தீர்த்த நீராடலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் மாசி மகம். மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம். மகத்தில் பிறந்தவர்கள் இந்த உலகத்தையே ஆளும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள்.
ஆண்குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் மாசி மகத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட அவர்கள் நினைத்த வரம் கிடைக்கிறது என்பது ஐதீகம். மகாநட்சத்திரத்தை பித்ருதேவா நட்சத்திரம் என்பர்.
எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும் பித்ருக்களான நம் முன்னோர்களுக்குப் பூஜை செய்த பின் தான் தொடங்க வேண்டும். எனவே அந்த நாளில் பித்ருக்களுக்குப் பூஜை செய்வது சிறந்த பலனைக் கொடுக்கிறது.
முன் ஜென்மத்தில் செய்த அனைத்துப் பாவங்களும், தோஷங்களும் மாசி மகத்தன்று புனித நீராடுவதன் காரணமாக நீங்கி விடுகிறது.
மகம் நட்சத்திரம் என்றாலே மகத்துவம் நிறைந்தது என்று பொருள். பவிஷ்ய புராணத்தில் கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதா மற்றும் சரயு நதிகள் என அனைத்து நதி தேவதைகளும் தங்களுடைய பாவங்களைக் குறைப்பதற்காக சிவபெருமானை வேண்டின.
அப்போது அவர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் உள்ள மகாமக குளத்தில் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று புனித நீராடி உங்களது பாவங்களைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
அதன்படி அனைத்து நதிதேவதைகளும் புனித நீராடி தங்களின் பாவச்சுமைகளைப் போக்கிக் கொண்டனர். அதனால் நாமும் முடிந்தால் அன்றைய தினத்தில் புனித நீராடி நம்முடைய பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.
அவ்வாறு அங்கு செல்ல முடியாதவர்கள் தங்களுடைய ஊருக்கு அருகில் உள்ள நதிக்கரைகளிலும், நீர்நிலைகளிலும் புனித நீராடி தோஷங்களையும், பாவங்களையும் போக்கிக் கொள்ளலாம். அதே போல் முன்னோர்களுக்கு அன்றைய தினம் தர்ப்பணம் செய்வோருக்கும் மிகச்சிறப்பான பலன் கிடைக்கும்.
முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அன்றைய தினம் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டுவதால் பலன் கிடைக்கும். கணவரின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் மாசி மகத்தன்று கிரிவலம் சென்று வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த ஆண்டில் மார்ச் மாதம் 6ம் தேதி (மாசி 22) திங்கள்கிழமை மாசி மகம் வருகிறது. இதே நாளில் பௌர்ணமியும் இணைந்து வருவது கூடுதல் சிறப்பு. இந்த நாளில் புனித நீராடி இறைவனின் அருளைப் பெறுவோம்.