மகிஷாசுரனை வதம் செய்த நிகழ்வைத் தான் விஜயதசமி என்றும் தசரா என்றும் சொல்கின்றனர்.தமிழகத்திலேயே இந்த ஒரு ஊரில் தான் தசராவை ரொம்பவே சிறப்பாகக் கொண்டாடி வர்றாங்க. சுமார் 10 லட்சம் நபர்கள் ஒரு சின்ன ஊரில் திரண்டு தசராவைக் கொண்டாடி வருகின்றனர்.
குலசை தசரா திருவிழா உலகப்புகழ்பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தப்படியாக புகழ்பெற்று விளங்குகிறது. இந்த சின்ன கிராமம் உலக அளவில் புகழ் பெற்றது எப்படி? தசரா திருவிழா மற்றும் அங்குள்ள முத்தாரம்மன் கோவிலின் சிறப்புகள் என்னென்ன என்று பார்ப்போமா…
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரிக்குப் போற வழியில் உள்ள சின்ன கிராமம் தான் குலசேகரப்பட்டினம். முற்காலத்தில் பாண்டிய நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகவும், பெரிய வணிகஸ்தலமாகவும் விளங்கியது. சங்ககாலத்தில் இந்த ஊரை தென்மறைநாடுன்னு சொல்றாங்க.
பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்த குலசேகர பாண்டியனுக்கு இந்த ஊரில் தான் அம்பாள் காட்சி கொடுத்ததாகச் சொல்வர். அதனால் தான் இந்த ஊருக்கு குலசேகரப்பட்டினம் என்ற பெயர் வந்தது. இங்குள்ள முத்தாரம்மன் கோவில் 3000 ஆண்டுகள் பழமையானது.
இந்த கோவிலில் அம்மையாக முத்தாரம்மனும், அப்பனாக ஞானமூர்த்தீஸ்வரரும் ஒரே பீடத்தில் சுயம்புவாகத் தோன்றி காட்சி அளிக்கின்றனர்.
தசரா தோன்றிய வரலாறு
முன்னொரு காலத்தில் வரமுனி என்ற தபஸ்வி வேள்விகளையும், யாகங்களையும், தவங்களையும் நடத்தி பல கடவுள்களிடம்பல வரங்களைப் பெற்று சக்தி வாய்ந்தவராக இருந்தார். தன்னை மிஞ்சியவர் உலகில் யாருமே இல்லை என்று தலைக்கனத்துடன் யாரையும் மதிக்காமல் இருந்து வந்தார்.
அப்போது முனிவர்களுக்கெல்லாம் மூத்தவரான சிவபெருமானின் பூரண அருளைப் பெற்ற தவமுனி அகத்தியர் கைலாயத்திலிருந்து தென்தமிழகத்தை நோக்கி வருகிறார்.
வர்ற வழியில் வரமுனியோட இருப்பிடத்துக்குப் போயிருக்கிறார். அப்போது அகத்தியரை வரவேற்ற வரமுனி அவருக்கு உபசரிக்காமல், உயரத்தில் குறைந்த அகத்தியரைக் கேலி செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் எருமையாக மாறி அவரிடம் வரும் முனிவர்களை அவமதித்து துன்புறுத்தியுள்ளார்.
இதை அறிந்து கோபப்பட்ட அகத்தியர், வரமுனிக்கு தலைகனம் பிடித்த நீ அடுத்த ஜென்மத்தில் எருமைத்தலையும் மனித உடலும் சேர்ந்த அரக்கனாகப் பிறப்பாய். உன்னை அந்த அம்பாளே அவதாரம் எடுத்து கொடூரமாக வதம் செய்வாள் என்று சாபமிட்டுள்ளார்.
அக்னி பகவானை நோக்கி தவம்
அதே போல ரம்பன் என்ற அரக்கன் அக்னி பகவானை நோக்கி தவம் இருந்துள்ளான். அவனுடைய தவத்தில் மகிழ்நத அக்னி பகவான் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார்.
அதுக்கு அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேணும்னு கேட்டுருக்கான். அக்னி பகவானும் உன் ஆசைப்படியே நடக்கும். நீ எந்தப் பொண்ணை முதல்ல பார்க்குறீயோ அந்தப் பெண் மூலமா உனக்கு சக்தி வாய்ந்த மகன் பிறப்பான் என்கிறார்.
ரொம்ப சந்தோஷத்தோடு தவத்தை முடித்த ரம்பன் வரும் வழியில் ஒரு பெண் காட்டெருமையைப் பார்க்கிறான். பகவான் சொன்னபடியே அந்த எருமைக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தை எருமைத்தலையும் அசுரத்தனமான குணமும் கொண்டு மனித உடலுடன் வரமுனியே குழந்தையாகப் பிறந்தார். அந்தக்குழந்தைக்கு மகிஷன்னு பெயரிட்டு வளர்த்து வந்தார்.
