தீப ஆவளி திருநாள். தீப ஒளியிலே இறைவனை வழிபடக்கூடிய நாள். தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இறைவனை வழிபடக்கூடிய நாளாகவும், விரத நாளாகவும் நமது முன்னோர்கள் வழிபடக் கற்றுக் கொடுத்த அழகான பண்டிகை நாள்.
மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் தரக்கூடிய ஒரு நல்ல பண்டிகை தீபாவளி. இது கேதார கௌரியோட விரத நாளாகவும் இருக்கு. இதை சிவபெருமானை வழிபடக்கூடிய விரதநாளாக எடுத்துக் கொள்ளலாம்.
31.10.2024 அன்று தீபாவளி வருகிறது. அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் இந்தப் பண்டிகையைக் கொண்டாடி விட வேண்டும். தீபாவளி அன்று மட்டும் விடியற்காலையில் பொழுது விடிவதற்குள் அந்த பிரம்ம முகூர்த்த காலத்தில் தான் ஒவ்வொரு பொருள்களிலும் ஒவ்வொரு தெய்வங்களும் வாசம் பண்றாங்க. அன்று மகாலட்சுமி எண்ணையிலும், சுடுதண்ணீரில் கங்காவும் வாசம் பண்றாங்க.
அதனால் அன்று தலைக்கு எண்ணைத் தேய்த்து குளிக்கிற பழக்கத்தைக் கொண்டு வந்தாங்க. இந்த நேரத்திற்குள் இந்தந்த தெய்வங்கள் இதுல இருக்கு. அதை நாம் பயன்படுத்திக்கணும் என்பதற்காகத் தான் அன்று எண்ணைத் தேய்த்துக் குளிக்கிற வழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டு வந்தாங்க. அமாவாசையாக இருந்தாலும் அன்று நாம் எண்ணைத் தேய்த்துக் குளிக்கலாம். வீட்டில் உள்ள பெரியவர்களை வைத்து தலைக்கு எண்ணை வைத்து சீகைக்காய் பொடி தேய்த்துக் குளிக்க வேண்டும்.
காலையில் புத்தாடைகளை வைத்து சாமி கும்பிட்டு விட்டும் உடுத்திக் கொள்ளலாம். நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றலாம். சிலர் ‘ஓம்’ வருவதைப் போலவும் ஏற்றுவார்கள். உங்களுக்கு எது விருப்பமோ அப்படி செய்யுங்கள். 51 விளக்குகளும் ஏற்றலாம்.
60, 100 எண்ணிக்கை அல்லது 15 அல்லது 6 விளக்குகளானாலும் வைத்துக் கொள்ளலாம். சிவபெருமானை லிங்கமாக வைத்தால் காலையிலேயே சின்ன அபிஷேகம் பண்ணிடுங்க. மலர்கள் தூவி பூஜை செய்யலாம். படையலுக்கு எல்லா பலகாரங்களும் வைக்கலாம். அதிரசம், முறுக்கு, வடை, சுசியம்னு வைக்கலாம்.
சாமிக்குத் தீபம் ஏற்றிவிட்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அந்த ஜோதியில் நாம் சிவபெருமானை வழிபட வேண்டும். அன்று அம்பிகைக்கு உண்டான பதிகம், சிவபுராணம், முருகனின் திருப்புகழ்னு பாராயணம் படிக்கலாம். சுவாமிக்குத் தீப தூப ஆராதனைகள் காட்டி வழிபடுங்க. பட்டாசு வெடித்து பலகாரம் சாப்பிடுங்க.
அவ்ளோ தான். அன்று உங்களால் முடிந்தளவுக்கு முடியாதவர்களுக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுங்க. அக்கம்பக்கத்துல உள்ளவங்களோடு நல்ல உறவோடு இருங்க. காலை 8 மணியில் இருந்து 9.30 மணி வரை இலை போட்டு படையலிட்டு சுவாமியை வழிபடலாம். இந்த நாளில் அன்னை பார்வதி சிவபெருமானை வேண்டி கேதாரம் என்ற தலத்தில் நோன்பு இருந்து தன்னில் சரிபாதியாக சிவனைப் பெற்றது இந்த நாளில் தான்.
இதுதான் கேதார கௌரி நோன்பு. ஆண்டுதோறும் தொடர முடிந்தால் இப்படி நோன்பு இருக்கலாம். கணவர் மனைவி ஒற்றுமை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவதற்கு இந்த நோன்பு அவசியம். வழக்கம் உள்ளவர்கள் விட்டுடாதீங்க. 31.10.2024 அன்று மாலை 4.29 மணிக்கு அமாவாசை ஆரம்பிக்கிறது.
1.11.2024 அன்று மாலை 6.25 மணி வரை அமாவாசை உள்ளது. அதனால் கேதார கௌரி விரதம் இருப்பவர்கள் 31.10.2024 அன்று காலை 10.40 மணி முதல் 1.20 மணி வரை நோன்பை ஆரம்பிக்கலாம். 1.11.2024 அன்று காலை 8.30 மணி முதல் 10.20 மணி வரை பாரணை செய்து கொள்ளலாம். அப்போது நாம் நோன்பை நிறைவு செய்து கொள்ளலாம்.
இதற்கு சதுர்த்தசி நோன்பு என்றும் சொல்வார்கள். சிலர் அமாவாசை வந்ததும் இந்த நோன்பை ஆரம்பிப்பார்கள். அவங்க 1.11.2024 காலை 9.15 மணிக்கு ஆரம்பித்து 10.20க்கு நோன்பைத் தொடங்கலாம். 2.11.2024 அன்று காலை 7.35 மணி முதல் 8.55 மணிக்குள் நோன்பை முடித்துக் கொள்ளலாம்.
தீபாவளி அன்று மாலையில் லட்சுமி குபேர பூஜை செய்யலாம். 21 நைவேத்திய பொருள்கள் வைத்து விரதத்தை நிறைவு செய்வார்கள். எல்லாம் வைக்க முடியாதவர்கள் அதிரசம் மட்டுமாவது வைங்க. படையலிட்டு விரதம் பூர்த்தி செய்வது தான் பாரணை.