங்கள். பவுர்ணமி அல்லது அமாவாசையை அடுத்து வரும் நாள் பெயர் பிரதமை அதற்கு மறுநாள் துவிதியை. இப்படியே வரிசையாகப் போய், 14ம் நாள் சதுர்த்தசி என குறிப்பிடப்பட்டிருக்கும். பிரதமை என்றால், நம்பர் – 1 என்று பொருள். துவிதியை என்றால் இரண்டு. இது போல் சதுர்த்தசி 14 வரும்.
சதுர்த்தசி திதியன்று, அதாவது அமாவாசைக்கு முந்திய நாள், கொல்லப்பட்டான் நரகாசுரன். அவனது மரண நாளை, நரக சதுர்த்தசி என்பர். பஞ்சாங்கங்களிலும், சில காலண்டர்களிலும் தீபாவளிக்கு முந்திய நாளை, நரக சதுர்த்தசி என்றே குறித்திருப்பர்.இதுக்கான கதை இதுதான்…
தீர்க்கதமஸ் என்ற முனிவர் மனைவி, குழந்தைகளோடு காட்டில் தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவர்களை மிருகங்கள், விஷ பூச்சிகள் தொந்தரவு செய்தன. அரக்கர்களும் துன்பம் செய்தனர். இதையெல்லாம் மீறி, கடவுளை கண்டே தீருவோம் வைராக்கியத்துடன் தவத்தை தொடர்ந்தனர்.
ஒருமுறை முனிவர் சனாதனர் அங்கு வந்தார். அவரிடம், ‘துன்பம் தீர்த்தான் கடவுளை வேண்டி தவமிருக்கிறோம். ஆனால், அதற்கும் இந்தக் காட்டில் கிடந்து துன்பப்பட வேண்டியிருக்கிறது. இது குழப்பம் தருகிறது. துன்பத்திற்கு தீர்வும் துன்பம் தானா… என் சந்தேகத்தை தீருங்கள்…’ என்றார் தீர்த்தமஸ்.
அதற்கு, ‘கடவுளின் அருள் பெற தவம் முதலான வழிபாடுகள் தேவையில்லை. எண்ணெய் தேய்த்து, கங்கை, யமுனை உள்ளிட்ட தீர்த்தங்களில் நீராடி, புத்தாடை அணிந்து, தீபமேற்றி, இனிப்பு சாப்பிட்டு வழிபட்டாலே அருள் கிடைக்கும்…
நரகசதுர்த்தசியன்று காலை சூரிய உதயத்துக்கு முன், கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். உங்கள் ஆஸ்ரமத்தில் இருந்தபடியே, ‘கங்கையே வா…’ என அழைத்தாலும், உங்கள் பாத்திரத்தில் இருக்கும் நீரில் கூட, ஆவாஹனம் ஆகி விடுவாள் கங்கை. ஏனெனில், எல்லாருக்கும் புனித தீர்த்தங்களுக்கு செல்ல வசதியிருக்காது…
நீங்கள் தேய்க்கும் எண்ணெயில் லட்சுமி, அரப்பு பொடியில் சரஸ்வதி, குளிக்கும் நீரில் கங்கை, பூசும் சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் பார்வதி, பூவில் முன்னோரான சுமங்கலிகள், புத்தாடையில் விஷ்ணு, இனிப்பில் அமிர்த கலசம், மருந்தில் தன்வந்திரி, தீபத்தில் சிவன் ஆகியோர் எழுந்தருளுவர்…
ஆக எல்லா தெய்வங்களையும் வரவழைக்க, சுலபமான ஒரு வழி இருக்க, ஏன் காட்டில் அல்லல்படுகிறீர்கள்…?’ என்றார் சனாதனர்.
விரதம் கடவுளின் அருளை மட்டுமல்ல, முன்னோரின் ஆசியையும் பெற்றுத்தரும். அன்று எமதர்மராஜாவை எண்ணி தீபம் ஏற்றினால், இருளில் தவிக்கும் முன்னோர் சொர்க்கத்துக்கு செல்வர் என்பது ஐதீகம்.