வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா…? உப்பு தீபம் ஏற்றும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன…?

By Meena

Published:

வீடுகளில் தீபம் ஏற்றுவது இருளைப் போக்கி நன்மைகளை உண்டாக்கும். தீபங்கள் நமது கர்ம வினைகளை நீக்குகின்றன. தினமும் நம் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டால் மன அமைதி கிடைக்கும். தெய்வ அருள் கிட்டும். தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும் ஆகும்.

தீபம் ஏற்றுவதற்கு பல வகைகள் உள்ளன. நெய் தீபம், மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் ஏற்றும் தீபம், நல்லெண்ணெய் தீபம், மாவினால் விளக்கு செய்து ஏற்றப்படும் தீபம் போன்ற வகைகள் உள்ளன. ஒவ்வொரு தீபம் ஏற்றுவதால் நமக்கு வெவ்வேறு பலன்கள் கிடைக்கும். சமீப காலமாக உப்பு தீபம் ஏற்றப்படுவது பிரபலமாகி கொண்டு வருகிறது. இன்று உப்பு தீபம் ஏற்றுவது எப்படி அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இனிக் காண்போம்.

உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் உப்பு தீபம் ஏற்றினால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். உப்பு தீபம் ஏற்ற உகந்த நாட்கள் வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்கள் ஆகும். மற்ற தினங்களில் உப்பு தீபம் ஏற்றுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். உப்பு தீபம் ஏற்றி வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் உப்பு தீபம் ஏற்றி வழிபட்டால் நோய் விலகும் என்பது நம்பிக்கை.

பௌர்ணமி நாட்களில் உப்பு தீபம் ஏற்றி வழிபடும்போது தொழில் தடை, வருமான தடை, பதவி உயர்வு கிடைப்பதில் இருக்கும் தடைகள் போன்றவை விலகும். மனதில் நினைத்த விஷயம் நடைபெறாமல் தடைபட்டே இருக்கிறது என்று நினைப்பவர்கள் உப்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் 48 நாட்களுக்குள் நினைத்தது நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

உப்பு தீபம் ஏற்றுவதற்கு முதலில் சிறிய தாம்பூல தட்டில் கல் உப்பை பரப்பி அதன் மேல் அகல் விளக்கு ஒன்றை புதிதாக வைத்து இரண்டு பஞ்சு திரி இட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது தான் உப்பு தீபம் ஆகும். உப்பின் மீது எரியும் ஜோதிக்கு சக்தி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் உப்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் காரிய தடை நீங்கி நினைத்தது கை கூடும் நன்மைகள் பெருகும்.