ஐப்பசி மாதம் நடைபெறும் துலா ஸ்நானம் குறித்து பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…
தஞ்சை மாவட்டப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரிந்த விஷயம் துலா ஸ்நானம். மற்றவர்களுக்கு இதுபற்றி அவ்வளவாகத் தெரியாது. ஏன்னா காவிரி கரையில் இருப்பவர்களுக்கு மட்டுமே அது தெரிந்த விஷயம்.
நாம் நீராடி புண்ணியத்தைப் பெறுவதற்காக அநேக நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. கஙகை, யமுனா, காவேரி, சிந்து, நர்மதா, வைகைன்னு பல புண்ணிய நதிகள் உள்ளன. இவற்றில் நீராடினால் நமக்கு புண்ணியம் கிடைக்கும்.
அதனால் தான் நம் முன்னோர்கள் தீர்த்த யாத்திரையை அமைத்தனர். அதாவது புண்ணிய நதிகளில் நீராடி அங்குள்ள கோவில்களில் சென்று இறைவனை வழிபடும் நிகழ்வு தான் தீர்த்த யாத்திரை. ஆனால் இக்காலத்தில் பலருக்கும் இந்த வாய்;ப்பு கிடைப்பதில்லை. அதற்காகத்தான் வருகிறது இந்த துலா ஸ்நானம்.
காவேரியாகிய புண்ணிய நதியில் பலப்பல தீர்த்தங்கள் குறிப்பா கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகள் வந்து நீராடி தங்களது பாவங்களைப் போக்கிக் கொள்ளும் மாதம்தான் இந்த ஐப்பசி. நதிகளே புண்ணியமானவைதான். அது ஏன் இன்னொரு நதியில் போய் புண்ணியத்தைத் தேடி நீராடணுமா?
நாம நம்மோட பாவத்தை நதிகளில் நீராடி விட்டுட்டு வந்துடறோம். அந்த நதிகள் அந்தப் பாவத்தை எங்கு போய் தொலைக்கும்? அதற்கு நிறைய விஷயங்களை கங்கை, யமுனை போன்ற நதிகள் செய்ததாம். அதுல ஒண்ணுதான் காவேரியில் நீராடுவது. இறைவன் காவேரிக்குக் கொடுத்த வரம் இதுதான்.
இந்த ஐப்பசி மாதத்தில் உன்னிடத்தில் வந்து நீராடும் நதிக்கு அதன் பாவங்கள் நீங்கி அவை மீண்டும் அந்தப் புண்ணியத்தைப் பெறும் என்பதுதான் இறைவன் காவேரிக்குக் கொடுத்த வரம்.
இன்றும் கங்கை, யமுனை போன்ற பல புண்ணிய நதிகள் காவேரியில் வந்து நீராடுகிறதாம். இந்த ஐப்பசி மாதத்தில் யார் காவேரியில் நீராடுகிறார்களோ அவர்களுக்கும் கங்கை, யமுனை போன்ற பல புண்ணிய நதிகளில் நீராடிய பலன்கள் வந்து ஒருசேர கிடைக்கும்.
ஐப்பசி மாதத்தில் காவேரியில் நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் கிடைக்கும். அதனால் ஐப்பசி மாதம் முழுவதும் காவேரியில் நீராடலாம். அப்படியும் முடியாதவர்கள் கார்த்திகை 1ம் தேதியாவது காவேரியில் நீராடலாம். அந்த வகையில் இதற்கு முடவன் முழுக்கு என்று பெயர் உண்டு. அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?
முன்னொரு காலத்தில் கால் சரியில்லாத ஒருவர் காவேரியில் புனித நீராட நடந்தே வந்தாராம். அவரால் நடக்க முடியாமல் மெதுவாக சென்றார். ஆனால் அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை 1 வந்து விட்டது. இறைவனிடம் ஆண்டவனே காவேரியில் புனித நீராடணும்னு நடந்தே வந்தேனே. அதற்குள் ஐப்பசி முடிந்து கார்த்திகை 1வந்துவிட்டதே என வருந்தினார்.
அப்போது இறைவன் அவருக்கு கவலைப்படாதே. இந்த நாளிலும் காவேரியில் நீராடினால் அதற்குரிய பலனைத் தருகிறேன் என்று கொடுத்துள்ளார். அதுதான் முடவன் முழுக்கு. காவேரி கரையோரப் பகுதிகளில் உள்ளவர்கள் பேச்சு வழக்காக முடவன் முழுக்குக்காகவாவது காவேரியில் போய் குளிங்கப்பான்னு சொல்வாங்களாம்.
அந்த அற்புதமான நாள் 17.11.2025அன்று வருகிறது. இன்றும் காவேரி கரையோரம் கோவில் கொண்டுள்ள தெய்வங்கள் யாவும் இந்த துலா ஸ்நானத்தை எடுத்துக் கொள்கிறதாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