தனது முன்ஜென்மம் பற்றித் தெரிந்து கொண்ட மகிஷன் பிரம்மாவை நோக்கி 10 ஆயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தான். எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது.
ஒரு கன்னிப்பெண்ணால தான் தனக்கு மரணம் ஏற்படணும்னு அந்தப் பெண் எந்தத் தாயின் வயிற்றிலும் பிறந்திருக்கக்கூடாது என்றும் ஒரு வித்தியாசமான வரம் கேட்டு வாங்கினான். மேலும் தவமிருந்து பல வரங்களை வாங்கி யாராலும் அழிக்க முடியாத சக்தியா மாறி மூவுலகையும் அடிமைப்படுத்தி வந்தான்.
மகிஷாசுரனின் அட்டூழியம்
மகிஷாசுரனின் அதர்மத்தையும் அட்டூழியத்தையும் தாங்க முடியாத தேவர்கள் விஷ்ணுபகவானிடம் முறையிட்டனர். அதற்கு விஷ்ணுபகவான் என்னால எதுவும் செய்ய முடியாது. இது ஆதிசக்தியால் மட்டும் தான் முடியும். நீங்க காளிதேவியை நினைச்சு யாகம் நடத்தி அவள் கிட்ட முறையிடுங்கன்னு சொல்லி இருக்கிறார்.
முனிவரும் யாகவேள்விகளை நடத்திருக்காங்க. யாகவேள்விகளில் இருந்து ஒரு முப்பெரும் சக்தி ஒன்றாக இணைந்து லலிதாம்பிகையாய் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த 10வது நாளில் கன்னிப்பெண்ணாக மாறி அன்னை பராசக்தியாக அவதாரம் எடுத்து மகிஷாசுரன்கூட கடுமையாக யுத்தம் செய்து அவனை வதம் செய்த நிகழ்வைத் தான் விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம்.
அன்னை தனது பத்து நாள்களிலும் தன்னோட சக்தியை ஒன்றாக சேர்த்து யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு உருவானாள். அந்த பத்து நாட்களைத் தான் தசரான்னு சொல்றாங்க. தஸ் என்றால் உருது மொழியில் பத்து என்று பொருள். ரா என்றால் தமிழில் இரவு என்று பொருள். பத்து இரவுகளைத் தான் தசரா என்கிறோம்.
பத்து நாள்களையும் தசரா என்று சொல்லி அம்பாளை வழிபட்டு வருகின்றனர். நம்ம ஊரில் நவராத்திரின்னு சொல்லி 9 நாள்களும் வேடம் போட்டு வழிபட்டு வர்றாங்க. முதல் 3 நாள்கள் பார்வதி தேவியையும் அடுத்த 3 நாள்கள் மகாலெட்சுமி தேவியையும் அடுத்த 3 நாள்கள் சரஸ்வதி தேவியையும் வழிபட்டு நவராத்திரியைக் கொண்டாடி வருகிறோம்.
மகிஷாசுரனை வதம் செய்ய அம்பாள் 9 நாள்கள் கொலுவில் இருந்தும் 10வது நாள் மகிஷனை சம்ஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தினியாக மாறியிருக்கிறாள்.
ஊசி மேல் தவம்
9 நாள்களும் அம்மன் ஊசி மேல் நின்று தவம் புரிந்ததால் இந்த நவராத்திரியான 9 நாள்களும் ஊசியால் துணியைத் தைக்க வேண்டாம்னு சொல்வாங்க. இதனால் நவராத்திரியின் 9 நாள்கள் வீடுகளிலும் கோவில்களிலும் கொலு வைத்து சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.
நவராத்திரியின் மற்றொரு சிறப்பம்சம் ஒன்று உண்டு. என்னவென்றால் வழக்கமாக காலையில் சிவனுக்கும் மாலையில் அம்பாளுக்கும் பூஜை செய்வதுண்டு. ஆனால் நவராத்திரி நாள்களில் காலை, மாலை என இரு வேளைகளிலுமே அம்மனுக்குத் தான் பூஜை. பரம்பொருளான சிவபெருமானுக்கே சிவராத்திரின்னு ஒரு நாள் தான் சிறப்பு.
ஆனால் அம்பிகைக்கு நவராத்திரின்னு 9 நாள்களும் சிறப்பு. அப்போது ஆண்சக்தியை விட பெண்சக்தி தான் மேலோங்கி நிற்கும். அந்த நாள்களில் அம்மனை வழிபட்டால் நம்ம நினைக்கிறது கண்டிப்பாக நடக்கும்னு ஒரு ஐதீகம் இருக்கு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தசரா திருவிழா வரும் 5.10.2022 (வியாழக்கிழமை) அன்று வருகிறது.