நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று கண்ணதாசன் எழுதிய மனது மறக்காத பழைய பாடல் நெஞ்சில் ஓர்; ஆலயம் படத்தில் வரும். அது போல தான் நம்ம கதையும். நினைத்த உடனே எல்லாம் நடந்து விட வேண்டும். அதற்கான முயற்சிகள் பற்றி கவலை இல்லை. அப்படி நடந்தால் இந்த உலகம் தாங்குமா? நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யார் என்ன நினைத்தாலும் நடந்து விட்டால் இந்த பூமி எப்படி இயங்கும்?
வாழ்க்கையில் நினைத்தது போல் எதுவுமே நடக்கவில்லை என்றால் நமக்கு தலையில் என்ன எழுதியிருக்கோ அது படி தாம்பா நடக்கும் என சிலர் அங்கலாய்ப்பது உண்டு. எல்லாம் அவரவர் விதி என்று எளிதாக சொல்லி விடுவார்கள்.
ஆனால், அந்த விதி என்பது எப்படி வருகிறது. அதை மாற்ற முடியுமா? அல்லது அதில் இருந்து மீள்வதற்கான வழிகள் என்னென்ன என்பதைப் பற்றி பலரும் எண்ணுவதில்லை. உங்கள் சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறார் சிவ பக்தர் குளித்தலை ராமலிங்கம்.
வீட்டில் பூஜை அறையில் சிவன் படத்தை வைக்கலாமா என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் சொல்கிறார்.
அருவ நிலையிலேயே ஜோதியாய் இருக்கிறார் கடவுள். அதைக் காண முடியாது என்பதற்காக அவரே நடராஜராகவும், சிவனாகவும் திருவுருவம் கொண்டு உயிர்களிடத்தில் அன்பை செலுத்துகிறார். அதனால் நாம் அவசியம் பூஜையறையிலேயே சிவபெருமானின் திருவுருவப்படத்தை வைத்துக் கும்பிடலாம்.
சிவலிங்கம் இருக்க வேண்டும். முறையாகத் தீட்சை பெற்று சிவபூஜை பண்ண வேண்டும். அப்படி இல்லை என்றாலும், சிவபெருமானுடைய படங்கள் அம்பாளுடன், விநாயகர், முருகன் என குடும்பத்துடன் இருக்கும். அதே போன்ற படங்களை பூஜையறையில் வைக்கலாம். நடராஜர் படங்களும், சிவபெருமான், அம்பாள் என சேர்ந்த படங்கள் உள்ளன.
சிவத்திருமேனிகளைக் கட்டாயமாக வீட்டில் வைத்துக் கும்பிட வேண்டும். உருவத்திருமேனியைக் கும்பிட வேண்டும். அதை வீட்டில் வைத்து தினமும் வழிபாடு நடத்த வேண்டும். அதன்பிறகு தான் சாப்பிட வேண்டும். அது முறையாகக் குருவினிடத்திலே தீட்சைப் பெற்று முறையாக ஆகம விதிப்படி பூஜை பண்ணுவதுண்டு.
அப்படி இல்லேன்னா சுவாமி படத்தை வீட்டில் வைத்து மலர் கொண்டு பூஜை செய்து தேவாரம், திருவாசகம் பாடிட்டு, கற்பூரம் காட்டி வழிபாடு செய்து சாப்பிடலாம். கட்டாயமாக சிவபெருமான் படத்தைப் பூஜை அறையில் வைக்க வேண்டும். சூரிய ஒளிக்குள் எல்லா ஒளிகளும் அடங்குவது போலே சிவபெருமானின் ஆற்றலுக்குள் எல்லாமே அடங்கி விடும்.
நாம் செய்யும் வினையால் தான் விதி உண்டாகிறது. இந்த வினைப்பயனை கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டும். சாமி கும்பிடும்போது இதன் வீரியமானது கொஞ்சம் குறையும்.
இவ்வாறு குளித்தலை ராமலிங்கம் சொல்கிறார்.